12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: சட்டத் திருத்தத்துக்கு அரசு ஒப்புதல்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்

ravi sankar prasad - 2026

சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கத்துவா, உ.பி., உன்னாவ் ஆகிய இடங்களில் சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து  சிறுமியரைப் பாதுகாக்கும் ‘போக்ஸோ’ சட்டத்தில் கடும் தண்டனைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சிறுமியரை வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க தண்டனையை மேலும் கடுமையாக்கி நிரந்தரச் சட்டம் ஒன்றை சட்ட அமைச்சகம் தயாரித்தது. நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புதிய சட்ட மசோதா, தற்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் கிடைத்ததும் இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிரந்தரச் சட்டத்தின் படி,

* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், அந்த வழக்கு இரண்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்கப்படும். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்பவருக்கு முன்ஜாமின் அளிக்கப்பட மாட்டாது.

* வழக்கின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

* பாலியல் பலாத்கார குற்றத்துக்கான குறைந்த பட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

– என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.