காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும்.
ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28-ஆம் தேதி மூடப்படும். இந்தக் கால கட்டத்தில் 320 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை,சம்பா, தாளடி என முப் போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.
ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட காலத்தில் அணை திறக்கப்படவில்லை. நடப்பாண்டிலும் போதிய நீர் இருப்பு இல்லாததால் உரிய தேதியில் தண்ணீர் திறக்கப் படவில்லை.
இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 69 டி.எம்.சியாகவும் உயர்ந்துள்ளது. இந் நிலையில் இன்று காலை 10 மணி முதல் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 85-வது ஆண்டாக, டெல்டா பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
முதல் கட்டமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அளவு படிப்படியாக மாலை 6 மணிக்குள் 12 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும்.
மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை உரிய தேதியான ஜூன் 12-ஆம் தேதியன்று 15 முறையும், அதற்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்கு பிறகு நடப்பாண்டையும் சேர்த்து 59 முறை தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. மேட்டூர்அணை வரலாற்றில் தற்போது 85-வதுஆண்டாக டெல்டா பாசனத்திற்காக அணை திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கல்லணையை அடுத்த மூன்று நாள்களில் சென்றடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறுவையை இழந்த சோகத்தில் இருந்த டெல்டா விவசாயிகள், இப்போது அணை திறக்கப்பட உள்ளதால் சம்பா சாகுபடிக்காக தங்களது நிலத்தை மகிழ்ச்சியுடன் தயார்படுத்தத் தொடங்கியுள்ளனர். சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு 130 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 69 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு அளவு நீரைத் தர கர்நாடகா முரண்டு பிடித்து வரும் நிலையில், எதிர் வரும் வடகிழக்குப் பருவ மழையை டெல்டா பாசன விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 6 கதவணை மின் நிலையங்கள் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் தொடங்கப்பட உள்ளது.




