பாரதத்தை வல்லரசாக்க பாடுபட்டவர் வாஜ்பாய்: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

atal bihari vajpayee - 2026

பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், தான் பிறந்த நாட்டிக்காகவும், மண்ணிற்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். தனது 93ஆம் வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். அவர் ஆன்மா நற்கதி அடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது வாழ்வை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கும் சிந்தனையில் தனது 1939 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.,  அமைப்பில் பணியைத் துவங்கினார். ஜன சங்கம் ஆரம்பித்த காலத்தில் அதில் பணிபுரிய ஆரம்பித்து 1977ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் ஆட்சி காலத்தில் திறம்பட பணியாற்றினார்.

1974 – 76 களில் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்காக போராடினார். 1998ல் இந்திய பிரதமராக ஆன 60வது நாட்களுக்குள்ளாக மே மாதம் 11ஆம் தேதி 1998ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பிய போதும் இந்தியா எந்த நாட்டிற்கும் அடி பணியாது என்று பறைசாற்றும் விதமாக மே 13ஆம் தேதியே அடுத்த அணுகுண்டு சோதனையையும் இந்தியா வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணும் விதமாக டெல்லி, லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து துவக்கியதுடன் அதில் தானே பயணம் செய்து பாகிஸ்தான் சென்று இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் கார்கில் பகுதியில் ஊடுருவ முயற்சித்த போது அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களின் சிறந்த ஆளுமையின் பேரில் நமது ராணுவ வீரர்கள் மூலம் அதனை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய நாட்டை தரை, கடல், ஆகாய வழியாக போக்குவரத்தினை இணைப்பதற்கு முதல் வித்திட்டவர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இவரது ஆட்சிக் காலத்தில் தான் தங்க நாற்கர சாலைகள் மூலம் நாடு இணைக்கப்பட்டது. முதல் முறையாக இந்தியாவில் ஓடும் பெரிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு முழு முயற்சியும் எடுத்தவர் என்ற பெருமை வாஜ்பாய் அவர்களையே சாரும்.

இந்தியா வல்லரசாக இப்படி பல எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார். இப்படி பட்ட மாபெரும் ஒரு தேச தலைவரை இந்த நாடு இன்று (16/08/2018) இழந்துள்ளது.

வாஜ்பாய் அவர்கள் காட்டிய வழியில் நடந்து இந்த தேசத்தை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.