சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இந்து மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
பாரத நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த முதல் ஸ்வயம்சேவகர்.
பாரத ரத்னா திருமிகு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதுமையின் காரணமாக இன்று புதுடெல்லி எஸ்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என்கிற செய்தி நமக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.
1924ல் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் சிறுவயதிலேயே தேச பக்தியுடனும், தெய்வ பக்தியுடனும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து முழுநேர ஊழியராக பணியாற்றியவர். பிரம்மச்சாரியாக வீரதுறவியாக வாழ்ந்தவர்.
ஆரிய சமாஜத்தில் மாநில செயலாளராக பணியாற்றியவர். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கமான சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை குவாலியரில் நிறைவு செய்த வாஜ்பாய் அவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், உள்ளிட்ட மொழிகளில் பெரும் பெரும் புலமை பெற்றவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பணிகளைச் செய்தவர்
சிறுவயதிலேயே தேச பக்தியுடன் தெய்வ பக்தியுடனும் சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.1952ல் பாரதிய ஜன சங்கம் துவக்கப்பட்டபோது திரு. ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு பேருதவியாக இருந்தார் மானனீய ஆப்தேஜி, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, பைரவ் சிங் சிகாவத், லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க தலைவர்களுடன் இணைந்து சிறந்த முறையில் பணியாற்றினார்.
1956 நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் உரைகள் சரித்திர சிறப்பு பெற்றவை. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறார் என்று சொன்னால் நாடாளுமன்றமே ஒட்டுமொத்த பாரதநாடு அவருடைய பேச்சைக் கேட்பதற்கு காத்திருக்கும். ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கூட வாஜ்பாய் அவர்களின் பேச்சை ரசித்துப் பாராட்டி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர். அவர் கூறுகையில் நான் இந்தி மொழியை எதிர்க்கின்றேன் ஆனால் வாஜ்பாய் பேசுகின்ற இந்திய ரசிக்கின்றேன் என்று சி என் அண்ணாதுரை அவர்கள் குறிப்பிடுவார்கள்.
தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் மாறாத பற்று கொண்டவர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள். இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக டெஸோ இயக்கம் மதுரையிலே தொடங்கப்பட்டபோது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அதிலே பங்கெடுத்துக் கொண்டார். பாரதப் பிரதமராக பதவி வகித்த நேரத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்க்க அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பெரும் முயற்சி எடுத்தார். இலங்கை மலையகத் தமிழகர்கள் உரிமையினை நிலைநாட்டிட நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களது குழந்தைகள் இந்தியாவில் படிக்க கல்வி உதவித் தொகை வழங்கினார். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தை கடுமையாக எதிர்த்தவர்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எப்படியெல்லாம் சாதனை படைத்தாரோ அதேபோல இந்த நாட்டினுடைய பிரதமர் பதவியை அலங்கரித்த முதல் ஸ்வயம் சேவகராக மாபெரும் சரித்திர சாதனைகளை தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே செய்திருக்கிறார்.
முதலில் 13 நாட்கள் அவர் பிரதமராக பதவி வகித்தார் அதன் பிறகு 13 மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார் அதன் பிறகு 5 ஆண்டுகள் முழுமையாக காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமர் பதவியில் அலங்கரித்தது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தான். அவருடைய ஆட்சிக் காலத்திலே பாரத நாட்டின் சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தக் கூடிய வகையிலே பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல தங்க நாற்கரச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கங்கை காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் அதற்கான ஆய்வுகளை செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு மந்திரியை அதற்காகவே ஒதுக்கினார்
வாஜ்பாய் அவர்கள் முதன்முதலாக மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி மந்திரிசபையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்த இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தினார் ஐநா சபையில் இந்திய மொழிகளில் அதாவது இந்தி மொழியில் பேசிய ஒரே தலைவர் வாஜ்பாய் அவர்கள்தான்.
வாஜ்பாய் அவர்களைப் பற்றிச் சொல்கின்ற பொழுது பாகிஸ்தான் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட தலைவர் வாஜ்பாய் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் பாகிஸ்தானில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார் என்று பாகிஸ்தானிய குடிமக்கள் (முஸ்லிம்கள் கூட) சொல்லக்கூடிய அளவிற்கு அவர் அண்டை நாடுகளுடன் உறவை பேணி வளர்த்தார். வாஜ்பாய் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினரையும் ரசிக்கத் தக்க வைத்தது.
குறிப்பாக வாஜ்பாய் அவர்களை பற்றி சொல்லும் பொழுது காங்கிரஸ்காரர்கள் சொல்லுவார்கள் நல்ல பழம் வாஜ்பாய் அவர்கள், ஒரு நல்ல பழம் ஆனால் தவறான மரத்திலே இருக்கிறது என்று சொல்லுவார்கள். அதற்கு பதிலடியாக வாஜ்பாய் அவர்கள், ஒரு விஷ விருச்சம் நல்ல கனிகளை தர முடியும் என்று கூறுவார்கள்.
இப்படி எதிரிகளையும் வெல்லக் கூடிய ஒரு அஜாதசத்ரு வாஜ்பாய் அவர்கள் இருந்தார்.
தேசத்தின் ஒற்றுமை தேசத்தின் பாதுகாப்பு என்று வருகிறபோது எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கும், இந்திரா காந்திக்கும், ஆதரவாக இருந்தார். கட்சி நலனை நாட்டு நலனே முக்கியம் என்று கருதினார். அவர் பிரதமாராக இருந்த போது ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ள வில்லை. வாஜ்பாய் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது தற்பொழுது நாங்கள் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருக்கிறோம் ஆனால் ஒரு காலத்தில் பாரத தேசம் முழுவதும் எங்களுடைய கட்சியின் கொடி பிறக்கும் என்று கூறினார்.
பாரத நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பொழுது ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அழைப்பினை ஏற்று ஜனசங்கத்தை கலைத்து, அதை அனைத்து கட்சிகளுடனும் சேர்த்து ஜனதா கட்சியை நிறுவியவர்களில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் ஒருவர். இந்திராகாந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்தார்.
நெருக்கடிநிலை போராட்டத்தின்போதும் வாஜ்பாய் அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார்.
அச்சமயத்தில், இடது சாரிகள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள், சோலிஸ்டுகள், அடல் பிகாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர் ஓரணியில் இருந்தார்கள். ஜனதா கட்சியில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது வாஜ்பாய் தலைமையிலான ஜனசங்கம் மட்டும்தான் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இறுதிவரை மொரார்ஜிதேசாயை முழுமையாக ஆதரரித்தது.
ஜனதா கட்சியில் இரட்டை உறுப்பினர் பிரச்சனையை எழுப்பி ஆர்.எஸ்.எஸ் காரர்களை வெளியேற்ற முயற்சித்தபோது, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எங்கள் தாய் இயக்கம் என்று சொல்லி சங்கத்துடனான தன்னுடைய உறவை பெருமிதமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஜனதாவிலிருந்து பிரிந்தார். ஜனதா கட்சி தன்னுடையது என்று உரிமை கோராமல் பாரதிய ஜனதா கட்சி என்ற அமைப்பை 1980ல் துவக்கினார்.
மீனாட்சிபுரம் மதமாற்றம், நடைபெற்பொழுது தமிழகத்திற்கு நேரடியாக வந்து மதமாற்றத்தை தடுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். மண்டைக்காடு கலவரத்தின்போது இந்து தமிழர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி இருந்தது.
பழனிபாபா துவக்கிய ஜிகாத் அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும், பழனிபாபா கைது செய்யப்பட வேண்டும் என்று சென்னை கடற்கரை கூட்டத்தில் வாஜ்பாய் அவர்கள் நான் கொடுத்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார். அதன் காரணமாக அன்றைய திமுக அரசு பழனிபாபாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாஜ்பாய் அவர்களை அழைத்து தமிழகத்திலே, திருப்பூரில் நடைபெற்ற கொங்கு மண்டல மாநாட்டில் பங்கேற்கச் செய்து, அந்த மாநாட்டின் பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் தமிழகத்தில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பான நிகழ்ச்சியை நான் நடத்தியதற்காக அந்த மாநாட்டிலே அவர் எனக்கு மாலை அணிவித்து கவுரவித்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
ஒரு ஸ்வயம் சேவகர் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தலை சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். வாஜ்பாய் அவர்களின் சீரிய தலைமையில் தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வரக்கூடிய அளவிற்கு வாஜ்பாய் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினார்.
இந்த நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவு கூரப்படும். வாஜ்பாய் அவர்களுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. பாரதத் தாயின் தவப்புதல்வர் ஆகிய வாஜ்பாய் தலை சிறந்த கவிஞர். அவருடைய ஹிந்தி கவிதைகளை, வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த கவிதைகள் சங்க பாடல்களாகவும் அமைந்திருக்கிறது.
வாஜ்பாய் அவர்கள் நாடாளுமன்ற உரைகளிலும், அவர்களது பேச்சுகளிலும், எழுத்துக்களிலும், பாரத நாட்டின் வரலாறுகளும் இந்து சமயத்தின் மேன்மையை உலகெங்கிலும் எதிரொலித்தது. அவருடைய மறைவு ஹிந்தி இலக்கிய உலகத்திற்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. அதேபோல ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். வாஜ்பாய் அவர்கள் இலக்கியத் துறை அரசியல் துறை, சமுதாய சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம், இப்படி பல வகையில் ஒரு தலை சிறந்த தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
பாரதத்தாயின் திருவடிகளில் இன்றைக்கு நறுமனம் வீசம் மலராக மலர்ந்திருக்கிறார். அவர் ஆன்மா நற்கதி அடைய இந்து மக்கள் கட்சி இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றது அவருக்காக ஒரு மாத காலம் துக்கம் கடைபிடிக்கப்படும். கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்தி வைக்கப்படும். இந்து மக்கள் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும். அவருடைய புகழ் அஞ்சலி நிகழ்ச்சிகளை கட்சி கிளைகள் தோறும் தமிழகம் முழுக்க இந்த மாதம் முழுக்க இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்திடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…- என்று கூறியுள்ளார்.




