
புது தில்லி: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்குமாறுக் அது உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக் ஆயுக்தா தொடர்பான மத்திய அரசின் திருத்தச் சட்டத்தில் முரண்பாடு உள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்த அமைக்கப் பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க, சட்டமன்றத்தில் தொடர்ந்து திமுக வலியுறுத்தியது என்று கருத்து தெரிவித்தார்.
இதனிடையே, லோக் ஆயுக்தா குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் . லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து – என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் . லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து
— Kamal Haasan (@ikamalhaasan) April 19, 2018



