
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள அவரிடம் ஏப்ரல்.21ஆம் தேதி மாலை விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும், உடன் விசாரிக்க வசதியாக, கூடுதலாக பெண் விசாரணை அதிகாரி ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு உதவும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பேராசிரியர் கமலி மற்றும் வேளாண் பல்கலை., பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பாக பொது மக்கள், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தரலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும், தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆகிய தேதிகளில் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நேரில் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்தவற்றை எழுத்துபூர்வமாக அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்திருந்தார். இதை அடுத்து இன்று முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சந்தானம் குழு, இன்று மதுரை வந்தது. நிர்மலா தேவியின் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்வதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளை தனித் தனியாகயும் விசாரணை நடத்துகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி, நேற்றே விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம், நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இன்று மதுரை காமராஜர் பல்கலை நிர்வாகத்திடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 பேர் குழு விசாரணை நடத்தியது. நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரித் தலைவர் உள்ளிட்ட 4 பேரிடமும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப் பட்டது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.



