நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ’செயல்’களுக்கு மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இரண்டும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அடிப்படையற்ற விஷமத்தனத்துடனும் தீய நோக்கத்துடனும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாக்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஊடக வட்டாரங்களில்பல ஆண்டுகளாக, ‘பாபுஜி’ என்ற பெயரில் பன்வாரிலால் புரோஹித்தை நாங்கள் நன்கு அறிவோம்.
நல்ல கொள்கை கொண்டவர். அப்பழுக்கற்ற நேர்மையாளர். விடா முயற்சி கொண்ட மக்கள் பிரதிநிதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளியாகி வரும், ‘தி ஹிடாவதா’ ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, கல்வி நிறுவனங்களின் திறமையான நிர்வாகியாக, பண்பட்ட தலைவராக விளங்கி வருபவர். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுதாரண மனிதராக வாழ்ந்து வருபவர்.
பெரும்பான்மையான பத்திரிகையாளர்களுக்கு ஒரு தந்தை போல வழிகாட்டி வரும் அவர், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருகிறார். அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பவர்.
அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!
‘தி இடாவதா’ நாளிதழில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் அவரால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த இடங்களாக திகழ்ந்து வருகின்றன. எனவே, பன்வாரி லால் புரோஹித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.