இறைவன் பெருவீட்டை நள்ளிரவில் தட்டி அவனை எழுப்பாதீர்! சாபம் பெறாதீர்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
annamalaiyartemple - 2026

கோயில் என்பது இறைவனின் பெரு வீடு போன்றது! நம் அரசர்கள் அதனால்தான் ஊருக்கு ஊர் இறைவனுக்கு என்று பெருங்கோயில்களைக் கட்டி வைத்தார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் கட்டிய மாளிகைகளை விட இறைவனுக்குக் கட்டிய கோயில்களே அதிகம்.. இன்றளவும் நிற்கின்றது.

திருவரங்கத்தை பெரிய கோயில் என்பார்கள். பெரிய பெருமாள், பெரிய அவசரம் என்று எல்லாமே பெரிது! தில்லை சிதம்பரத்தை பெரிய கோவில் என்பார்கள். இப்படி எல்லாமே பெரிதாக அமைந்த இறைவனின் பெருவீட்டுக்கு நாம் செல்வது, நமக்கான ராஜா, நம்மை காத்து அருளும் ஆண்டவன் என்ற மன எண்ணத்தினால்தான்!

சிவபெருமான் பார்வதி தேவி குடியிருக்கும் அவர்களின் மாளிகை
பெருமாளும் தாயாரும் குடியிருந்து கோலோச்சும் ராஜ மாளிகை…
இறைவனையைம் நம்மைப் போல் பாவிப்பது ஒரு விதம்.
நாம் இரவு பால் குடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றால் பின்னர் நள்ளிரவில் யாராவது கதவைத் தட்டி எழுப்பினால் எப்படி இருக்கும்? தம்பதியாய் படுத்துறங்கும் அறையை எவரேனும் இரவு தட்டினால் எப்படியிருக்கும்?

ஆனால் நாம் மட்டும் இறைவனின் வீட்டுக் கதவை இரவு தட்டி, அங்கே சென்று மணி அடித்து கும்மாளம் போடுகிறோமே!

நம் தூக்கத்தைக் கெடுத்து நம்மை எழுப்பினாலே மற்றவருக்கு பாவம் வந்து சேருமே! நாம் போய் இறைவனின் கோயிலைத் தட்டி அவர்களின் நிம்மதியைக் கெடுத்தால் எப்பேர்ப்பட்ட பாவங்கள் வந்து சேரும்..! நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு நடுங்குகிறதே!

அர்த்தஜாம பூஜை நிறைவடைந்ததும், சயன பேரர் எனப்படும் சயனப் பெருமானுக்கு பால் நிவேதனம் செய்து படுக்கைக்கு எழுந்தருளச் செய்து விடுவர். அதன் பின்னர் கதவைத் தட்டி இரவு நேரத்தில் போய் அவர்களை தரிசிப்பது மகா பாவம். அதனால் நமக்கு சேரும் பெரும் சாபம்!

இந்தப் பாவத்தை ஆன்மிக அன்பர்கள் செய்ய வேண்டாம். சாபத்தை நாம் பெற வேண்டாம்! நம் பகவானின் அருள் நமக்கு சூரிய உதயத்தின் பின்னே தான் கிடைக்கும்! முறையாக ஆகம விதிப்படி, கோபூஜை செய்து, திருப்பள்ளி எழுச்சி பாடி, விளக்கு ஏற்றி ஸ்ரீமந் நாராயணனின் பாதத்தில் / லிங்க பீடத்தில் நன்னீர் விட்டு எழுந்தருளச் செய்த பிறகே பெருமான் துயில் எழ, பின்னர் அவரை நாம் சென்று தரிசித்து வணங்கி அருள் பெற வேண்டும்.

கவனத்தில் கொண்டு, நள்ளிரவு தரிசனத்தை தவிர்ப்போம். கொடும் பாவத்தில் இருந்து தப்புவோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.