spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்சண்டிகர் மேயர் தேர்தல்: பாஜக.,விலும் மோசடி ஆசாமியா?"

சண்டிகர் மேயர் தேர்தல்: பாஜக.,விலும் மோசடி ஆசாமியா?”

- Advertisement -
BJP 2022 10 29

— ஆர். வி. ஆர்

பாஜக-வை எதிர்ப்பவர்களுக்குக் கல்கண்டாக ஒரு செய்தி.

சென்ற மாத இறுதியில் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தது. அதில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்ட பின், இப்போது சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அந்தத் தேர்தல் முடிவை ரத்து செய்திருக்கிறது. அவரிடம் தோற்றதாகக் கருதப்பட்ட ஆம் ஆத்மி–காங்கிரஸ் கட்சிகளின் பொது வேட்பாளர்தான் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மேயர் என்றும் அறிவித்து விட்டது சுப்ரீம் கோர்ட்.

அந்த மேயர் தேர்தலில், அனில் மசிக் என்பவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்தார். பதிவான மொத்த வாக்குகள் 36, அதில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்தவை 20, பாஜக வேட்பாளர் பெற்றது 16 என்பது உண்மை நிலவரம். இங்குதான் தேர்தல் அதிகாரி மோசடி வேலை செய்தார். அதாவது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு முறையாக விழுந்த 8 வாக்குச் சீட்டுகளின் மேல் எக்ஸ் குறியிட்டு அவற்றைச் செல்லாது என்று எடுத்துக் கொண்டார் தேர்தல் அதிகாரி. இறுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்றது 12 வாக்குகள் மட்டுமே, பாஜக பெற்றது 16, ஆகையால் பாஜக வேட்பாளரே மேயர் என்று தேர்தல் அதிகாரி வில்லத்தனமாக அறிவித்துவிட்டார். பிறகு விஷயம் சுப்ரீம் கோர்ட்டை அடைந்து, மேயர் தேர்தல் முடிவு சரியாக மாற்றப் பட்டது. இது சுப்ரீம் கோர்ட்டுக்குப் பெருமை.

தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிக் என்பவர் பாஜக-வில் சுமார் பத்தாண்டுகளாக இருக்கிறார். மேயர் தேர்தல் நடந்த சமயம், சண்டிகரில் அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுக்குத் தலைவராகவும் இருந்தார்.

இவ்வளவு ஒழுங்கீனமாக, மோசடியாகச் செயல்படும் ஒருவர் பாஜக-வில் இருக்கிறாரா என்று அக்கட்சியின் மீது மதிப்பு வைத்திருக்கும் பொதுமக்கள் நினைக்கலாம். இது பற்றிச் சிறிது விளக்க வேண்டும்.

நமது அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியத் தலைவர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் தேசத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், தமது குடும்ப நலனை வளர்ப்பவர்கள், நேர்மையற்றவர்கள், தேர்தல் மற்றும் நிர்வாகத்தில் எந்த மோசடியும் நடக்க எதுவும் செய்பவர்கள், லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள், தான் இருக்கும்போது மற்ற கட்சிகளில் இருந்து வேறு யாரும் – அந்த மற்றவர் அப்பழுக்கற்ற திறமையான தலைவராக இருந்தாலும் – ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவோ தேசத்தின் பிரதமராகவோ வரக்கூடாது என்ற அகந்தை கொண்டவர்கள்.

இந்த மாதிரித் தலைவர்களோ அவர்களது கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களோ எந்த ஊழல் புகாரில் சிக்கினாலும், அவர்களுக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் வந்தாலும், அவர்கள் மீது என்ன வழக்கு வந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனாலும், அந்தக் கட்சிக்கும் அதன் பிரதானத் தலைவர்களுக்கும் கூச்சம் இல்லை, வெட்கம் இல்லை. அவர்களைப் போன்றவர்கள் அந்தக் கட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அங்கு போய்ச் சேருகிறார்கள். அப்படிச் சேருபவர்கள் என்ன முறைகேடுகள் செய்தாலும், அதனால் ஜெயிலுக்குப் போனாலும், கட்சிக்குள் அவர்களுக்கு இழுக்கு வராது. மதிப்புதான் கூடும். அதற்கு ஏற்ப, அவர்களும் கட்சியின் பிதாமகர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்திருப்பார்கள். லாலு பிரசாத் யாதவ் தெரியுமல்லவா? சில திராவிடத் தலைவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?

பாஜக அப்படியான கட்சியல்ல. சண்டிகர் மாநகராட்சியில் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட அனில் மசிக் இப்படித் தில்லுமுல்லு செய்து, அதை அப்பட்டமாகவும் அசட்டுத்தனமாகவும் செய்து, பாஜக வேட்பாளரை எப்படியாவது மேயராக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அனில் மசிக்கிடம் எதிர்பார்த்திருக்காது.

பாஜக-வின் தலைமை அப்படித் தவறாக எதிர்பார்க்கக் கூடியது என்றால், பத்து வருடங்களாக அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்து வரும்போது, ஒரு 2ஜி ஊழல், ஒரு நிலக்கரி ஊழல், ஒரு காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஹெலிகாப்டர்கள் ஊழல், டெல்லி சாராய விற்பனை ஊழல் மற்றும் தமிழகத்தில் தொடரும் விஞ்ஞான ஊழல்கள் மாதிரிப் பெரிய அளவில் டெல்லியில் செய்திருக்கலாம். சண்டிகர் மேயர் பதவி மூலமாகக் கட்சி மேலிடம் எதை அடைய முடியும்? ஒன்றுமில்லை.

அப்படியென்றால் ஒரு மோசடி மனிதர் ஏன் பாஜக–விற்கு வரவேண்டும்? அல்லது, கட்சிக்குள்ளிருந்து ஏன் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்? காரணம் இருக்கிறது.

பொய் பித்தலாட்டம், தில்லுமுல்லு, மோசடி, ஆகிய குணங்கள் சிலருக்கு இருக்கும். அதில் திறமையான பலர் அத்தகைய குணங்களை மறைத்துத் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வதுண்டு, அதற்கேற்ற பேச்சுத் திறமையும் அவர்களிடம் இருக்கலாம். அவர்களுக்குப் பல அரசியல் கட்சிகளின் வாசல் கதவுகள் தோதாகத் திறந்திருப்பது போல் தோன்றலாம். இருந்தாலும் அந்த மனிதர்களில் சிலர், ‘நாம் பாஜக–வுக்குச் சென்றால் அங்கு நமது வேலைகளுக்குப் பெரிய போட்டி இருக்காது, நடித்துக் கொண்டே நாம் முன்னேறலாம்’ என்று கூட கணக்குப் போடலாம். ஒருவரின் அடிப்படை குணமும் அவர் செயல்பாடுகளும் எப்போதுமே லாஜிகலாக சேர்ந்திருக்கும் என்று இல்லையே? இப்படியாக அனில் மசிக் பாஜக-விற்கு வந்திருக்கலாம். இல்லையென்றால், எப்படியாவது என்ன செய்தாவது தன் கட்சிக்காரர் ஒருவர் மேயர் ஆகட்டும் என்று தோன்றி, கட்சித் தலைமையின் கண்ணியத்தை முழுதும் உணராமல், அவருக்குத் தலைக்கிறுக்கு வேகமாக ஏறி இருக்கலாம். வேறு எது சாத்தியம் – பாஜக-வின் தலைமை நேராக இருக்கும்போது?

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், தேசநலன், நேர்மை, நாணயத்தின் மறுஉருவமான மூன்று தலைவர்கள் சொன்னதைப் பாருங்கள்.

“ஜனநாயகத்தைக் கொலை செய்யும் சதியில், அனில் மசிக் ஒரு ஏவலாள். அவருக்குப் பின்னால் மோடியின் முகம் இருக்கிறது.” என்றார் காங்கிரஸின் ராகுல் காந்தி. டெல்லியில் குளிர் அதிகமானால் அதற்கும் மோடிதான் காரணம் என்று நினைப்பவர் அவர்.

“சண்டிகர் மேயர் தேர்தலில், இருக்கிற 36 ஓட்டுக்களில் பாஜக 8 ஓட்டுக்களைத் திருட முடிந்தால், 90 கோடி ஓட்டுக்கள் விழக் கூடிய அடுத்த லோக் சபா தேர்தலில் அந்தக் கட்சி என்னவெல்லாம் செய்யுமோ?” என்று கேட்டார் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால். 2024 லோக் சபா தேர்தலில் கிடைக்கப் போகிற தோல்விக்கு இப்போதே குயுக்தியாக ஒரு காரணத்தைத் தட்டி விட்டிருக்கிறார் அவர்.

2006-ல் சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் போது, திமுக அரசு மாநிலத்தில் இருந்தது. அந்தத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட அராஜகம், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் பல தில்லுமுல்லுகளை இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டார். அந்த ஏகாந்த நிலையில், சண்டிகர் தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, அது “பா.ஜ.க-வின் தகிடுதத்தங்களுக்கு எச்சரிக்கை” என்று அறிக்கை விட்டார்.

என்ன இருந்தாலும், மேயர் தேர்தல் அளவில் கூட தனது கட்சியினர் முறைகேடுகளை நினைக்காமல் இருக்க பாஜக ஆவன செய்யவேண்டும் – அனில் மசிக்கையும் கட்டுப்படுத்த வேண்டும். இது அவசியம் என்று அக்கட்சியே உணர்ந்திருக்கும். பிற கட்சிகள் மாதிரி எதையும் துடைத்துவிட்டுப் போகிற கட்சி இல்லையே பாஜக?

பிற கட்சிகளிலிருந்து சிலர் பாஜக-விற்கு மாறி வருவது (அவர்கள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்றும் இருக்கலாம்) வேறு விஷயம். ஏன், இப்போது சண்டிகர் மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்கள் சிலரும் அணி மாறலாம். தேர்தல் என்னும் போருக்கான படைகளை, தளவாடங்களைச் சேகரிப்பது எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு நடைமுறைத் தேவை என்றாகிவிட்டது. அதை லாவகமாக, கட்சியின் தன்மைக்குப் பாதகமில்லாத அளவிற்குச் செய்வது பாஜக-விற்கும் அவசியம். அந்த வழி எல்லாக் கட்சிகளுக்கும் சட்டத்தால் அனுமதிக்கப் பட்டதும் கூட. பதிவான வாக்குச் சீட்டுக்களை சட்டத்திற்குப் புறம்பாக மாற்றுவதைப் போல் அல்ல அந்த விஷயம்.

இந்த விவகாரம் இரண்டு விஷயங்களைத் தொட்டுப் போகிறது. ஒன்று: காகித ஓட்டுச் சீட்டில் எப்படி ஒரு தேர்தல் பணியாளர் எளிதாகத் தில்லுமுல்லு செய்யலாம், ஆனால் நன்கு சோதிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரமானது (EVM) வாக்கு எண்ணும் கில்லாடிகளை அடக்கி வைக்கும் என்று அழுத்தமாகத் தெரிகிறது. இரண்டு: சுப்ரீம் கோர்ட்டின் உடனடித் தலையீட்டால், எதிலும் அப்பட்டமான மோசடிகளைச் செய்ய நாடெங்கும் இனி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சற்றுத் தயங்குவார்கள். நடந்த விஷயம் அதுவரைக்கும் நல்லது செய்யட்டும், நமது ஜனநாயகம் மெள்ள மெள்ள முதிர்ச்சி அடையட்டும், என்று நாம் நினைத்துக் கொள்ளலாம். வேறு எப்படி நினைப்பது?

Author: R. Veera Raghavan,
Advocate, Chennai ([email protected])
Blog: https://rvr-india.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe