விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸைச் சேர்ந்த விஜயதரணி இன்று தில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்ததாக அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, தேசியக் கட்சியான பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் விஜயதரணி.
விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ.,வாகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளராகவும் விஜயதரணி பதவி வகித்தார். அண்மைக் காலமாக கட்சியில் கடும் அதிருப்தியில் இருந்த அவர், புதிதாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில், பாஜக.,வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் அந்தத் தகவலை உண்மையாக்கும் வகையில், இன்று தில்லியில் பாஜக., அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி எம்எல்ஏ., பாஜக.,வில் இணைந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, “காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜக.,வில் இணைந்துள்ளேன். அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழகத்தில் பாஜக.,வில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாஜக.,வில் பெண்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. மோடி தலைமையில் என்னைப் போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன்” என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விஜயதரணி தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.