Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பக்தி இலக்கியத்தின் எதிர்காலம்..!

பக்தி இலக்கியத்தின் எதிர்காலம்..!

nayanmar nalvar - Dhinasari Tamil

பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்க காலத்திலேயே உருவாகி விட்டது. தொல்காப்பியத்திலேயே எந்தெந்த நிலப்பரப்புக்கு எந்தெந்த தெய்வம் என்ற பகுப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தொகைக் கடவுள் வாழ்த்திலேயே முருகனின் அருட்சிறப்பு பேசப்படுகிறது. பத்துப்பாட்டில் `திருமுருகாற்றுப் படை` என்ற தனி பக்தி நூல் இடம்பெற்றுள்ளது.

நேரடி சமய இலக்கியம் என வகைப்படுத்த முடியாவிட்டாலும், சங்கப் பாடல்கள் சில உயர்ந்த ஆன்மிகத்தை போதிப்பனவாக உள்ளன.

எடுத்துக்காட்டாக `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்று தொடங்கும் கணியன் பூங்குன்றனாரின் பாடல். (எல்லா ஊரும் ஒன்றே என்றெழுதிய புலவரை அவரது ஊரான பூங்குன்றம் என்ற இடத்தின் பெயரால் பூங்குன்றனார் என்றழைக்கிறோம் நாம்!)

அந்தப் பாடலின் முதல் வரி பெரிதும் பிரபலப்படுத்தப் பட்டுவிட்டது. அது நல்லதுதான். ஆனால் அந்தப் பாடல் சொல்லும் முக்கியமான கருத்து அதன் இறுதிப் பகுதியில் வருகிறது. ஊழ்வினையை வலியுறுத்தும் பாடல் அது.

ஊழ்வினை காரணமாகவே ஒருவன் பெரியவனாகிறான். இன்னொருவன் சிறியவனாகிறான். ஆகையால் `பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே` என்று சமநிலையோடு பேசுகிறார் பூங்குன்றனார். யார்மீதும் பொறாமை கொள்ளாமலும் யாரையும் எள்ளி நகையாடாமலும் இருக்கும் உயர்ந்த பண்பாட்டுக்கு வித்திடுகிறது இந்த உயர்தரமான ஆன்மிகப் பாடல்.

மத நல்லிணக்கத்தின் உச்சத்தில் பிறந்தது, மதம் சார்ந்த தெய்வம் எதையும் முன்னிலைப் படுத்தாத, ஆனால் தெய்வ சக்தியைப் பொதுப்படையாய் முன்னிலைப் படுத்தியு திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம். ஆன்மிகத்தின் ஒரு கூறான ஊழ்வினை குறித்துத் திருக்குறளும் பேசுகிறது.

இவ்விதம் தமிழின் சமய அல்லது ஆன்மிக இலக்கியம், வற்றாத ஜீவநதியாய்ப் பழங்காலந்தொட்டுத் தொடர்ந்து பாய்ந்துவருகிறது.

சங்க காலத்திலோ சங்கம் மருவிய காலத்திலோ அடியவர்களுக்குள் தத்தம் தெய்வங்கள் சார்ந்து சண்டை சச்சரவுகள் இருந்ததில்லை. பழந்தமிழர்கள் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் ஆனால் சமயச் சச்சரவுகள் அற்றவர்களாகவும் பண்பட்டவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இடைக்காலத்தில் பண்பாட்டுக் குறைவு ஏற்பட்டதையும் சமயம் சார்ந்து சண்டை சச்சரவுகள் தோன்றத் தொடங்கியதையும் அவற்றை இலக்கியங்கள் பிரதிபலித்ததையும் காண்கிறோம். இத்தகைய போக்கின் தோற்றத்தைத் தமிழ்ச் சமய இலக்கியத்தின் துரதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.

சைவர்கள் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார்கள் என்பது இடைக்காலத்தில் நம் சமயத் தமிழில் கிடைக்கும் ஒரு செய்தி. அதை எட்டாயிரம் என்று வைத்துக் கொண்டாலும் சரி, எண்ணாயிரம் என்ற பெயருள்ள கிராமத்தில் இருந்த சமணர்கள் என்று வைத்துக் கொண்டாலும் சரி. அது உண்மையான ஆன்மிகத்திற்கு விரோதமானதே.

ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்த ஒரே ஒருவனைக் கொன்றாலும் அது மாபெரும் தவறுதான். உண்மையான ஆன்மிகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. வன்முறை சார்ந்த காட்டுமிராண்டித்தனம் என்பது வேறு. அன்பைப் போதிக்கும் சமயம் என்பது வேறு. சமயத்தின் நோக்கமே அன்புதான்.

இது எல்லா சமயங்களுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். அவ்விதம் பொருந்தாமல் எந்தச் சமயமாவது வன்முறையை ஆதரிக்குமானால் அதைச் சமயம் என்று நாம் ஏற்க இயலாது. ஏற்கக் கூடாது.

*`இளங்கோ தாம் காப்பியம் எழுதியதன் நோக்கங்களாக மூன்றைக் குறிப்பிடுகிறார். அதில் ஒரு நோக்கம் ஆன்மிகவாதிகள் நம்பும் ஊழ்வினை தொடர்பானது. ஊழ்வினைப் பயன் மறுபிறவியில் தொடரும் என்பதைத் தம் காப்பியத்தின் மூலம் வலியுறுத்துகிறார் இளங்கோ.

சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் ஒரு செய்தி வருகிறது. வற்கடம் (கடும் பஞ்சம்) தோன்றியதால் கண்ணகித் தெய்வத்தின் உக்கிரத்தை நீக்கி அத்தெய்வத்தை அமைதிப்படுத்த ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற செய்தி அது.

நிச்சயம் இதை இளங்கோ அடிகள் எழுதியிருக்க இயலாது. சமண மதத்தைச் சார்ந்த கவுந்தி அடிகளைப் பாத்திரமாகப் படைத்தவர் அவர். கண்ணன் உள்ளிட்ட எல்லா தெய்வங்கள் குறித்தும் பாடல்கள் புனைந்து போற்றியவர்.

பலி கொடுக்கப்பட்டவர்கள் உண்மையான பொற்கொல்லர்கள் அல்லர், மாவால் ஆன பொற்கொல்லப் பிரதிமைகள் தான் பலியிடப்பட்டன என்பதைப் போன்ற ஆய்வுகளை விட்டுவிட்டு அந்தச் செய்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இது எப்படி நியாயமாக இருக்க முடியும்? ஒரு பொற்கொல்லன் கண்ணகியின் வாழ்வில் குறுக்கிட்டுச் செய்த தவறை எல்லாப் பொற்கொல்லர்கள் மேலும் ஏற்றிப் பார்ப்பது எப்படிச் சரியாகும்? எல்லா ஜாதியிலும் எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் என்பதுதானே உண்மை?

கெட்டவர்களைக் கெட்டவர்களாக அடையாளம் காணாமல் ஜாதி சார்ந்து பொதுமைப்படுத்தி அடையாளம் காண்பது என்ன நியாயம்? இந்தப் போக்கு அறிவுடையோர் ஏற்கக் கூடியதல்ல.

ஆனால் இப்படி அடையாளம் காணும் மோசமான குணம் நம்மில் பலரிடம் ஊறிப் போயிருக்கிறது. அதனால் தான் இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் கொலையுண்டதும் நாடெங்கும் ஒருபாவமும் அறியாத இரண்டாயிரத்திற்கும் மேலான சீக்கியர்கள் பல்வேறு பிரிவினரால் கொல்லப்பட்டார்கள்.

இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியனை மதம் சார்ந்தா அடையாளம் காண்பது? அவன் ஓர் உயிரைக் கொன்ற கொலைகாரன் என்றல்லவா அடையாளம் காணப்பட வேண்டும்?

andal 4 - Dhinasari Tamil

காந்தியைக் கொன்ற கோட்சே ஓர் இந்துவாக இல்லாமல் முஸ்லீமாக இருந்திருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும்? கோட்சே இந்துக்களின் பிரதிநிதியா என்ன? அவன் வன்முறையாளர்களின் பிரதிநிதி அவ்வளவே.

கோட்சேக்கு பதிலாக ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்றிருந்தாலும் அந்த முஸ்லீமை நாம் முஸ்லீம் என்று பார்ப்பது எப்படிச் சரியாகும்? அந்த முஸ்லீமும் வன்முறையாளர்களின் பிரிதிநிதி, அவ்வளவே.

காந்தியைக் கொன்றது யாராக இருந்தாலும் அதற்கு கொன்றவனின் மதத்தைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லோரும் எப்படிப் பொறுப்பாவார்கள்? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் இந்து, மனிதனையே கொலைசெய்த கோட்சேவும் இந்துவா? கோட்சேவை இந்துவாகக் காண்பது இந்து மதத்தையே அவமதிப்பதல்லவா?

ஆனால் காலம் மாறியது. மனிதர்கள் மேலும் மேலும் பண்பட்டார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து முஸ்லீம் கலவரங்கள் எழுந்தபோது தாகூர் மசூதிகளுக்குச் சென்று, முஸ்லீம் பெண்கள் கையில் ராக்கிக் கயிறு கட்டினார். அவர்கள் இந்துக்களின் சகோதரிகளே என ஓங்கிக் குரல்கொடுத்தார். பின்னாளில் இந்து மதத்தின் உயரிய உண்மைகளைப் பெரிதும் மதிக்கும் முகமதியரான அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவே ஆனார்.

சைவ இலக்கியமான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகினார் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு தமிழகம் வந்த ஜி.யு. போப். எம்மதத்தவரும் ஏற்றுக்கொள்ளும் தெய்வ சக்தியையே எந்நாட்டவர்க்கும் இறைவனாக சிவபெருமான் வடிவில் மாணிக்கவாசகர் காண்கிறார் என்பதை ஜி.யு. போப் உள்ளம் சரியாகப் புரிந்துகொண்டது.

வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகம், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்து ஊன்லந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதை உணர்வதற்கு, வள்ளலார் போல இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, சைவத் தமிழ் இலக்கியத்தை ரசித்து உள்ளம் உருகுபவர் கிறித்துவராகவும் இருக்கலாம் என்ற உண்மையை ஜி.யு. போப், தமிழ் அன்பர்களுக்கு உணர்த்தினார்.

மு.மு. இஸ்மாயீலின் கம்பராமாயணப் புலமை யாவரும் அறிந்த செய்தி.

தமிழின் தற்கால இலக்கியத்திலும் சமயக் கூறுகள் நிறைய உண்டு. ரா. கணபதி, பரணீதரன் போலச் சமய நூல்களை உரைநடையில் எழுதிச் சமய இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்கள் பலர். தமிழின் தற்காலப் படைப்பிலக்கியச் சாதனையாளர்களிலும் உயர்ந்த ஆன்மிகவாதிகள் இருந்திருக்கிறார்கள்.

தி. ஜானகிராமன் சித்தர்களைத் தேடி நடந்தவர். மோகமுள்ளில் இரும்பு ஆணியைத் தங்க ஆணியாய் மாற்றும் ரசவாதம் தெரிந்த ஒரு சித்தரைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது கற்பனையல்ல, உண்மைச் சம்பவமே என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிட்டி பி.ஜி. சுந்தரராஜன் பரமாச்சாரியாரின் பெரிய அடியவர். பரமாச்சாரியாரைப் பற்றி நூலும் எழுதினார். எம்.வி.வெங்கட்ராம் எழுதி சாகித்ய அகாதமி பரிசுபெற்ற `காதுகள்` என்ற நாவலே அந்த நாவலாசிரியரின் சொந்த வாழ்விலான ஆன்மிகப் போராட்டத்தை உள்ளடக்கிய சுயசரிதைதான்.

தமிழின் மிக முக்கியமான படைப்பாளியான தருமூ சிவராமு என்கிற பிரமிள், சித்தர்கள் பலரைப் பற்றிக் கட்டுரைகள் எழுதிய முழுமையான ஆன்மிகவாதி. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரில் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருக்கும் முருகன் சிலையில் தன் காலஞ்சென்ற காதலன் அரவிந்தனையே காண்கிறாள் பூரணி.

தற்காலப் படைப்பிலக்கியத்திலான சமய மற்றும் ஆன்மிகக் கூறுகளை இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். அண்மைக் காலத்தில் தமிழின் மரபுக் கவிதைத் துறையில் மகாகவி மரபில் பல உயர்தர பக்திக் கவிதைகளும் தோன்றி வருகின்றன.

எதிர்காலத்தில் தோன்றும் தமிழின் சமய இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? சங்க கால மரபிலும் திருக்குறள் மரபிலும் அண்மைக்கால வள்ளலார், பாரதி மரபிலும் எதிர்காலச் சமய இலக்கியம் தழைக்க வேண்டும். இடைக்காலத்தில் தமிழில் நேர்ந்த பிற மதக் காழ்ப்பிலிருந்து தமிழிலக்கியம் முற்றாக விடுபட வேண்டும்.

`மதங்கள் அனைத்தும் கடவுளை அடையும் வழிகள்தான். நாம் மதங்களுக்கு விரோதமானவர்கள் அல்லர். ஆனால் மதங்கள் மதங்கடந்த ஆன்மிகத்தை நோக்கி அடியவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நாம் விரும்புகிறோம்` என்ற அரவிந்த அன்னையின் வாசகத்தை நாம் சிந்திப்பது நல்லது.

ஆன்மிகம் என்பதும் சமயம் என்பதும் அன்புதான் என்பதையும் அந்த அன்பை அவரவர் மதத்தினரிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடமும் காட்டக் கற்றுக் கொடுப்பதே உண்மையான மதம் என்பதையும் நாம் உணரவேண்டியது அவசியம். எதிர்கால பக்தி இலக்கியம் இந்த நோக்கில் தழைக்கட்டும்.

  • திருப்பூர் கிருஷ்ணன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,860FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...