சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல்

சற்றுமுன்

சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல்

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் 27.01.2016 முதல் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தார். பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ், அமைப்பு செயலாளர் செல்வக்குமார், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் கோ.சு. மணி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

முதல் நாளான இன்று மொத்தம் 612 விருப்ப  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 124 மனுக்கள் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. அதன்பின்னர் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.