jatayu rok and kummanam rajasekaran - 2026

இவரது வீரப் போராட்டத்தால்… இன்றைய ஜடாயு பாறையைக் காண்கிறோம்!

கட்டுரைகள் சுற்றுலா லைஃப் ஸ்டைல்
jatayu rok and kummanam rajasekaran - 2026

அண்மையில் வெளியான ராமாயணம் படத்துக்குச் செல்லப் போவதாகக் கூறினான் என் சகோதரியின் மகன். மதுரையில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அவனுக்கு வியாச பாரதம், வால்மீகி ராமாயணத்தின் உரைநடைக் கதைப் புத்தகங்கள் பிடித்தமானவை. அவற்றைப் படித்து அவ்வப்போது சில சந்தேகங்களையும் கேட்பான்.

அவன் சொன்னபடி ஒரு நாள் படத்தைப் பார்த்து வந்து, ஒரு கேள்வி எழுப்பினான். “மாமா, ஜடாயுவ நம்ம திருவனந்தபுரம் போற வழியில இருக்கிற ஜடாயு பாறைல வெச்சிதான் ராவணன் வெட்டினானா” என்று கேட்டான். அவனுக்கு ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் நம் நாட்டில் எங்கெல்லாம் நடந்தன என்ற குறிப்பை வைத்துச் சொன்னேன்.

அப்போது, எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் அந்த ஜடாயு பாறை பற்றிய தகவல்களைப் படித்தது நினைவுக்கு வந்தது. ஜடாயு பாறை இந்நாளில் ஒரு பெரும் சுற்றுலாத் தலம். கேரள மாநில சுற்றுலாத்துறையால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டும் வருகிறது. எங்கள் பகுதியில் இருந்து செல்லும் வழியில் தென்மல, செந்துர்னி வனப்பகுதி, அஞ்சல் எல்லாம் இயற்கை வன ஆர்வலர்கள் விரும்பிச் செல்லும் பகுதிகள்தான். இப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் அவ்வப்போது சென்று வரும் இடமாகவும் உள்ளது.

தற்போது ராமாயணம் படம் வந்த பின்னர், மக்கள் பலரும் சடயமங்கலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஜடாயு பாறை குறித்து இணையதளங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று சமூகத் தளங்களில் பயனர்கள் பெருகிவிட்டதால், ஜடாயு பாறை இப்போது புகழ்பெற்றதாகியிருக்கிறது.

ஆனால் இந்த இடத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற அந்நாளில் ஓர் இளைஞர், அதுவும் ஹிந்துத்வ சிந்தனையில் ஊறிய இளைஞர் ஒருவர் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, ஜடாயுவின் விரிந்த சிறகுகளுக்கு இப்போது உயிர் வந்தது போல் எண்ணம் துளிர்க்கிறது.

ALSO READ:  சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!

ஜடாயு பாறை, அன்று புராதனச் சின்னம். மிகப் பழைமை வாய்ந்த இடம். இது பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்ட போது, அதைப் பாதுகாக்கத் தன் உயிரையும் துச்சமென நினைத்து களத்தில் இறங்கிப் போராடினார் ஓர் இளைஞர். எனது பிணத்தின் மீது ஏறித்தான் நீங்கள் ஜடாயு பாறையை உடைக்க முடியும்!” என்று குரல் கொடுத்து அதில் படுத்துக் கொண்டார். அந்நாளைய செய்தித் தாள்களில் வந்த படங்கள் இதன் தீவிரத்தை எடுத்துக் காட்டுபவை.


ராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்கள் என்று நாட்டில் சில பகுதிகள் உள்ளன. எனினும் ராமாயண பாத்திரங்களின் நினைவாகவும், நிகழ்வுகளின் நினைவாகவும் பல பகுதிகள் நாடெங்கும் உள்ளன. தாமிரபரணிக் கரையில் முழு ராமாயணமுமே நிகழ்ந்ததாக நினைவிடங்கள் உண்டு. அனுமன் தாவிச் சென்ற மகேந்திரகிரி மலையும் இங்கு உண்டு. கர்நாடகப் பகுதியில் உள்ள கிஷ்கிந்தாவே வானரப் படைகளை ராமன் சந்தித்த இடம் என்கிறது ராமாயணம். ராமன் அங்கு வரும் முன்பே ஜடாயுவுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்துவிட்டுதான் வருகிறார். இந்த நிகழ்வின் நினைவாக நாசிக் அருகே ஜடாயுவுக்கு ஓர் ஆலயமும் உண்டு.

எனினும், தெற்கே மகேந்திரகிரிக்கு சிறிது தொலைவில் உள்ள இப்பகுதியில் ஜடாயுவின் சிறகுகளை ராவணன் வெட்டி வீழ்த்தியதால், சிறகுகள் அறுபட்டு வானத்தில் இருந்து ஜடாயு வீழ்ந்த இடமே இந்த ஜடாயு பாறை என்று நம்பப் பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போதைய ராமாயண படத்தில், ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையே நடைபெற்ற போராட்டக் காட்சிகள் இளைஞர்களை, மாணவமணிகளைக் கவரும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. அதனால் இப்போது ஜடாயு பாறை குறித்த தேடல்களும் அதிகரித்துள்ளன. இது கொல்லம் மாவட்டம் சடயமங்கலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது.

ALSO READ:  குருவாயூரில் கோலாகலமாக நடந்த ஏகாதசி உத்ஸவம்!

அந்நாளில் இது ஜடாயுபாற என்று உள்ளூர் மக்களால் அழைக்கப் பட்டு வந்தது. 1970களில் அப்போதைய கேரள அரசு, அந்தப் பாறைப் பகுதியில் கல் குவாரிகளை அமைக்க, அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டர் அறிவிப்பு உள்ளூர் மக்களை வெகுவாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. புராதனப் பெருமை வாய்ந்த ஓர் இடத்தை அழிப்பதா என்று உள்ளூர் மக்களும் பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு போராட்டமாகவே அந்நாளில் முன்னெடுக்கப் பட்டது

அப்போது ‘ஜடாயுபாற’யைப் பாதுகாப்பதற்கான குழுவுக்கு தலைமை தாங்கும் வகையில் முன்னின்றார் கும்மனம் ராஜசேகரன் எனும் இளைஞர். துடிப்பான ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர். அத்துடன் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி முன் நிற்க, அந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. அங்கே கோதண்ட ராமர், சீதை சிலைகள் வைக்கப்பட்டு ஆலயத்தைப் புனரமைக்க போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.


அப்போது வந்த செய்திதான் இது…

“என் பிணத்தின் மீது ஏறி நின்றால் ஒழிய, ஜடாயுப்பாறையை உடைக்க முடியாது.” – கும்மனம் ராஜசேகரன்

ஜடாயுப்பாறையை (Jatayu Rock) இடிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, ஓர் இளைஞர் பாறையின் மீது படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சடையமங்கலம், ஜூன் 13: சடையமங்கலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜடாயுப்பாறையை இடிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்துப் போராட்டம்.

அச்சுத மேனன் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், ஒரு கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான கற்களைப் பெறுவதற்காக, பாறைகளை உடைத்து கற்களை எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வந்தனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் கைசிக ஏகாதசி; 108 போர்வை சாற்றும் உத்ஸவம்!

இருபது வயதான கும்மனம் ராஜசேகரன், தனது உயிரைப் பணயம் வைத்து, பாறையின் மீது படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் முன்வந்துள்ளனர்.

ஜடாயு தொடர்பான தொன்மக் கதைகளைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், பாறையை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது இப்பகுதி மக்கள் அரசாங்கத்தின் முடிவிற்காகக் காத்திருக்கின்றனர்.


இப்போது கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் ஜடாயு பாறையின் பெருமையைப் பேசுகின்றனர். சுற்றுலாப் பயணிகளை அங்கு வரவேற்கின்றனர். ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இன்று நம்மால் பார்க்கப்படுவதற்குப் பின்னால் ஓர் இளைஞரின் துணிச்சலான போராட்டம் இருந்தது என்பதை நாம் இந்தச் செய்தியின் வழியாக அறிகிறோம்.

கும்மனம் ராஜசேகரன், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலப் பொறுப்பு, பாஜக., தலைவர் என்று உயர்ந்து பின்னாளில் மிசோரம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

Posts by செங்கோட்டை ஸ்ரீராம்:

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://www.dhinasari.com