
ஆத்தூர் அருகே தூத்துக்குடி கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 20) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் அப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பத்திரகாளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கைது செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கொலை செய்யப்பட்ட மாணவரின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தலைவன்வடலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.