
பழங்காநத்தம் கோதண்டராமர் திருக்கோயிலில் பாரம்பரிய கோலாட்ட ஜோத்திரை ஊர்வலம்: பசி, பஞ்சம் நீங்கி மழை வளம் பெருக வேண்டி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் சார்பில், உலக நன்மைக்காகவும், நாட்டில் பசி, பஞ்சம் ஏதுமின்றி உரிய காலத்தில் மழை பெய்து மக்கள் அனைவரும் வளமுடன் வாழ வேண்டியும் பல நூற்றாண்டு காலமாகப் பாரம்பரிய கோலாட்ட ஜோத்திரை விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான விழாவின் தொடக்கமாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அருள்மிகு பகவான் / பசுவனுக்கு மண் எடுக்கும் நிகழ்வும், நவம்பர் 20-ஆம் தேதி ஊர்காவலனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, பகவானுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெற்றன.
இதன் முக்கிய நிகழ்வான பகவானுக்கு கோலாட்ட ஜோத்திரை ஊர்வலம் இன்று (நவம்பர் 21, 2026) மாலை 5 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அருள்மிகு பகவான் / பசுவன் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஊர்காவலன் சுவாமி முன்பு வைக்கப்பட்டது.
இதில் எவ்வித சாதிப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்புப் பொதுமக்களும், 500-க்கும் மேற்பட்ட பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து வழிபட்டனர். அதனைத்
தொடர்ந்து, மீண்டும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அருகில் உள்ள ஊரணி கரையில் பசுவன் கரைக்கப்பட்டது. கரைக்கும் நிகழ்வின்போதும் பெண்கள் தொடர்ந்து கோலாட்டம் அடித்து வழிபாடு செய்தனர்.
விழாவின் நிறைவாக, கோலாட்டம் அடித்து ஊர்வலமாக வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
Posts by ரவிச்சந்திரன், மதுரை:
- கலக்கிய வாழ்த்து போஸ்டர்கள்; கோயிலில் வழிபட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; ரிஷப வாகனத்தில் சுவாமி உலா!
- நகைக்கொள்ளை; மீனாட்சிக்கு தொடர்பில்லை: அடித்துச் சொல்லும் நிஷாந்த்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; அன்ன வாகனத்தில் சுப்ரமண்யர் வீதி உலா!
- மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்!


