நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
shami ind - 2026

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி அரை சதமடித்து கைகொடுத்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலதில் மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் இன்று நடைபெற்றது. காயம் காரணமாக தோனி ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். போட்டியில் விளையாட தடை இருந்த நிலையில், தடையில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் அணிக்கு திரும்பினார்.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியினருக்கு துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முகமது ஷமி ‘வேகத்தில்’ முன்ரோ (7) ஆட்டமிழக்க, புவனேஷ்வர் பந்தில் மார்டின் கப்டில் (13) வெளியேறினார். கேப்டன் வில்லியம்சன் (28), சகால் ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்பாக ஆடிய ராஸ் டெய்லர் அரை சதம் அடித்தார். சகால் பந்தில் லதாம் (51) ஆட்டம் இழந்தார்.. ஹர்திக் பாண்ட்யா ‘வேகத்தில்’ நிக்கோல்ஸ் (6), சான்ட்னர் (3) ஆட்டம் இழந்தனர். ராஸ் டெய்லர் (93), இஷ் சோதி (12) ஷமி பந்தில் ஆட்டமிழக்க, பிராஸ்வெல் (15) ரன் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் பந்தில் பவுல்ட் (2) ஆட்டமிழந்தார். இதை அடுத்து நியூசிலாந்து அணி, 49 ஓவரில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர், சகால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய் அணி 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஷிகர் தவான் (28) ரோகித் சர்மா (62), கேப்டன் விராத் கோஹ்லி (60) நல்ல அடித்தளத்தை அமைத்ததால், வெற்றி எளிதானது. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை வெற்றி பெறச் செய்தது. அம்பதி ராயுடு (40), கார்த்திக் (38) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 43 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா. இதற்கு முன், 2009ல் தோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது!

முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் 41 ரன் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தொடரில் முகமது ஷமி பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.