— ஆர். வி. ஆர்
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இந்தக் கட்சிகள் ஒரு முக்கியச் செய்தியை அவரவர் பாணியில் சொல்கின்றன, கவனித்தீர்களா? சர்ரென்று பார்க்கலாம்.
அண்ணாத்துரை தனது தலைமைப் பண்பினால் பலரையும் ஈர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார், தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை அமைத்தார். அவர் அகால மரணம் அடைந்த பின் திமுக-வின் முதல்வரான மு. கருணாநிதி தனது சாதுர்யத்தால், உழைப்பால் கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தார்.
49 வருடங்கள் திமுக-வில் கோலோச்சினார் கருணாநிதி. அப்போது, சில கட்சிக்காரர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வளர்ந்து பெருகத் துணை நின்றார். அந்தத் தலைவர்கள் கருணாநிதியின் குறிப்பறிந்து அவரைப் பாராட்டிச் சீராட்டித் தங்களையும் பக்கவாட்டில் கவனித்துச் செழித்தார்கள்.
அருமை மகன் ஸ்டாலினையும் செல்ல மகள் கனிமொழியையும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தினார் தந்தை கருணாநிதி. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் ஒதுங்கி நின்று அந்த வாரிசுத் தலைவர்களை ஆதரித்தார்கள். பிரதிபலனாக, தங்கள் தங்கள் வாரிசுகளும் கட்சிக்குள் வளர வழி செய்து கொண்டார்கள். கழகம் ஒரு குடும்பம்.
கருணாநிதியின் மறைவுக்குப் பின், தேர்தலில் மறுபடியும் திமுக ஜெயித்து ஸ்டாலின் இப்போது தமிழக முதல்வராக இருக்கிறார். கட்சிக்குள் இது ஸ்டாலினை மகிழ்விக்கும் காலம் என்பதால், திமுக–வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரது மகன் உதயநிதியை வணங்கிப் பணிந்து நிற்கிறார்கள். அவரும் பல்லக்கில் அமர்ந்து தடாலடி அரசியல் செய்கிறார்.
நடிகர் எம். ஜி. ஆர் திமுக-வில் இருக்கும்போதே சாதாரண மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். திமுக-வில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டவுடன் அதிமுக-வை அவர் வளர்த்துத் தன் ஆயுட்காலம் வரை திமுக-வை வீழ்த்தி வைத்திருந்தார். அவரால் கட்சியில் அறிமுகம் செய்து ஊக்கம் தரப்பட்டவர் நடிகை ஜெயலலிதா. எம். ஜி. அர் மறைந்த பின் தனது உறுதியால், போராட்டக் குணத்தால், கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பிடித்து முதல்வர் ஆனவர் ஜெயலலிதா.
எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மகன், மகள் என்ற குடும்ப வாரிசுகள் இல்லை. கட்சியில் எம். ஜி. ஆரைப் பக்தியுடன் போற்றியவர்கள், ஜெயலலிதாவை பயத்துடன் வணங்கியவர்கள், அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தார்கள். கருணாநிதியைப் போலவே, அந்த இரு தலைவர்களும் கட்சிக்குள் பெரும் திறமைகளை ஈர்த்தவர்களோ ஊக்குவித்தவர்களோ அல்ல.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பதினேழு வருடங்கள் இருந்தார் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி. நேரு இருந்தவரை அவர் இந்திரா காந்தியைக் கட்சிக்குள் கனகாரியமாகத் தூக்கி விடவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் அப்படியான செயலை விரும்பி இருக்க மாட்டார்கள். நேரு மறைந்த பின் லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கியது காங்கிரஸ். அவருக்குப் பின் அக்கட்சி இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியது.
இந்திரா காந்தி அமல் செய்த நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் மகன் சஞ்சய் காந்தி ஆட்டம் போட்டார். பிரதமர் இந்திரா அதை அனுமதித்தார். சஞ்சய் காந்தியும் இந்திராவும் அடுத்தடுத்து மரணித்த பின், அரசியல் அனுபவம் குறைந்த இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தியைக் காங்கிரஸ் கட்சி பிரதமர் ஆக்கியது.
ராஜீவ் காந்தியின் காலத்திற்குப் பின், ஒரு இடைவெளி விட்டு அவர் மனைவி சோனியா காந்தி கட்சியில் தலை தூக்கினார். இன்றும் கட்சியில் அவர் அதிகார மாதா. ராஜீவ்-சோனியாவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, காங்கிரஸின் இளவரசர், இளவரசி என்று பல வருடங்களாகக் கட்சியில் மிதக்கிறார்கள். அந்த இளவரசர் ஒரு தத்துப்பித்து. அவர்தான் இப்போது கட்சிக்குள் ராஜ தர்பார் நடத்துகிறார்.
இந்த மூன்று கட்சிகளுக்கு மாறாக பாஜக செயல்படுகிறது. பாஜக-வில் வாரிசுகளோ தனிப்பட்ட முறையில் தலைவருக்கு வேண்டியவர்களோ வளர்க்கப் படுவதில்லை, தூக்கி நிறுத்தப் படுவதில்லை.
இந்திரா காந்தி, கருணாநிதி, எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர், தலைவரின் வாரிசு என்ற காரணத்தால் தலைவரே மேலே இழுத்துவிட்டுக் கட்சிக்குள் தலை எடுத்தவர்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தியும் கருணாநிதியும் கட்சிக்குள் வாரிசுகளை அனுமதித்து உயர்த்திவிட்டார்கள்.
குடும்ப வாரிசு இல்லாத ஜெயலலிதா, தோழி சசிகலாவைத் தனது ‘உடன்பிறவா சகோதரி’ என்று அறிவித்து, சசிகலாவின் தகுதிக்கு மீறி அவருக்குக் கட்சிக்குள் செல்வாக்கு சேரக் காரணமாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தலைவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து அடைக்கலமும் ஆதாயமும் தேடினார்கள். ஊழல் குற்றத்திற்காக சசிகலா ஜெயிலுக்குப் போனார் என்பதை ஒரு சமயோசித சாக்காக வைத்து, அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவரே தனக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல் தடுமாறுகிறார்.
அண்ணாத்துரை-கருணாநிதி காலத்து திமுக-வை விட, இப்போதைய திமுக-வின் வலிமை குறைவு. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அதிமுக-வை விட இந்நாள் அதிமுக-வின் சக்தி மிகக் குறைவு.
இந்திரா காந்தி காலத்து தமிழக காங்கிரஸ், திமுக-வால் பலமிழந்து நின்றது. இன்றைய தமிழக காங்கிரஸ் இன்னும் சோப்ளாங்கியாய் நிற்கிறது. தமிழக பாஜக மட்டும் கடந்த மூன்று வருடங்களில் அதிவேகமாக வளர்கிறது. எந்த அளவுக்கு? திமுக-வின் துரைமுருகனே, “தமிழகத்தில் பாஜக பிசாசு மாதிரி வளர்கிறது” என்று பயத்தில் சொல்லும் அளவுக்கு.
பிற மாநிலங்களிலும் தமிழகத்திலும் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், என்ன காரணம்? நேர்மை, திறமை, துணிவு, அர்ப்பணிப்பு, ஆகிய பண்பு கொண்டவர்களைத் தன்னிடத்தே ஈர்க்கிறது அந்தக் கட்சி.
தனது மகன் மகள் என்ற பாசத்தால், அல்லது ரகசியப் பலன்களுக்காகத் தனக்கு வேண்டியவர் என்பதால், ஒரு அரசியல் கட்சித் தலைவர் கட்சிக்குள் ஒருவரைத் தாங்கி முன்நிறுத்தினால், கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களும் அதை ஏற்றுக் கொண்டால், என்ன நடக்கும்? ஒன்று, கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் திறமை அடங்கி முடங்கித் தன் இடத்தைப் பாதுகாக்கும். இரண்டு, நேர்மையான, திறமையான, செயல்திறன் மிக்க வெளி மனிதர்கள் அந்தக் கட்சிக்குள் வரத் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த மனிதர்கள் தலைவருக்கு வேண்டியவர்களிடம் பணிந்து நின்று தங்கள் சுய மரியாதையை இழக்க விரும்பமாட்டார்கள், சிறுமைப்பட கூச்சப் படுவார்கள்.
வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற காரணத்தினால் ஒரு கட்சியில் திறமையற்ற சிலர் முக்கியத்துவம் பெறுவது ஒரு தீமையின் அறிகுறி. அவர்கள் கட்சிக்குள் முன்னிலைப் படுவதுதான் கட்சித் தலைவருக்கே அதி முக்கியம் என்றால், மக்கள் நலன் அந்தக் கட்சிக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும். அந்தக் கட்சியின் ஆட்சியில் கண்துடைப்புத் திட்டங்கள் மட்டும் கோலாகலமாக நடக்கும். பார்க்கிறோமே?
திமுக, அதிமுக, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆகிய கட்சிகள், செல்வாக்கான பெரும் தலைவர்களை முன்பு கொண்டிருந்தாலும், அந்தத் தலைவர்கள் நேர்மையும் திறமையும் கொண்ட இளைஞர்களைக் கட்சிக்கு ஈர்க்கவில்லை, அத்தகையவர்கள் புதிய தலைவர்களாகக் கட்சிக்குள் வளர வழி செய்யவில்லை. ஆனால் பாஜக அந்த உன்னதக் காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இன்னொரு பக்கத்தில், சாதாரண இந்திய மக்களிடம் உள்ள ஒரு நியாய-நேர்மை உணர்வு நமக்கு வரப்பிரசாதம். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களின் ரத்தத்தில் கலந்த பண்பின் மீதி மிச்சம் அது. அதை வைத்துத் தனது நேர்மையால், திறமையால், உழைப்பால், சேவை மனப்பான்மையால், சாதுர்யத்தினால், சாதாரண மக்களை ஈர்க்க முடிகிறது பாஜக-வின் நரேந்திர மோடியால். அதோடு நாட்டின் தீய அரசியல் சக்திகளின் வலுவைக் குறைக்க முடிகிறது அவரால்.
மோடியைப் போன்ற ஒரு தலைவர்தான் அண்ணாமலை மாதிரியான ஒரு அற்புதமான இளம் தலைவரை தமிழகத்திற்காக ஈர்க்க முடிகிறது. வாரிசு மற்றும் வேண்டியவர்கள் வளரும் ஒரு கட்சியால் அண்ணாமலை போன்ற ஒரு தலைவரைக் கவர முடியாது. அண்ணாமலையும் அவர் பங்குக்குத் துடிப்பான இளைஞர்களை பாஜக-வுக்கு ஈர்ப்பார். இது ஒரு தொடர் நன்மையாக அமையக் கூடியது. பெரிய விஷயமல்லவா இது?
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து, இந்த ஒரு செய்தியைச் சொல்கின்றன என்பது தெரிகிறது. அதாவது, ஒரு கட்சி எப்படி நடத்தப் பட்டால், ஒரு கட்சியின் தலைவர் எப்படிச் செயல்பட்டால் – வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற சுயநல விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் கட்சி நடத்தினால் – மக்கள் நலன் அந்தக் கட்சியின் ஒரே குறிக்கோளாக இருக்கும், அந்தக் கட்சியின் ஆட்சியில் பொதுமக்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள், அரசாங்க கஜானாவும் நலமாக இருக்கும், என்பதை இப்படியும் அப்படியுமாகச் சொல்கின்றன இந்த நாலு கட்சிகள். சரிதானே?
Author:R. Veera Raghavan, Advocate, Chennai ([email protected])
Blog: https://rvr-india.blogspot.com