— ஆர். வி. ஆர்
நடிகர் விஜய் தோற்றுவித்த அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகம். சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது, “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும் நமது எதிரி….. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்து நம்மளை ஆண்டுகிட்டு இருக்காங்க” என்று அவர் ஊழலைக் கண்டித்தார்.
ஊழலைப் பொதுவாகக் கண்டிப்பதோடு விஜய் நிற்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அவர் குறிப்பிடும் ஊழல் அரசியல்வாதிகள் யார், அவர்கள் எந்தக் கட்சி, என்று அவர்களின் பெயரைச் சொல்லாமலே விஜய் அவர் சொல்ல வந்ததைத் தெளிவு படுத்தினார்.
சரி, விஜய் இப்படிப் பேசியதால் அவர் நிஜமாகவே ஊழலுக்கு எதிரானவர், அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் அப்போது அரசு நிர்வாகத்தில் ஊழல் பெரிதும் கட்டுப் படுத்தப் படும், அந்த முனைப்பு அவரிடம் தீவிரமாக இருக்கும் என்று அர்த்தமாகுமா? இல்லை, அப்படி அர்த்தமாகாது.
விஜய் என்னதான் ஊழல் எதிர்ப்பு பேசினாலும், தமிழகத்தின் ஆட்சி அவர் கைக்கு வந்தால் அவரும் ஊழலுடன் கைகோர்ப்பார். ஊழல் பற்றி சிலதைப் புரிந்துகொண்டல் இது தெளிவாகும்.
உங்களுக்குத் தெரிந்த ஊழலற்ற ஒரு அரசியல் தலைவரை, முதல் அமைச்சராக அல்லது நாட்டின் பிரதமராக இருந்த அல்லது இருக்கும் ஒரு அரசியல் தலைவரை, எண்ணிப் பாருங்கள். உதாரணத்திற்கு, காமராஜரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒன்பதரை ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
காமராஜர் பணத்திற்காக அல்லது மற்ற பொருளாதாரப் பலன்களுக்காக, அல்லது வேறு சுய லாபத்துக்காக, அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்ததில்லை. தனது சக அமைச்சர்களையும் அந்தக் காரியங்களைச் செய்ய அவர் அனுமதித்ததில்லை – அவர்களும் அப்படியானவர்கள் அல்ல என்பது வேறு விஷயம்.
காமராஜரின் தூய்மையான நிர்வாகத்திற்குக் காரணம் அவரது நேர்மைச் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் தேசாபிமானம். இத்தகைய தனிப்பட்ட குணங்கள் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. இந்தக் குணங்கள் உள்ளவர்கள்தான் ஊழல் செய்யாமல், ஊழலை அனுமதிக்காமல் இருக்க முடியும்.
லஞ்சம் வாங்குவது, சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்ப்பது, அரசு கஜானாவுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது, உறவினர்களையும் வேண்டப் பட்டவர்களையும் முறைகேடாக வியாபாரத்தில் கொழிக்க அனுமதிப்பது என்பதெல்லாம் நேர்மைக்கு விரோதானது, ஒழுக்கம் அனுமதிக்காதது, தேசாபிமானமும் பொறுத்துக் கொள்ளாதது. அந்த வகையில் பிரதமர் மோடியும் கமராஜருக்கு இணையான நற்பெயர் கொண்டவர்.
முன்பு பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் தனது ஆட்சியில் ஊழலையும் முறைகேடுகளையும் கண்டு கொள்ளாமல் இருந்தவர் என்ற பெயர் வாங்கியவர். காரணம், அவருக்கு அந்த அளவு ஒழுக்கமும் தேசாபிமானமும் குறைவு. அவரது பாராமுகத்தால் தேசத்திற்கு நஷ்டம் விளைவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை. பெரும்பாலும் ஒரு சமர்த்துப் பொம்மையாக நாற்காலியில் அமர்ந்திருந்தால் போதும், நாற்காலியில் அமரும் வாய்ப்புதான் பெரிது, என்றிருந்தவர் அவர்.
இப்போது நடிகர் விஜய் விஷயத்திற்கு வாருங்கள். இதுவரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை. ஒரு எம். எல். ஏ. அல்லது எம். பி-யாகவும் இருந்ததில்லை. இப்போதுதான் அரசியலில் நுழைந்திருக்கிறார். இருந்தாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல்வாதியாக, அல்லது ஊழலைப் பெரிதும் அனுமதிப்பவராக இருப்பார் (இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை) என்று நாம் சொல்லமுடியும். காரணம் அவரது சொல் செயலில் நேர்மை இல்லை. அவரிடம் ஒழுக்கமும் தேசாபிமானமும் இருப்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை – அதற்கு மாறாகத்தான் அவர் தென்படுகிறார்.
விஜய் மாதிரி, சுயநலத்துடன் காரண காரியமாக ஆளும் கட்சியை ஊழல் குற்றச் சாட்டுடன் எதிர்க்கும் வேறு சில கட்சிகளும் தமிழகத்தில் உண்டு. ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர்களுக்கு அதுவும் ஒரு எளிய வழி என்று தோன்றுகிறது. அதுதான் விஷயம்.
ஆள் சரியில்லை என்றால் அவர் பேச்சுக்கு அர்த்தம் இருக்காது. அப்படிப் புதிதாக வந்திருப்பவர்தானே விஜய்? ஊழலுக்கு எதிராக அவர் என்ன முழங்கினால் என்ன? எத்தனை முறை அவர் தோழா, தோழி, ப்ரோ என்ற ஏமாற்றுப் பிரியங்களுடன் கூட்டத்தினரை அழைத்துப் பேசினால் என்ன?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
([email protected])