
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை தொடர்பாக, சில எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
‘ பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தை உறுதி செய்து கொண்ட பிறகே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது பொய்த்தகவல், அதை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர் ‘ என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த தீவிரவாத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வர பாகிஸ்தான் தயாராக இருந்ததாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இந்தியா ‘ ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ ஆபரேஷன் சிந்தூர் ‘ என்ற பெயரில் மதச்சார்பற்ற தன்மை வெளிப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
‘ போரால் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பார்கள். இது ஒரு சாதனையா? போர் மீளாத்துயர் தரும். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. மத ரீதியான மோதலுக்கும் வெறுப்பரசியலுக்கும் வழி வகுக்கும்…’ என்றெல்லாம் கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை.
மத அடையாளம் கேட்டே தீவிரவாதிகள் சுட்டனர் என்று நாடு முழுவதிலிருந்து வெளியான பல பத்திரிகைகளும் குறிப்பிட்டுள்ளன. எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரியாக பொய் கூறிவிட்டன என்பதை விட பெரிய பொய் இருக்க முடியாது.
15 நாட்களுக்குப் பிறகே இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை நின்று நடத்தும் , அதன் பிறகு அவர்களை விசாரணைக்கு அனுமதித்து, அவர்கள் சொல்லும் பொய்யை ஏற்க வேண்டும் என்றால், முழு மூடர்கள் இந்தியத் தலைவர்களாக இருந்தால்தான் சாத்தியம்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே இந்த அறிக்கை யாருடைய குரல் என்று புரிந்து கொள்ள முடியும். இந்த ஏமாற்று வித்தையை பல ஆண்டுகளாக நாடு பார்த்து வருகிறது.
போர்க்கொடுமை, போரின் விளைவுகள் பற்றிய போதனையை பாகிஸ்தானுக்குத்தான் தர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தி வந்த தீவிரவாத சம்பவங்களுக்கு அளவே இல்லை. இது போருக்கு வழி வகுக்கும் என்று தெரியாத பாகிஸ்தானுக்கு இந்த அறிக்கையை அவர்கள் அனுப்பலாம்.
கட்டுப்படுத்தப்படாத பயங்கரவாதம் போரை விடக் கொடியது.
மோடியையும் பாஜகவையும் பிடிக்கவில்லை என்றால் அரசியல் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் காரணமாக நாட்டுக்கு எதிரான மன நிலையை வளர்த்துக் கொள்வது ஆபத்தானது.
மத்திய அரசை ஆதரிக்க மனம் வராமல், ‘ இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம்’ என்று கூறுவதற்கு அது போன்ற வக்கிர சிந்தனையே காரணம்.
மத்திய அரசு இல்லாமல் இந்திய ராணுவம் இல்லை. பிரதமர் சொல்லாத எதையும் இந்திய ராணுவம் செய்யப் போவதில்லை.
யார் என்ன சொன்னாலும், மத்திய அரசுக்கே துணை நிற்போம். நாட்டைக் காக்கும் மோடியின் முயற்சி வெல்லட்டும்.
- ‘துக்ளக்’ சத்யா





