
– ஜி.எஸ்.பாலமுருகன்.
நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.
அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா… அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு… வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு…
ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது… ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் – காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது… இதுதான் ட்ரம்ப்… நம்மூர் ‘நீட் ரத்து ரகசியம்’ போல… நீட்டும் தொடருது… போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!
இப்போ திடீர்னு இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு… அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்…
அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது…
> “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்.”
ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது…
> “மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.”
இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது…
> “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.”
ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.
> “இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.”
ஆனால் பாருங்க… ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்…😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்க பார்க்கிறார்.
நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!
- ’செய்திக்கதிர்’ வாட்ஸ்அப் குழுவில் …





