
மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் மூன்று மாத காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வால் விசாரிக்கப்பட்டு, விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் காலம் தாழ்த்தியதாக, அவருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மேற்கண்ட காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. தவிர, ஜனாதிபதியும் கவர்னரும் ஒப்புதல் அளிக்காத மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதலும் அளித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு தொடர்பாகவே ஜனாதிபதி 14 கேள்விகளின் மூலம் விளக்கம் கேட்டிருந்தார்.
நீதித்துறையும் பாராளுமன்றமும் நாட்டின் மிக முக்கிய அமைப்புகள். எது பெரியது என்ற கேள்விக்கே இடமில்லை. அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டின் மாட்சிமைக்கு எந்த ஊறும் நேராத வகையில், மிகவும் கவனத்தோடு ஜனாதிபதியின் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்டின் விளக்கத்தை அறியும் அதிகாரம் அவருக்கு இருந்ததால், அவை கேட்கப்பட்டன.
விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இரு பக்கமும் சந்தேகங்களை எழுப்பி, விளக்கம் பெற்றது.
‘ எல்லா கேள்விகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிலேயே பதில் உள்ளன ‘ என்ற தமிழக அரசின் வாதத்தை இந்த அமர்வு ஏற்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், எல்லா விளக்கமும் தீர்ப்பில் இருந்தால், ஜனாதிபதி மீண்டும் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது என்று கருதியே அவர் கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்.
1. மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், கவர்னர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்ற தமிழக, கேரள, மேற்கு வங்க அரசுகளின் வாதம் ஏற்கத்தகுந்ததா?
2. ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் அரசியல் சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்காத நிலையில், அரசியல் சட்டத்திருத்தம் செய்யாமல், சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதிக்க முடியுமா?
3. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஜனாதிபதி/கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டே ஏற்றது சரியா?
4. இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியுமா?
-முக்கியமான இக்கேள்விகளுக்கு விசாரணையின்போது, உரிய விளக்கங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஐந்து நீதிபதிகள் அமர்வு இதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கும்.
எனவே, நல்ல தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
-துக்ளக் சத்யா





