
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
ஆசிய கோப்பை ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இது ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பையாக இருந்தது.
பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் ஒரு முறை டி20 போட்டியாகவும் அடுத்தமுறை ஒருநாள் போட்டியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 2014 வரை நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. இலங்கை அணி ஐந்து முறையும் பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.
2016க்குப் பிறகு டி20 கோப்பையை இந்தியா ஒரு முறையும் இலங்கை ஒருமுறையும் வென்றிருக்கின்றன. 2016க்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான கோப்பையை இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது.
டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் இலங்கை அணி ஏழாவது இடத்திலும் பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும் ஆஃப்கானிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும் வங்கதேசம் பத்தாவது இடத்திலும் உள்ளன.
எனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஒரு ஆட்டத்தை வென்றது என்பது செய்தியே அல்ல. தோற்றால்தான் செய்தி.
செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இந்த வருட ஆசியகோப்பை போட்டி ஒரு டி20 போட்டி. முதல் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி (188/6) ஹாங்காங் அணியை (94/9) 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி (4.3 ஓவர்களில் 60/1) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை (57) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் வங்கதேச அணி (144/3) ஹாங்காங் அணியை (143/7) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (160/7) ஓமன் அணியை (67) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐந்தாவது ஆட்டத்தில் இலங்கை அணி (140/4) வங்கதேச அணியை (139/5) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று (14.09.2025) நடந்த ஆறாவது ஆட்டத்தில் இந்திய அணி (15.5 ஓவர்களில் 131/3) பாகிஸ்தான் அணியை (127/9) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிற்கு ஓமான் அணியுடனான ஒரு ஆட்டம் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்காக அணிகள் குருப் ஏ மற்றும் குருப் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குருப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஒமான் மற்றுன் ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் உள்ளன. குருப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன.
அரையிறுதிக்கு குருப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருப் பி பிரிவிலிருந்து இலங்கை வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
அரையிறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 21ஆம் தேதியும் இறுதிப் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறும்.





