
மதிமுகவுக்கு 4 தொகுதி ஒதுக்கீடு!
சட்டமன்ற தேர்தலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து.
3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 4இல் வென்றது.
– என்கிறது செய்தி!
வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், தனிச் சின்னத்தில் களம் காண வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மதிமுக விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால், திமுக கூட்டணியில் 4 தொகுதிகளே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல்களில் மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை:-
- 1996 – 177 (தனி அணி)
- 2001 – 211 (தனி அணி)
- 2006 – 35 (அதிமுக கூட்டணி)
- 2011 – தேர்தல் புறக்கணிப்பு
- 2016 – 28 (மக்கள் நலக்கூட்டணி)
- 2021 – 6 (திமுக கூட்டணி, திமுக சின்னம்)
- 2026 – 4 (திமுக கூட்டணி, 3ல் திமுக சின்னம், 1 தனிச்சின்னம்)
“எந்த சமரசமும் செய்து கொள்ளலில்லை – திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்கிறோம்!”- வை.கோ.
திமுக ஒதுக்கியது 4 தொகுதி! அதில் 3 ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி!
இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?
நான்கில் மூன்று தொகுதியில் – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் – நாளை ஒருவேளை வென்றாலும் – திமுக என்ன உத்தரவிடுகிறதோ அந்தக் “கொறடா” (WHIP) உத்தரவின்படிதான் உங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்குள் வோட்டளிக்க முடியும்.
அதாவது தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் -“உதயசூரியன்”- சின்னத்தில் நின்று வென்றதால் (அப்படி வெல்வார்கள் என்றால்) திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
நான்கில் மூன்றுபேர் திமுக சின்னத்தில் போட்டியிடுவதால் உங்கள் கட்சிப் பெயரையும் மதிமுக – என்பதில் இருந்து மு.தி.மு.க என்று மாற்றிவிடலாமே வை.கோ? அதாவது ‘முக்கால்’ திமுக!
ஆனால் ஒரு சந்தோஷமான விஷயம்…. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது நீங்கள் எகிறி எகிறிப் பேசியதற்கு – “கருணாநிதி வேறு தொழில் செய்யப் போகலாம் – உலகின் பழமையான தொழில்”-… என்றெல்லாம் பேசியதற்கு…
பத்து வருடம் ஆனாலும் பகையை மறக்காமல் வச்சி செய்துவிட்டது திமுக!
திமுகவிடமும் – கருணாநிதியிடமும் நான் பாராட்டும் ஒரே அம்சம் – இந்தப் “பகை மறவாமல் பழியெடுக்கும்” – அரசியல் போர்க்குணம்தான்.
2016 ல் அந்த எகிறு எகிறிய உங்களை – இன்று பெட்டிப் பாம்பாக 4 தொகுதிகள் மட்டும் கொடுத்து – அதிலும் 3 தொகுதிகளில் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட வைத்து ஆப்பு வைத்துவிட்டது பாருங்கள் திமுக!
அதுதான் திமுகவிடம் மற்ற கட்சிகள் கற்க வேண்டிய அற்புதமான அரசியல் பாடம்!
அரசியலில் – “பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே”- எல்லாம் வேலைக்கு ஆகாது.
“பகையை மறவாய் நெஞ்சே”- என்பதே சித்தாந்த அரசியலில் பாலபாடம்!
ஒரு கதை நினைவு வருகிறது:-
அதுவரை தான் காணாத அபூர்வமான பழத்தைக் கொண்டு வந்து காட்ட வேண்டும் – என்றான் ஒரு மன்னன்.
ஆனால் ஒரு நிபந்தனை! அந்தப் பழம் ஏற்கனவே தான் சுவைத்தறிந்த பழமாக இருந்தால் – அதைக் கொண்டு வந்தவனின் ஆசன வாயில் வைத்து ராஜா திணித்து விடுவான்!
ஒருவன் அன்னாசிப் பழத்தைக் கொண்டு வந்தான்! அது ராஜா ஏற்கனவே சுவை அறிந்த பழம்! எனவே மேலே முட்களுடன் அன்னாசிப் பழத்தை அப்படியே அதைக் கொண்டு வந்தவனின் ஆசனவாயில் வைத்துத் திணிக்கச் செய்தான் ராஜா!
கொண்டு வந்தவன் உடையின் பின்பகுதியில் ரத்தம் வழிய வழிய – அந்த நிலையிலும் பெருங்குரலில் சிரித்தான்!
“ஏனடா சிரிக்கிறாய்?”- என்றான் ராஜா.
“மகாராஜா! பின்னால் வரிசையில் பலாப்பழத்தை வைத்துக் கொண்டு ஒருவன் நிற்கிறான் – அவன் நிலைமையை நினைத்துச் சிரித்தேன்!”
அந்த நிலைதான் வை.கோ வுக்கு!
அதே மக்கள் நலக் கூட்டணியில் 2016ல் வை.கோ வுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட இரண்டு கம்யூனிஸ்டுகள், விசிக கதி என்னாகும்? ஆனானப்பட்ட வைகோ கட்சிக்கே வெறும் 4 சீட் – அதிலும் 3 உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்!
அநேகமாக CPI, CPM, விசிக இவைகளுக்கு தலா 4 சீட் கொடுத்தால் அதிகம் என்பது எனது கணிப்பு.
தேமுதிகவுக்கு 6 சீட் என்பது – 2016 ல் மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் “தருமன்” (விஜயகாந்த்) ஆக இருந்தார் என்பதால்!
அர்ஜூனனை (வைகோ) ஒருவழி ஆக்கியாயிற்று! மற்றபடி பீமன் (விசிக) நகுல – சகாதேவர்கள் (CPI – CPM) ஆகியோரை சின்னாபின்னப்படுத்தி ஒருவழி செய்துவிடும் திமுக!
அரசியலில் – “பகை மறவாமை”- திமுக பின்பற்றும் ராஜதந்திர அருங்குணம்!
- முரளி சீத்தாராமன்



