
நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. ஷூட்டிங் முடிந்ததை அடுத்து படக்குழு திரும்பியுள்ளது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து மைசூருக்கு சிறியரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க பைலட் அனுமதி கோரினார்.
அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. 2 மணி நேரம் ரஜினிகாந்த் விமானத்திலேயே இருந்துள்ளார். பின்னர் விமானம் கிளம்பி சென்றது. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், மைசூருக்குச் சென்றார்.

விமானம் கிளம்புவதற்கு தாமதமானதால், அவருடன் பயணிக்கவிருந்த பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதையடுத்து அனைவருடனும் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அவர் திடீரென மைசூர் கிளம்பிச் சென்றது ஓய்வெடுக்கவா? நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்காகவா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் எதற்காக மைசூரு சென்றார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
ரஜினிகாந்த் ஆவணப்பட ஷூட்டிங்கிற்காக அவர் அங்கு சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டுக்குள் புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள கல்கரே பகுதியில் நூற்றாண்டு பழமையான இரும்பு பாலத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ளார்.

இதுபற்றி அங்குள்ளவர்கள் கூறும்போது, காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்த இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று குறிப்பிடவில்லை. சீப் கெஸ்ட் கலந்துகொள்கிறார் என்றே குறிப்பிட்டிருந்தனர் என்றனர். இந்நிலையில், காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்த இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வன ஆர்வலர் பிரஷாந்த் என்பவர் கூறும்போது, இந்த படக்குழு முதலில் வட இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தது. அங்குள்ள அரசு அனுமதி மறுத்துவிட்டது. பிறகு கர்நாடக அரசிடம் கேட்டுள்ளனர்.

இங்குள்ள வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காட்டுக்குள் சினிமா படப்பிடிப்புகளையோ, டாக்குமென்டரி படங்களையோ எடுப்பதற்கு அனுமதி அளிப்பதை நிறுத்த வேண்டும். அது வனவிலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



