சரி இத பத்தி பேசியே ஆகனும். பல வருஷமா பல விதங்கள்ல நடந்துட்டு இருக்கற
விஷயம் இது. இப்போ சமீபமா விவேகம் படத்த முன்வச்சு நடக்குது.
மொதநாள் மிட்நைட் ஷோ. கோயம்பேடு ரோகிணில ஷோ டைமிங்க தாண்டி ஒரு மணிநேரம் கிட்ட
ஆய்டுச்சு. ஆனா மெயின் கேட்டையே திறக்காம எல்லாரயும் வெளிய நிக்க வச்சு
இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா கூட்டத்தோட கோபம் அதிகமாகி ஒரு கட்டத்துல கதவ
இடிச்சு பூட்ட உடச்சு உள்ளே பூந்துட்டாங்க. அங்க இருந்து தியேட்டர்க்கு உள்ள
வர வரைக்கும் அப்படியொரு கத்தல். கூப்பாடு. தல தலனு. படம் ஆரம்பிச்சு அஜித்
இன்ட்ரோ வரைக்கும் அந்த கத்தல் அப்படியே இருந்துச்சு.
அப்பறம் வந்துச்சு அந்த ப்ரிட்ஜ் சீன். தியேட்டர்ல மயான அமைதி. அந்த
நிமிஷத்துல இருந்து படம் முடிஞ்சு வெளிய போற வரைக்கும் அதே அமைதி. ஒரு தியானம்
மாதிரி. க்ளைமேக்ஸ் பாட்டுக்குலாம் பின்னாடி இருந்து ஒருத்தரு
‘டேய்..இதுக்காடா கேட்டலாம் ஒடச்சுட்டு வந்தோம்’ன்றாரு. இதுதான் படம்.
சிம்பிள். படம் எப்படினு அஜித் ரசிகர்களுக்கே மனசார தெரியும்.
நிச்சயமா அஜித்துக்கு இருக்கற ரசிக பலம் பிரமிப்பானது.
முதல்நாள் தியேட்டர தாண்டிப் போறவங்களுக்கே கூட இது தெரியும். கொஞ்சம் சுமாரா,
சுமாரா ஒரு படத்த கொடுத்தா கூட தனக்கு பிடிச்ச நடிகர் நடிச்சுருக்காருன்னு
அந்த படத்த கொண்டாடத் தயாரா இருக்கற கூட்டம் அது. ஆனா அப்படி சுமாரா கூட
இல்லாத படங்களதான் தொடர்ந்து கொடுத்துட்டு இருக்காங்க. நியாயமா இது
ரசிகர்களுக்கே செய்யற துரோகம் இல்லையா?
படத்துல நிச்சயம் பல பாசிடிவ் விஷயங்கள் இருக்கு. இல்லனு சொல்லல. ஆனா ஒரு படமா
தியேட்டர் இருட்டுல உக்காந்து பாக்கும்போது கொஞ்சம் கூட ஒட்டாம, அது தனியா
ஓடிட்டு இருக்கு. ரசிகன் தனியா உக்காந்துட்டு இருக்கான்.
திரைக்கதை ரீதியா பாத்தா படத்துல Conflict இல்ல. அவ்ளோதான். அது அதிகமாக
அதிகமாக தான் எந்த படமும் சுவாரசியமா இருக்கும். என்ன நடந்தாலும் அஜித் ஈசியா
எல்லாத்தயும் முடிச்சுருவாருன்னா அப்பறம் என்ன சுவாரசியம்?
ஆன்லைன் வீடியோ விமர்சனங்கள பாத்து நொந்து போய்ட்டேன். ஒருத்தர் என்னான்னா
படத்துல திரைக்கதை பயங்கரமா இருக்கு. காட்சிகளலாம் அப்படி பேக் பண்ணி
வச்சுருக்காங்கன்றாரு. இன்னொருத்தர் படக்குழுவோட உழைப்புக்காகவே எல்லா
குறைகளயும் மறந்துடலாம்னு சொல்றாரு. யாருய்யா நீங்களாம்?
ஒரு தரமான விமர்சனம் எப்படி இருக்கனும்னு சில ஆங்கில சைட்கள்ல போய் பாருங்க.
கொஞ்சம் கூட சமரசம் இல்லாம, இகழாம, புகழாம, ஒரு படத்த மட்டுமே தராசுல வச்சு
நெத்தியடியா அடிப்பாங்க.
இயக்குனர் யாரு, நாயகன் யாருன்றதலாம் மேட்டரே இல்ல.
அடுத்து இங்க அடிக்கடி பாக்கற ஒரு விஷயம் – ‘தல இருந்தாலே போதும்’ ‘தலய
பாத்தாலே போதும்’ ‘தல ஒருத்தருக்காகவே படம் சூப்பர்’. அய்யா..அவர வெறுமனே
பாத்துட்டு வர்றதுக்கு அவர் ஒன்னும் பொம்ம கிடையாது. அவர் ஒரு நடிகர். அவர்
வேலை நடிக்கறது. நல்ல படங்களா தேர்ந்தெடுத்து நடிக்கறது. அந்த அடிப்படையையே
கூட மறுத்துட்டு எப்படி ஒரு நடிகருக்கான ரசிகர்களா இருக்க முடியும்?
அவ்ளோ புடிச்சுருக்குனா ஓகே. அவர மட்டும் ரசிங்க. அதுக்காக படத்த சூப்பர்,
தாறுமாறு, ஹாலிவுட்னு முட்டுக்கொடுக்கறதுலாம் எதுக்கு? யாருக்காக முட்டுக்
கொடுக்கறீங்க? எதிர் தரப்பு ரசிகர்களுக்காகவா? பொதுமக்களுக்காகவா?
ஊடகங்களுக்காகவா? அப்படி பண்ணா ஒன்னும் ஆகாது. கடைசி வரைக்கும் அவர்ட்ட
இருந்து இதே மாதிரியான படங்கள் தான் வந்துட்டே இருக்கும். நீங்களும்
உள்ளுக்குள்ள ஏமாந்துட்டு வெளிய சூப்பர், பயங்கரம்னு பொய்யா நடிச்சுட்டே
இருக்கனும். வீரம் சூப்பர்னு சொன்னதால தான் ஒரு வேதாளம் வந்துச்சு. வேதாளம்
பயங்கரம்னு சொன்னதாலதான் விவேகம் வந்துருக்கு. விவேகம் ஹாலிவுட் மாதிரினு
சொன்னா அடுத்து இதவிட கேவலமான ஒரு படம்தான் வரும்.
இன்னொன்னு… ஒரு படம் நல்லா இல்லனு ஒரு ரசிகனுக்கு தெரிஞ்சுட்டா வெளிய வந்ததும்
அவன் சொல்ற வார்த்தை என்ன தெரியுமா? ‘படம் ஓடிரும்’ ‘கலெக்சன் பாத்துரும்’.
அதுல தெரிஞ்சுக்கலாம் படம் எப்டினு. படத்தோட வசூல பத்தி ரசிகனுக்கு என்னய்யா
கவலை? அது வியாபாரம். At the End of the day, நைட் படுக்கும்போது ஒரு
நல்ல/சுவாரசியமான படத்த பாத்தோமான்ற திருப்தி வருதா இல்லையான்றதுதான்
முக்கியம்.
நிச்சயம் இந்த படக்குழு உழைக்கத் தயங்கற குழு கிடையாது. படம் பாக்கும்போது இது
தெளிவா தெரியுது. அப்ப பிரச்சினை எங்க?
திரைக்கதை குறித்த புரிதல்கள்லதான். திரைக்கதை அமைப்புலதான். எழுத்து ரீதியா
இப்படியொரு லாஜிக் இல்லாத, குறைந்தபட்ச சுவாரசியமே இல்லாத, க்ளீஷேக்கள்
நிறைந்த ஒரு படத்த எழுதி முடிச்சவே இந்த படம் தோத்துருச்சு. அதுக்கப்பறம் அத
வச்சு உயிரையே கொடுச்சு உழைச்சாலும் என்ன வந்துரப் போகுது?
படம் நல்லா இல்லைனு சொன்னா இவங்க நம்ம மேல பாயுற இன்னொரு விஷயம் – Hard Work.
என்னா ஹார்ட் வொர்க் பண்ணிருக்காங்க…எத்தனை ஆயிரம் பேர் உழைச்சுருக்காங்க…அத
போய் இப்படி பொசுக்குனு நல்லா இல்லனு சொல்றீங்களே? அய்யா உழைப்பது எல்லா
தொழிலிலும் அடிப்படை. உழைப்பு தேவைப்படாத ஒரு தொழிலை சொல்லுங்க பாப்போம்.
அதையே ஒரு பெருமையா, படத்தோட பாசிடிவ்வா சொல்றது என்ன வகையான மனநிலை?
அஜித் இவ்ளோ ஹார்ட் வொர்க் பண்ணிருக்காருன்னா அது அவரோட தொழில். அதுக்காக அவர்
தன்னை முழுமையா கொடுத்துதான் ஆகனும். அதுக்காக நான் அவரோட உழைப்ப குறையா
சொல்லல.
பெர்சனலா எனக்கு அவரோட இந்த ட்ரான்ஸ்பார்மேஷன் மிகப்பெரிய உந்துதலா இருக்கு.
வேதாளத்துல அப்படி இருந்த மனுசன், இந்த வயசுல இப்படி கஷ்டப்ட்டு
ஃபிட்டாயிருக்காரே..நம்மளும் இனிமேலாச்சும் உடம்ப கொஞ்சமாச்சும் கவனிக்கனும்னு
பெர்சனலா என்னை மோட்டிவேட் பண்ணிருக்கு. ஆனா அது பெர்சனலா. அத படத்தோட சேத்து
வச்சு பாருன்னு சொல்றது சிறுபிள்ளைத்தனம். அப்டி படத்தோட சேர்த்து வச்சுதான்
பாப்பீங்கன்னா, அஜித் இவ்ளோ உழைச்சும் அத ஒட்டுமொத்தமா வேஸ்ட் பண்ண இயக்குனர்
மீது நியாயமா உங்களுக்கு தான் கோபம் வரனும்.
அடுத்து…எத்தன ஆயிரம் பேரோட உழைப்பு தெரியுமா? தெரியும். ரொம்ப நல்லா
தெரியும். இந்த படம் நல்லா இல்லனு சொல்றதால அத்தன ஆயிரம் பேருக்கும் நஷ்டம்
வந்துரப் போறது இல்ல. அத்தனை ஆயிரம் பேரும் தாங்கள் உழைச்சதுக்கான கூலிய
வாங்கிருப்பாங்க. இந்நேரம் வேற ஒரு படத்துல அதே அளவு உழைச்சுட்டு இருப்பாங்க.
அதனால தயவுசெஞ்சு சினிமா இத்தன ஆயிரம் பேரோட உழைப்பு உழைப்புனு திருட்டு
விசிடிக்கு எதிரா சொல்ல வேண்டிய மேட்டர விமர்சங்களுக்கு எதிரா சொல்லி ஒரு
சாப்ட் கார்னர் தேடி எஸ்கேப் ஆகப் பாக்காதீங்க.
அப்படி ஆயிரம் பேர் உழைச்ச ஒரு பொருள தரக்குறைவாக பேசக்கூடாதுன்னா சாராயம்
செய்யக்கூட அதே ஆயிரம் பேரோட உழைப்பு தேவை. சிகரெட் செய்ய தேவை. அவங்க அவ்ளோ
உழைச்சு செய்ற பொருள பயன்படுத்தறது தப்புனு சினிமா ஸ்க்ரீனுக்கு கீழயே
போடறாங்களே..அது தப்புனு சொல்லுங்களேன் !!
ஒரு சினிமாவை விமர்சிப்பது உங்களுக்கு அவ்வளவு கோபத்தை கொடுக்கிறது என்றால்,
அந்த விமர்சனங்களை களையெடுக்க இவ்வளவு கவனங்கள் செலுத்துவீர்கள் என்றால், அந்த
கவனத்தில் ஒரு பகுதியை அந்த படத்திற்கான திரைக்கதை எழுதும்போது செலுத்தினாலே
போதும். படம் நிச்சயம் ஒரு தரமான படமாக வரும். படம் மொக்கனா
கலாய்ச்சுருவாங்களேன்ற பயமே கூட படத்த இன்னும் கவனமா எழுதறதுக்கான ஒரு Force
தான். இத நான் கண்கூடாவே பாத்துருக்கேன்.
அதுலயும் பேஸ்புக் எவ்வளவோ மேல். படம் ரிலீசான கொஞ்ச நேரத்துல படத்தோட நியாயமா
ரிசல்ட் தெரிய ஆரம்பிச்சுருது. ஆனா இந்த ட்விட்டர்…யப்பா… என்ன படம் வந்தாலும்
சரி…அந்த படக்குழுவுக்கு தெரிஞ்ச அத்தன சினிமாக்காரங்களும்
சூப்பர்..தாறுமாறுனு பாராட்டி எழுதிட்டு தான் மறுவேலை. நான் பாத்து ட்விட்டர்ல
இவங்க நல்லா இல்லனு சொல்ற படமே இல்ல. வர்ற எல்லா படமுமே ‘வாட்டே ப்லிம்’ தான்.
சினிமாவை சேர்ந்த கூட்டமும் சினிமாவை வச்சு பிழைக்கும் கூட்டமும்னு சேர்ந்து
முழுக்க ஜால்ராக்களின் கூடமா இருக்கு. இது அவங்களுக்கு சோறு போடற சினிமாவுக்கு
செய்ற மிகப்பெரியம் துரோகம் !! இதப் பத்தி சாரு நிவேதிதா இன்னைக்கு ஒரு
சூப்பர் கட்டுரை எழுதிருக்காரு. படிச்சுப் பாருங்க.
சத்தியமாக இது அத்தனையும் அத்தனை பெரிய நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும்
பொருந்தும். நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கும் பொருந்தும். ஆனால் விஜய்க்காவது
துப்பாக்கி, கத்தி, தெறி என்று குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு தரமான மசாலா படம்
ஒன்று வந்துவிடுகிறது. ஆனால் அஜித்திற்கு அதுவும் வராமல் இருப்பதற்கு காரணமே
இந்த ‘எத எடுத்தாலும் பாப்போம்’னு கத்தும் கும்பல்தான். கமர்ஷியல் படங்கள
யாரும் வெறுப்பதில்லை. எல்லாருக்கும் கமர்ஷியல் படங்கள்னா அவ்ளோ புடிக்கும்.
நல்ல சுவாரசியமான கமர்ஷியல் படங்கள் கொடுங்க என்பதுதான் எல்லோரது வேண்டுகோள்.
ஆதங்கம்.
ரசிர்களுக்கு மட்டும் பிடிக்கும். பிடிச்சா போதும்ன்றதே படம் தேறாதுன்றதுக்கான
சமாளிப்புதான். அப்படி நிஜமாவே ரசிகர்களுக்காக ஒரு படம் பண்ணனும்னு நினைச்சா
பண்ண வேண்டியது என்ன தெரியுமா? தரமான கதைய தேர்ந்தெடுக்கறதுல கவனம் செலுத்தி,
ரசிகனுக்கு உள்ளுக்குள்ள அழுதுட்டே வெளிய சிரிக்கற நிலைமைய கொடுக்கமா, வசூல
பத்தி பேசி சமாளிக்கற நிலைமைய கொடுக்காம, ‘எங்க தலைவர் மட்டுமே போதும்’னு
முட்டுக்கொடுக்கற நிலைமைய கொடுக்காம, படம் முடிச்சதும் நெஞ்ச நிமித்திட்டு
திருப்தியா வெளிய வர்ற மாதிரி, உள்ள போறதுக்கு முந்தி வெடிக்கற வெடிய படம்
முடிச்சுட்டு வந்து சந்தோஷத்துல வெடிக்கற மாதிரியான ஒரு தரமான படத்த
கொடுக்கறதுதான் !!
– முகநூலில் Jeyachandra Hashmi




