
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இதுகுறித்த முக்கிய தகவலை தனுஷ் தற்போது தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
‘வடசென்னை’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தனுஷ் தனது ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் வாக்கு கொடுத்துள்ளார். அதற்கு முன்னர் வரும் ஜுலை 28ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்



