ஊடகங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் லால். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் மோகன் லால். தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மோகன் லால் இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 9 முறை கேரள அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். திரைத்துறைக்கு நடிகர் மோகன் லால் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
நடிகர் மோகன் லால் இதுவரை 340 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மோகன் லாலுக்கு சுச்சித்ரா என்ற மனைவியும் பிரனவ், விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மோகன் லால் குறித்து தீயாய் பரவி வரும் ஒரு வதந்தி கடந்த மூன்று நாட்களாக மலையாளம் மட்டுமின்றி இந்திய சினிமாத்துறையையே உலுக்கி வருகிறது.
அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நடிகர் மோகன் லால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக வதந்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. அதில், கொரோனா பாதிப்பால் நடிகர் மோகன்லால் உயிரிழந்து விட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மோகன் லாலின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் வரை சென்றதால் பரபரப்பு கூடியது. இதனை தொடர்ந்து, வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
மேலும் பேசிய முதல்வர் போலி செய்திகள் இப்போது பரவலாக பரப்பப்படுகின்றன. கொரோனாவை தடுக்க மருத்துவர் மருந்துகளை கூறுவது போன்ற வாய்ஸ் மெஸேஜ் ஒன்றும் வைரலாகி வருகிறது. இதுபோன்ற விஷயங்களில் ஊடகங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோகன் லால் குறித்து பரவிய வதந்தி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி ஏப்ரல் ஃபூலாக்க இதுபோன்ற வதந்தியை, மோகன் லால் நடித்த படத்தின் காட்சிகளை வைத்தே வெளியிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வதந்தியை பரப்பியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி கூறும் வகையில் மக்கள் மாலை 5 மணிக்கு கைகளை தட்ட வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்துக் கூறிய நடிகர் மோகன் லால், கைகளை தட்டுவதால் ஏற்படும் ஒலி மந்திரம் போன்றது.
பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இதனால் சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்தனர். இந்நிலையில் நடிகர் மோகன் லால் குறித்து இப்படி ஒரு வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர் சில விஷமிகள்.