தங்கமகன் – THANGAMAGAN – தங்கா மகன் …

ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது …

இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் …

இத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா காலிலும் , மனைவி காலிலும் விழும் இடத்தில் தேசிய விருதை சும்மா வாங்கிவிடவில்லை என நிரூபிக்கிறார் . ஆனால் அவர் படத்தை பார்ப்பதற்கு அது மட்டுமே போதுமா ? யோசிக்க வேண்டும் …

ஆங்கிலோ இந்திய பெண்ணாக எமி ஜாக்சனும் , அவருக்கு ஆண்ட்ரியாவின் குரலும் நன்றாகவே பொருந்துகின்றன . ஆனால் பிகினி போட்டு அழகு பார்க்க வேண்டிய பெண்ணை சுடிதாரில் அலைய விட்டு ” நானும் ரவுடி தான் ” படத்தில் வரும் காமாட்சி போல ஆக்கி விட்டார்கள் . அரை பீருக்கு போதையாகி இவர் தனுஷை அடிப்பதெல்லாம் படத்துக்கு கிடைத்த யூ செர்டிபிகேட் போல ஓவர் . இவர்கள் இருவருக்குமான லவ் சீன்ஸ் தான் நம்மை முதல் பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கின்றன . அதற்கு சதீஷும் ஒரு காரணம் …

சமந்தா போல மனைவி கிடைத்தால் எமி என்ன ஏஞ்செலினா வையே கழட்டி விடலாம் . தனுஷ் – சமந்தா இருவருக்குமான காட்சிகள் குறைவாக இருந்தாலும் கச்சிதம் . பொயட்டு தனுஷ் வரிகளில் அனிருத் இசையில் பாடல்கள் நல்ல மெலேடி . ஓட்டக்கருவாடு போல பாடல் இல்லாதது வருத்தமே . பி.ஜி யில் பெரிசாக ஒன்றுமில்லை . குமரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் நாம் நாடகம் பார்க்கிறோம் என்கிற உணர்வை தவிர்க்கிறது …

டீன் ஏஜ் காதல் , அப்பா சென்டிமென்ட் இவற்றை ஓவராக வழிய விடாமல் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் வேல்ராஜ் . அதே சாமர்த்தியம் படம் நெடுக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . குறிப்பாக இடைவேளைக்கு பிறகு
” தமிழ்நாட்டுல தமிழ் தோக்காது ” என்றெல்லாம் தனுஷ் பஞ்ச் பேசும் போது
” ஆமா ஆந்திரால தெலுங்கு தோக்காது , கேரளாவுல மலையாளம் தோக்காது”
என்று விசு போல நம்மை வசனம் பேச வைத்துவிடுகிறார்கள் . அர்னால்டை வில்லனா போடலாமா , அமீர்கான வில்லனா போடலாமானு மாமானரு யோசிச்சா மருமகனோ இன்னும் அமுல் பேபி மூஞ்சியா பாத்து வில்லனா போடறது என்ன சாரே ?! …

கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடிக்கடி நடப்பது மறந்து விடுவது போல நம்மையும் விஜய் சேதுபதி மாதிரி ” ஆமா படத்துக்கு வந்தோம் , அப்புறம் என்ன ஆச்சு ” என்பது போல் சில இடங்களில் புலம்ப வைத்து விட்டார்கள் . கவர்மென்ட் குவாட்டர்ஸ் இல் குடியிருக்கும் தனுஷ் குடும்பத்தை அப்பா இறந்தவுடன் ஒருவர் வந்து வீட்ட காலி செஞ்சுருங்க என்று சொல்வதெல்லாம் என்ன லாஜிக்கோ ?! அவர்களுக்கே வெளிச்சம் . தனுஷ் – வேல்ராஜ் கூட்டணியில் கடந்த வருடம் வந்த வி.ஐ.பி வசூலை அள்ளியதோடு நன்றாகவும் பேசப்பட்டது . ஆனால் இந்த வருடம் வந்திருக்கும் தங்கமகன் நம்மிடையே எந்த உரசலையும் ஏற்படுத்தாத விதத்தில் மனங்களில் தங்காமகன் …

விமர்சனம்: அனந்த நாராயணன் 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.