
என் பெயர் ரங்கராஜன் நரசிம்மன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். என் கையாலாகாத தனத்தினை நான் உலகிற்குக் கூறிக்கொள்ளும் பதிவு.
ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும், வாட்ஸப்பில் வரும் ஏதேதோ வீடியோக்களையும், செய்திகளையும் விடாமல் படித்து முடிக்கும் நாம் ஒரு சில நிமிடங்கள் இந்த பதிவை படித்து நம் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு செய்யப்படுகின்றது. எவ்வளவு பேர் படிப்பீர்கள். எவ்வளவு பேர், ஒரு இரண்டு வரி படித்துவிட்டு இதை டிலீட் செய்வீர்கள். எவ்வளவு பேர் படிக்காமல் பார்வேர்டு செய்வீர்கள் என்பது அவரவர்களுக்கு வெளிச்சம்
விருப்பமுள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீரஙகம்
ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு நித்ய பூஜைகளில் தடை.
ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் இரண்டாம் ப்ராகாரத்தில் ப்ரதக்ஷிணம் (வலம் வருதல்) செய்வதற்குத் தடை
ஸ்ரீரங்கத்தில் (மூலவர்) பெருமாளின் திருமேனியையே மாற்றினர்.
ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதியின் உள்ளே இருக்கும் திருவரங்கத்தமுதனார் சன்னதியில் இருந்த மூலவர் பெருமாள் காணாமல் போனார்.
ஸ்ரீரங்கத்தில் பெரியோர்களால் நிர்மாணிக்கப்பட்ட பழைய கதவுகளும் அனைத்தும் மாற்றப்பட்டு (உயர் நீதிமன்ற தடையை மீறி) தொலைக்கப்பட்டன.
ஸ்ரீரங்கத்தில் இன்றும், பெரிய பெருமாள் (ரங்கநாதரின் பெயர்தான்) திருமடப்பள்ளியில் இன்றும் மல மூத்ரங்கள் கழிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கத்தில் பலவிதமான ஆகம விதிமுறை மீறல்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவ்வனைத்தையும் இதுநாள் வரையில் கண்டும் காணாமல் இருந்தேன் நான். பாவியேன்!
*இப்பொழுது திருக்கண்ணபுரம்*.
நேற்று நடக்க வேண்டிய ப்ரஹ்மோத்ஸவம் இன்று நிருத்தப்பட்டது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு விக்னமும் (தடையும்) இல்லாமல் நடைபெற்று வந்த ப்ரஹ்மோத்ஸவம் இன்று இந்து அறமில்லாத் துறை நாஸ்திகர்களால் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீராமாயணத்தில், ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேகம் இனிதே நடைபெற்றது. விபீஷ்ணாழ்வானுக்கு ஸ்ரீராமன் தன் திருவாராதன பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதனை ப்ரணவாகார விமானத்தோடு பரிசாக அளித்தான். விபீஷணன் பெருமாளை இலங்கைக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சென்று கொண்டிருக்கு நேரத்தில் ப்ரஹ்மோத்ஸவத்தின் முஹூர்த்தம் வந்ததால், இரண்டு காவிர்க்கரைக்கு இடையில் ஸ்ரீரங்கத்தில் இறங்கி ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்தினான் என்பது ஸ்ரீ ராமாயணம் அறிந்த குழந்தைக்குக் கூடத் தெரியும்.
ஆனால் இன்று சௌரிராஜப்பெருமாளின் ப்ரஹ்மோத்ஸவம் எந்தக் காரணமும் இன்றி திட்டமிட்டு இந்து அறமில்லாத்துறையால் நிறுத்தப்பட்டது. இதை ஆஸ்திகர்கள் எவரும் தடுக்க ஒரு முயற்சியும் எடுக்காத அவல நிலை.
மற்றவர்களின் அராஜகத்தால் இது நடந்தது என்று அரசியல் பேசுவதற்காகவும், மற்ற மதங்களை தாக்கி, லஞ்ச ஊழல்களின் பேரில் இந்தப் பழியைப் போட்டுவிட்டு மூன்று வேளையும் மூக்கைப்பிடிக்க தின்பவன் நானல்ல.
இது என்னுடைய கையாலாகாத தனத்தாலும், மெத்தனப் போக்காலும், திருக்கண்ணபுரத்து எம்பெருமானின் மீது எனக்கு இருக்கும் அலட்சியத்தாலும், என் சுயநலத்தால் கோவிலில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று, நான் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கும் பணத்தினை நான்கு பேருக்குச் சொல்லி, நான் செய்தேன் நான் செய்தேன் என்று சந்தர்பவாதியாக சுயநலமாக மார் தட்டிக்கொண்டு வெட்டியாக காலத்தை கழிக்கும் *என்னாலேயே* இது நடந்தது.
உபன்யாஸங்கள் கேட்டு என்ன பயன்?! ஸ்வாமி ராமாநுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளை, பல கோடி ரூபாய் செலவுசெய்து, தங்கக்குடம் வெள்ளிக்குடம், தங்க வட்டில், வைர பூணூல், தங்கக் க்ரீடம், வைரக் க்ரீடம், 108 உயரமான ராமாநுஜர் உருவச் சிலை, ராமாநுஜர் மணிமண்டபம் என்று படாடோபம் செய்வதனால் என்ன பலன்?
ஒரு நான்கு ஆத்மாக்கள் திருக்கண்ணபுரம் ஸவுரிராஜப்பெருமாளின் ப்ரஹ்மோத்ஸவத்திற்காக இல்லாமல் இவ்வளவு படாடோபம் செய்வது ஸ்வாமி ராமாநுஜரின் திருவுள்ளத்தையும், ஆழ்வார் ஆசார்யர்களின் திருவுள்ளத்தையும் எவ்வளவு வேதனை அடையச் செய்யும் என்பது நினைத்துக்குட்ட பார்க்கமுடியாததாக இருக்கின்றது.
நடந்தது என்ன? சென்ற மாதம் ஒரு நாள் இந்த கோவிலின் செயல் அலுவலர், இந்தக் கோவிலில் ஜூன் மாதம் 1ஆம் தேதி பாலாலயம் நடக்க இருப்பதால், அன்றையதினம் துடங்க இருக்கும் ப்ரஹ்மோத்ஸவம் ரத்து செய்யப்படுகின்றது என்று தன்னிச்சையாக அறிவிப்புப் பலகை வைத்தார்.
27 மே வரை இது குறித்து எந்தவித மறுப்போ, புகாரோ இந்து அறங்கெட்ட துறைக்கு நான் அனுப்பவில்லை. ஏன் என்றால், ஸ்ரீரங்கத்திலேயே இருக்கும் எனக்கு இங்கு நடக்கும் அவல நிலையைப் பற்றி கண்டும் காணாமல் இருக்கும் எனக்கு திருக்கண்ணபுரத்தில் என்ன நடக்கின்றது என்று எப்படித் தெரியப் போகின்றது?! தெரிந்தாலும் நான் எதாவது செய்துவிடவா போகிறேன்!
ஏதோ ஒரு ஆத்மா இது தெரிந்து இந்து அறங்கெட்ட துறைக்கு புகார் கொடுத்ததன் பேரில் பாலாலயம் நிறுத்தப்பட்டது.
ஆகமங்கள், எக்காரணம் கொண்டும் உத்ஸ்வங்களை கோவில்களில் நிறுத்தக்கூடாது என்றும் அவ்வாறு நிருத்தப்பட்டால், அது அரசுக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதெல்லாம் நம்பிக்கை உடைய ஆஸ்திகனுக்காக எழுதப்பட்டது. இது எல்லாம் பத்தாம் பசலித்தனம் என்று அலட்சியப்போக்காகவும் நமக்கு இன்று பொழுது இனிதே நடந்தால் போதும் என்று இருப்பவர்களுக்கும் அல்ல. இப்படி இருக்கும் என்னால் தானே இன்று உத்ஸவம் நடக்காமல் போனது!?
கோவில்களை சிதைப்பதற்கும், கோவில்களின் ஸம்ப்ரதாய முறைகளில் தடைசெய்வதற்கும், கோவில்களின் சான்னித்யத்தைக் கெடுப்பதற்கும், நம் ஸ்வாமி மீது நமக்கு அவநம்பிக்கை பிறப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யுக்தியை கையாளும் இந்த அறங்கெட்ட துறை ராக்ஷசர்களை பெருமாள் பார்த்துக்கொள்வான் என்று சௌகரியமாகக் கூறி ஒதுக்கிப் போகிம் பேடையாக நான் இருக்கும்வரையில் இந்த அசுரர்களின் பலம் ஓங்கிக்கொண்டே போகும்,
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்றால், சாதுக்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது, அது குறித்து எம்பெருமான் மிரளும் போது காடு என்ன, ஈரேழு லோகமும் அழியும்.
பரித்ராணாய சாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே!
என்று க்ருஷ்ணன் கூறியுள்ளான். நாம் உதாசீனர்களாக இருந்தாலும், அவன் ஒருபோது அடியார்களுக்கு கிடைக்கும் துன்பத்தைப் பொருத்துக்கொள்ள மாட்டான். அதற்காக நான் கூப்பிடாமல் அவன் வரமாட்டான் அல்லவா? நான் கூப்பிடுவேனா?!
அடியேன் ராமாநுஜ தாஸன்
ரங்கராஜன்



