பொது விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் எனது சிறிய வேண்டுகோள்: தயவு செய்து ரொம்பவும் எமோஷனல் ஆக இருக்காதீர்கள். அதுவும் முக்கியமாக செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள்களில் வரும் செய்தியை நம்பி தயவுகூர்ந்து உணர்ச்சிவசப்படாதீர். ஒரு சிறிய விஷயத்தை மட்டும் விரிவாகக் கூறுகிறேன்… ஏன் செய்திகளைப் படித்ததும் உணர்ச்சிவசப் படக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்!
திருமுருகன் காந்தி என்பவர் திடீர் போராளியாக உருவாகி – ஐநா புகழ் திருமுருகனாக உருவகம் செய்யப்பட்டு, இப்போது சென்டிமென்ட் வீடியோ வெளியிட்டு கொஞ்சம் கூட கூசாமல் மக்களை உணர்வுப் பூர்வமாக தூண்டி ஏமாற்றம் செய்து வருகிறது ஒரு குழு என்பது என் குற்றச்சாட்டு.
ஏன் கூறுகிறேன் என்றால் என்றாவது நீங்கள் கேட்டதுண்டா? இரண்டு கேள்விகள்… 1.யார் அழைப்பின் பேரில் திருமுருகன் போன்றவர் ஐநா சபைக்குச் சென்று பேசுகிறார்கள்? 2.அப்படிப் பேசி இதுவரை என்ன நடந்துள்ளது என்று?
இதுதான் சிக்கல்… மிக எளிமையாக இதன் பின்னணியைக் கூறுகிறேன்…
ஐநா – அதன் கீழ் இயங்கும் UN General Assembly, UN Secretariat, International Court of Justice (நாடுகளின் அனுமதியோடு உலக அளவில் நீதி விசாரணை நடத்தும் அமைப்பு), UN Security Council (நாடுகள் மத்தியில் எல்லை பிரச்னை தொட்டு அனைத்திலும் ஒரு அமைதியை நிலை நிறுத்துவது), UN Economic and Social Council (நாடுகளிடையே வர்த்தக பொருளாதார பிரச்னைகள் தீர்ப்பது) மற்றும் UN Trusteeship Council இந்த 6 மட்டுமே கொஞ்சம் வலுவான அமைப்புகள்.
ஆனால் இதற்கே கூட பெரிய அதிகாரம் எல்லாம் கிடையாது. ஓரளவுக்குத்தான் அதிகாரம் உள்ளது! ஏனென்றால் உலக நாடுகள் 193 சேர்ந்து கொஞ்சம் ஒத்துழைப்போடு நகர்வதால்!
இதற்கு யார் நிதி கொடுப்பது ?
இதற்கு மொத்த நிதியில் (GNP) 27% நிதி ஒதுக்குவதே அமெரிக்கா. அடுத்து ஜப்பான், ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இந்தியா என்று, நிதி அனைத்து நாடுகளும் தரும். ஏழை நாடுகள் மிக மிகக் குறைவான நிதிப் பகிர்வு. ஏறக்குறைய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் நிதியிலும் இயங்கும் ஐநாவில் போய்க் குரல் கொடுப்பது சற்று சவாலானதுதான்!
இப்போது திருமுருகன் காந்தி விவகாரத்தில் இது எதற்கு?
இந்த முக்கியமான ஐநா.,வின் 6 பிரிவுகளுக்கே பெரிய அதிகாரம் இல்லாத நிலையில். இதில் ஐநா.,வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒரு பகுதியாக உள்ள UNHRCக்கு என்ன மரியாதை இருக்கும்? (அதை விடக் கொடுமை… இவர்கள் எவருமே UNHRCல் கூடப் போய் பேசுவது இல்லை என்பது தான்!}
ஏனென்றால் இவர்கள் என்றுமே சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமைக் குற்றங்கள் பற்றியோ, இல்லை அங்கே உள்ள கருத்துச் சுதந்திரம் பற்றியோ பெரிய அளவில் பேசுவதில்லை. ஆனால் எந்நேரமும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவிப்பதும் – இந்தியா பெண்கள் பாதுகாப்பு இல்லை என்று அறிக்கை விடுவது, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொடுக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில், அந்த அந்த நாடுகளையே அவமானம் செய்வது, கேள்வி கேட்பது என்று ஒரு அரசியலைச் செய்து வருகிறது. இது தான் உண்மை நிலை! இதனால்தான் அமெரிக்கா அண்மையில் வெளியேறியது. ஐநாவின் மொத்த செலவினத்தில் 4ல் 1 பகுதியை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவே இதைக் கண்டுகொள்வது இல்லை. அதே போல் ரஷ்யா, சீனா எல்லாம் இதை ஒரு அமைப்பாகக்கூட மதிக்காது.
{உலக அளவில் அகதிகள் சார்ந்த விஷயத்தில் மட்டும் தான் எனக்குத் தெரிந்து இந்த அமைப்புக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. அதுவும் ஐநாவின் தார்மீகக் கடமை என்பதால் வேறு வழியில்லை.}
ஆக, இந்த UNHRC அமைப்பில் கூட திருமுருகன் பேசவில்லை. பின் எங்கே பேசினார்?
UNHRCயின் எந்த ஒரு மாத, ஆண்டு அறிக்கையிலும் திருமுருகன் போன்றவர்கள் பேசிய பேச்சு, பதிவு செய்யப்பட்டதாக ஒரு வரி கூட இல்லை. பின் எங்கேதான் பேசினார் என்றால், அங்கேதான் ஒட்டுமொத்த திரைக்கதையும் இருக்கிறது.
இது ஒரு ஏமாற்றுத் தந்திரம். இவர்கள் போய்ப் பேசி வருவது தொண்டு நிறுவனங்கள் கூட்டும் கூட்டத்தில். அதாவது மிக எளிமையாகக் கூறினால் இந்த UNHRC கீழ் மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 5039 அமைப்புகள். இவை பல காரணங்களுக்காகப் பதிவு செய்து வைத்துள்ளன.
பெண்கள் பாதுகாப்பு முதல் வர்த்தக குழுக்கள் பாதுகாப்பு வரை. நீங்கள் வேண்டும் என்றால் கூட தாராளமாக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி – அதை முறையாகப் பதிவு செய்து ஐநாவின் இந்த UNHRCல் விண்ணப்பிக்கலாம் – நிச்சயம் படிமுறையாக அனுமதி கிடைக்கும்.
Special consultative status கிடைப்பதும் அவ்வளவு பெரிய கடினம் அல்ல. (General consultative status என்பது இன்னும் சில அங்கிகாரம் என்பது, பெரிய அளவில் உலக நாடுகள் முழுவதும் இயங்கும் NGOகள் பெறும். உங்களுக்கு அந்த முழு NGO லிஸ்ட் வேண்டும் என்றால் அதன் விவரம் ஐநாவின் NGO பிரிவில் கிடைக்கும்)
அப்படி நீங்கள் NGOவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தேவையான போது ஜெனிவாவில் உள்ள கட்டடத்தில், முன்பே விண்ணப்பம் செய்து, நான் கூட்டம் நடத்தி விவாதம் செய்யப் போகிறேன் என்று பதிவு செய்து கொள்ளலாம். இப்படி கூட்டங்கள் தினமும் கூட நடைபெறும். எனவே இங்கே யார் வேண்டுமானாலும் போய்ப் பேசலாம்.
எனவே திருமுருகனைப் போன்றவர்களை ஏதோ ஐநா.,வே அழைத்து சிறப்பு தகுதியுடன் பேச வைத்தது போல இங்கே ஒரு படம் காட்டப்படுவது மக்களை முட்டாள் ஆக்கும் வேலை! இதற்கு ஐநா என்று பொத்தாம் பொதுவாகப் பெயரை வைத்துப் புகழ் தேடுவது நயவஞ்சக நாடகம்!
ஒருவேளை உங்களிடம் NGO இல்லை என்றால் – வேறு யாராவது நடத்துவார்கள் இல்லையா – அதில் நானும் வந்து இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்புகிறேன் என்று விண்ணப்பித்தால் அதற்கும் வழி உண்டு. மிக முக்கியமாக, “நம் நாட்டுக்கு எதிராக நீங்கள் பிரிவினைவாதம் பேசத் தயார் என்றால், உங்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்து, ஐநா கட்டடத்தில் நடக்கும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள நிதியும் வழங்க ஒரு கூட்டமே இருக்கிறது. எனவே, இது பிரிவினைவாதிகளின் ஒரு நாடகம். அவ்வளவே!’
எனவே தான் முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன் “பேசி என்ன நடந்தது? என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்!
மே 17 இயக்கம் என்று சொல்லி, இலங்கைப் படுகொலைக்கு நீதி கேட்கப் போகிறேன் என்று இவர் போன்றவர்களும் மேலும், 10,11 இயக்கங்களும் சில ஆண்டுகள் முன்பு வெளியில் செய்திகளில் வலம் வந்தார்கள். ஐநா.,வில் வாக்கெடுப்பு… வாங்க போராடலாம் தமிழ் சொந்தங்களே என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனால் இவர்கள் சாதித்தது என்ன? தமிழகத்தில் 3 நாட்களுக்கு வியாபரம் படுத்ததுதான் மிச்சம்! சிலரை சிறைக்கு அனுப்பிய சாதனையைச் செய்தார்கள்.
ஆக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்:
இவர்கள் போய்ப் பேசிவிட்டு வந்தது ஒரு தொண்டு நிறுவனங்கள் கூட்டும் side-events. இதை UNHRC கூட காதில் வாங்க மாட்டார்கள். இதில் எப்படி ஐநாவின் Principal organsக்கு போகும்? எனவே இது ஒரு குப்பை முயற்சி. இதனால் எந்த பலனும் கிடைக்காது!
அப்படி எனில், இது தெரியாமல் தான் மே 17, நாம் தமிழர் இயக்கத்தினர் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்களா?
இல்லை. இவர்களுக்கும் அது தெரியும். ஆனால் இதன் மூலம், மக்களிடம் விளம்பரம் கிடைக்கும். நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒருவர் திடீர் என்று ஜெனிவா போய் பேசிவிட்டு – நாம் ஐநா.,வில் பேசிவிட்டோம் என்று தூத்துக்குடியில் வந்து “அதிரவிட்ட சீமான், கதறவிட்டோம் உலக நாடுகளை, உலகமே நம்மை வியப்பாகப் பார்க்கிறது” என்று இஷ்டத்துக்கு வாய் கிழிய வசனம் பேசுவார்கள். சரி இதனால் என்ன பலன் என்று கேட்டால், எவரும் வாய் திறக்க மாட்டார்கள்! மே-17 இயக்கம் எதற்கு தொடங்கப் பட்டது. இப்போது அது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ன நோக்கத்துக்காக தொடங்கினீர்கள்? அது இப்போது நடக்கிறதா? – இப்படி எல்லாம் கேட்டால் எந்த பதிலும் வராது!
நாடகம் போடுவதுதான் இவர்களின் வேலையே! அதன் உச்ச கட்டமாக என்ன பொய் வேண்டுமானாலும் பேசலாம்!
‘ஊபா’ சட்டத்தில் திருமுருகன் கைது செய்யப்படக் காரணம் தூத்துக்குடி விவகாரம் என்று அப்படியே செண்டிமெண்டாகத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இவரைக் கைது செய்த காரணம் “பாலஸ்தீனம் போல நாங்களும் போராடுவோம் என்று பேசியது. அதாவது தனி நாடு அங்கீகாரம் கேட்டு ஆயுதம் ஏந்துவோம் என்ற அர்த்தத்தில்! இதுவே இவரைக் கைது செய்யக் காரணம். ஆனால் ஏதோ, தூத்துக்குடிக்காக ஐநா.,வில் பேசியதால்தான் கைது செய்யப்பட்டார் என்று மக்களை நம்ப வைக்க ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள்! இவர்களின் அரசியல் அங்கே நிற்கிறது!
அதுவும் இவர், ஐநா.,வில் பேசிவிட்டுத் திரும்பும் போது கைது செய்யப்பட்டாராம். உண்மையில் ஜெர்மனியில் இவர் பதுங்கி இருந்தார்! அங்கிருந்து நாடுகடத்தி வரப்பட்டு, கைது செய்தனர் என்று தகவல் வர, அதை மறைத்து அப்படியே செய்தியை திருப்பி யிருக்கிறார்கள்!
இதில் திருமுருகனின் குழந்தை அப்பா அப்பா எப்போது வருவீர்கள் என்று கேட்டதாம்! சிறைக்குப் போகிறார் பிரிந்து… என்று அடுத்த செண்டிமெண்ட் வீடியோ.
ஆமாம், கொலை செய்கிறவன்ம், பாலியல் வன்கொடுமை செய்பவன் அனைவருக்கும் தான் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கும் செண்டிமெண்ட் உண்டு என்று பார்த்தால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பம் இல்லையா? குழந்தைகள் இல்லையா? செண்டிமெண்ட் இல்லையா?
இங்கே அப்பட்டமாக மாணவர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிட இப்படியான நாடகங்கள் தேவை. இங்கே பிரிவினையை விதைக்கவேண்டும் என்பது தான் திருமுருகன் மற்றும் அவரது கூட்டத்தின் வேலை!
திருமுருகன் முதலில் இருந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் இவர் ஜாதி ஒழிப்பு போராளி!. எனக்குத் தெரிந்து திருமுகனுக்கு வக்காலத்து வாங்கி எழுதுவது திக, விசி கட்சியினர்தான். இதை ஒரு குழுவாக எப்போதும் எழுந்து வா தமிழா , நிமிர்ந்து நில் தமிழா என்று மொழியின் பின்னால் ஒளிந்து கொண்டு தந்திரமாக செய்து வருகிறார்கள். (இலங்கைத் தமிழர் ஆதரவு என்று இயக்கத்தைத் தொடங்கும் பலரும், முடிவில் இந்தியா ஒழிக; பிரிவினை என்று தான் பேசுகிறார்கள்)
என்ன நடந்தது என்ற விவரம் தெரியாமல் விவரம் தெரியாத அப்பாவிகள் சிலர் isupport என்று பதிவை போடுவதை என்னவென்று சொல்வது?!
இறுதியாக :
திருமுருகன் விவகாரம் மட்டும் அல்ல; இங்கே பலவும் உண்மைக்கு வேறு வடிவம் இருக்கிறது. இங்கே அனைவருமே அரசியல்வாதிகள் தான்! தந்திரமான அரசியல்! உன் நல்ல மனதை எப்படி வசப்படுத்துவது என்ற அரசியல்.
ஆக… இளையசமுதாயத்துக்கு நாம் சொல்ல வருவது… எவரையும் நம்பாதே! ஓட்டு போட்டோமா? அத்துடன் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டு அவரவர் வேலையைப் பார்க்க வேண்டும்! உன் வீட்டுக்கு ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டும். போராளி வாங்க… மக்களே குடும்பத்துடன் போராடலாம் வாங்க.. இப்படி எல்லாம் சீமான், திருமுருகன் வகையறாக்கள் அழைப்பார்கள்.ஆனால், அவரவர் மனைவியோ வசதியாக வீட்டில் இருப்பர்.
இவர்களைப் போராளிகளாகவும் – நாட்டினை ரட்சிக்க வந்த பிதாமகனாகவும் காட்டி பத்திரிக்கை வியாபாரம் செய்யும் தி இந்து, விகடன் குடும்பம் போராட வீதிக்கு வந்தார்களா? அனைவருமே உன்னைத் தூண்டிவிட்டு நீ போராட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.
ஆகவே மிகவும் பொங்க வேண்டாம் – எப்போதுமே இப்படி செய்திகளையே படிப்பதும் பார்ப்பதுமாக இருக்க வேண்டாம் இது உன் மன அமைதியைக் கெடுத்து வாழ்வின் ஆரோக்கியமான தேடலை சிதைக்கும்.
நீ மன அமைதியை இழந்து நிற்பாய்! இவர்களைப் பின்தொடர்ந்தால்!
எனவே தயவுகூர்ந்து மதம், ஜாதி, மொழி என்று எதிலும் உணர்ச்சிவசப்பட்டவராய் இருக்க வேண்டாம். வீட்டைக் கொஞ்சம் பொருளாதார நிலையில் உயர்த்தவும் உங்களின் அம்மா அப்பா வாழ்வில் கொஞ்சம் நிம்மதியான இறுதிக் காலத்திற்கு தேவையான வசதியைக் கொடுக்கவும் நாம் என்ன செய்வது என்று சிந்திக்கவும்.
உணர்ச்சிவசப்படாதே – உணர்சி வசப்படுத்தும் விதமாக பதிவுகளையும் பரப்பாதே! நிதானம் தேவை! ஆய்வு செய்யாது எவரையும் நம்பாதே! என் இந்தக் கட்டுரையையும் அப்படியே நம்பாதே! இதையும் படித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக யோசிக்கவும்.
இப்போது அடுத்த செய்தி வந்து கொண்டிருக்கிறது… “ஒருபடமும் உருபடியாக எடுக்காத இயக்குனர் கௌதமன் ஐநா.,வில் சென்று பேசினார் என்று!”
என்ன செய்ய வேண்டும் என்பது உனக்குத் தெரியும்! என் இளைய சமுதாயமே!
– மாரிதாஸ்
#Nnsindia #Nnsdharma




