
சமத்துவமே சம்மதம் – நன்மதம்
தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
சனாதன தர்மத்தில் பல்வேறு சித்தாந்தங்கள் உள்ளன. அவற்றை வேறுபாடுகளாகப் பார்க்காமல் பல வகைகளாகப் பார்த்து அறிவது சாதகனுக்கு பயனுள்ளதாக இருக்கும். எத்தனை வகைகள் இருந்தாலும் அந்த சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் பிரமாணமாகக் கருதும் வேதம் புராணம் இதிகாசம் போன்றவை சமமான கௌரவத்தைப் பெறுகின்றன. உண்மையில் ஒரே இழையில் முடியப்பட்ட இந்த வகைமைகளே நம் சனாதன தர்மத்திற்கு நிலைத்த தன்மையையும் வலிமையையும் அளித்தன. அவரவர் சித்தாந்த சம்பிரதாயங்களை அவரவர் அனுசரித்து வந்தாலும் ஒருவருக்கொருவர் கௌரவமும் ஆதரவும் அளிப்பது மிக முக்கியம். உண்மையான ஆசாரியர்கள் அப்படித்தான் இருந்தார்கள்… இருந்து வருகிறார்கள்.
அதனால்தான் ஹிந்து தர்மத்தில் மும்மத ஆசாரியர்களுக்கும் கௌரவம் உள்ளது. மூன்று சித்தாந்தங்களிலும் சிறந்த சித்த புருஷர்கள், ஆசாரியர்கள் தோன்றினர். பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களின் வரலாறுகள் நம் ஹைந்தவ தர்மத்திற்கு முன்னேற்றத்தையும் பலமான பாரம்பரியத்தையும் ஏற்படுத்தின.
அப்படிப்பட்ட ஆச்சர்யர்களில் ஒருவரான விசிஷ்டாத்வைத சிந்தாந்தத்தைப் பரப்பியவர்களில் முன்னோடியானவர் ஸ்ரீராமாநுஜாசாரியார். துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய சித்தாந்தங்கள், சித்தாந்த ஆச்சார்யர்களுக்கு முன்பே கூட உள்ளது. பேதம், பேதாபேதம், அபேதம் – என்ற பெயர்களால் அவை அழைக்கப்பட்டன.
இவற்றை வேறு வேறு சிந்தாந்தங்களாக அன்றி, ஆன்மீக மார்க்கத்திலுள்ள மூன்று நிலைகளாக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கினார். அத்தகைய கண்ணோட்டத்தில் மூன்றையும் உணர்ந்து கௌரவித்து ஆன்மீக சாதகர்களின் பௌதிக ஸ்தாயியை அனுசரித்து வேதமதம் அருளிய மார்க்கங்களாக கருத்தொற்றுமை (சமன்வயம்) செய்தனர் சுவாமி விவேகானந்தர் முதலான ஹிந்து தர்மத்தைப் பரப்பிய முன்னோடிகள்.
அண்மையில் ஹைதராபாத் மகாநகரத்தில் ஸ்ரீராமானுஜாசாரியாரின் மாபெரும் சிலையை திறந்து வைத்தது சிறந்த ஹிந்து மத நிகழ்வு. பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் இதில் பங்கு கொண்டனர். பல சிறப்புகள் இந்த கட்டுமானத்தில் இருப்பது மேலும் புகழைச் சேர்த்தது. தான் பிரதிநிதியாக விளங்கும் கோட்பாட்டு சம்பிரதாயத்தில் அர்ப்பணிப்பு கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசின்னஜீயர் ஸ்வாமிகள் நீண்ட காலம் மிகவும் சிரத்தையோடும் பக்தியோடும் நிஷ்டையோடும் திட்டமிட்டபடி தம் சங்கல்பத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து இந்த மகத்தான சிலையை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த சிலையை வடிவமைத்ததோடு கூட பவித்திரமான 108 வைணவ திவ்ய தேசங்களின் ‘மாதிரிகளை’ ஏற்படுத்தியது மிகச் சிறப்பான அம்சம். இந்த சிலைக்கு ‘சமத்துவ மூர்த்தி’ என்று பெயர் சூட்டியது அருமை. ‘சமத்துவம்’ என்ற சொல் சனாதன தர்மத்தின் உள்ளம். ஹைந்தவ இதயத்தின் சொரூபம். இதற்கு தத்துவ ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் நல்ல அர்த்தங்கள் உள்ளன.
“சமத்வம் யோகமுச்யதே…”, “சமம் சர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்…”, பண்டிதா: சமதர்சின:” போன்ற பகவத்கீதையின் வாக்கியங்கள், “சமோனேன சர்வேன…” போன்ற உபநிஷத் வாக்கியங்கள், “சமத்வமாராதான முச்யுதஸ்ய” போன்ற புராண வாக்கியங்கள் “சனாதன தர்மமே சமத்துவ தர்மம்” என்று நிரூபித்தன.
இந்த தர்மத்திற்கு வேத விரோதிகளாலும், நாஸ்திக பாஷாண்டிகளாலும் சேதம் ஏற்பட்டபோது மீண்டும் வேத சம்மதமாக உய்வடையச் செய்த மகநீயர்கள் சமத்துவத்தை ஸ்பூர்த்தியாகக் கொண்டு ஹைந்தவ தர்மத்திற்கு புனர் வாழ்வளித்தார்கள்.

அதில் முக்கியமானவர் ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதர். பரம சித்தாந்தமாக வேதாந்த ஹிருதயமான “ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சதுர்தம் அத்வைதம்” (மாண்டுக்யோபநிஷத்து) போன்ற சத்திய வாக்கு பிரமாணங்களோடு அத்வைதத்தை எடுத்துரைத்தாலும், ஆன்மீக சாதனையில் துவைதத்தையும் வேத சம்மதமாக அங்கீகரித்தார். ஈஸ்வரார்ப்பண பார்வையில் ஸ்வதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கீதையின் சாரத்தை விளக்கி, “பஜகோவிந்தம்”, “கோவிந்தம் பரமானந்தம்” என்று போதித்து சமத்துவத்தை சாதித்தார். வேத சம்மதமான சைவ, வைணவ, சாக்தேய, சௌர, காணபத்திய மதங்களின் இடையில் சமரசத்தை வியாசர் போன்ற ரிஷிகளின் இதய ஒலியாக பிரதிஷ்டை செய்தார். “ஷண்மத பிரதிஷ்டாபனாசாரியார்’ என்று போற்றப்பட்டார்.
“சண்டாலோஸ்து சது த்விஜோஸ்து குருரித்யேஷு மநீஷா மம…” என்பதாக சில பின்னங்கள் இருந்தாலும் அனைவரிலும் ஒரே பகவத் சைதன்யமே பிரகாசிப்பதாலும் சைதன்யம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சமத்துவமே இருப்பதாலும் அவரவர் கோட்பாட்டை காத்துக்கொண்டு ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் பரஸ்பர கௌரவத்தோடு அந்தர்யாமியான ஒரே பரமாத்மாவை அனுபவத்தில் உணரவேண்டும் என்று உரத்துக் கூறினார். “த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு: வ்யர்தம் குப்யஸி மையசஹிஷ்ணு:” என்று வேற்றுமை, துவேஷம் போன்றவை இல்லாத அன்பும் ஆதரவும் கொண்ட சமத்துவத்தை அனுபவிக்கச் செய்தார்.
சித்தாந்த நிர்ணயத்தை எடுத்துரைப்பதில் ஞானமும் கல்வியும் முக்கியம் என்றும், ஆண் பெண் என்ற வேறுபாடு தேவையில்லை என்றும் கூறி, வாதம் புரிந்த போது அறிவிற்சிறந்த உபயபாரதியை நீதிபதியாக ஏற்று கௌரவித்தார். ‘மாத்ருபஞ்சக’த்தைப் படைத்து தாயிடம் தனக்குள்ள பக்தியை தாயின் அந்திம காலத்தில் திடமாக பிரகடனம் செய்தார். இவ்வாறு பெண்களிடம் கௌரவத்தையும் வேற்றுமை பாராட்டாத சமத்துவத்தையும் அன்றே காட்டினார்.
அந்த சமத்துவம் இன்றளவும் ஜகத்குரு ஸ்தாபித்த பீடங்களில் சிறந்த ஆசார்யர்கள் மூலம் உலகெங்கும் அறிவிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அவர்களின் போதனைகளில் வைணவம், சைவம் போன்ற தர்மங்களில் இடையே சமரசமும், சௌமனஸ்யமும் (நட்பும்) நிலைபெற்று வருகின்றன. பாரதிய தத்துவ சிந்தனை உலகளாவிய புகழைப் பெற்று வருகிறது.
ஹிந்து தர்மத்தில் ஒரு பிரிவுக்கும் சித்தாந்தத்திற்கும் பிரதிநிதியாக உள்ள ஸ்ரீபகவத் ராமனுஜாசாரியாரின் உயர்ந்த விக்ரகத்தை சமத்துவ மூர்த்தியாக வெளியிட்டது ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் அம்சம். ‘ஹிந்து தர்மமே சமத்துவ தர்மம்’ என்று மற்றொரு முறை உலகிற்கு அறிவிக்கும் சம்பவம் இது.
அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, காசியில் விஸ்வநாத வளாகம் மகா நிர்மாணம், கேதாரநாத் சந்நிதியில் உயர்ந்த ஹிமாலய சிகரங்களின் மேல் ஆதிசங்கரரின் சிலை திறப்பு… போன்றவற்றைச் செய்த நம் தேசப் பிரதமர் தம் கரக்கமலங்களால் இந்த உற்சவத்தையும் திறந்து வைத்தது சமத்துவத்திற்கு மற்றுமொரு அடையாளம்.
சனாதன தர்மத்தில் யார் எந்த சித்தாந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தாலும் இதர சிந்தாந்த ஆசார்யர்களைப் பற்றி முரண்படப் பேசுவதிலோ, உரையாற்றுவதிலோ கிண்டலாக ஏளனம் செய்வது தர்மத்திற்கு நல்லது அல்ல என்ற விவேகம் வளர்வதே உண்மையான சமத்துவம்.
ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் அறிஞர்கள் உள்ளார்கள். புத்திகூர்மையோடு சர்ச்சை செய்து தம் சித்தாந்தத்தை நிறுவக் கூடிய சமர்த்தர்கள் அங்கங்கே அப்போதைக்கப்போது அவதரித்துக் கொண்டே உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பிரமாணங்கள், சுய மத அபிமானம் உள்ளது. அவை தீய அபிமானமாக, பிற கடவுளர்களையும் பிற ஆச்சார்யர்களையும் நிந்தித்து தூக்கி எறிந்து பேசுமளவுக்கு மாறாதவரை சமத்துவம் காப்பாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட சமத்துவத்தை நிலைநாட்டுவதில் இந்த மாபெரும் சிலை உற்சாகமான பிரேரணையை அளிக்கும் என்றும் அளிக்கவேண்டும் என்றும் விரும்பி இந்த உயர்ந்த ஹைந்தவ நிகழ்வை மகிழ்ச்சியான உற்சவமாக மதித்து கௌரவிப்போம்.
Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மார்ச் 2022
Well balanced article. Nicely translated. Congratulations to both. Appreciate dhinasari for publishing this article.