இன்று சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு ரயில் திட்டங்களை துவக்கிவைப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.
ரூபாய் 500 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட
மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் துர அகல ரயில்பாதை ,
ரூபாய் 590 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட
தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதையை பிரதமர் திறந்து வைத்து
சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை 1800 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பொதுவாக இந்தியாவில் சர்வதேச தரத்துக்கு ஈடாக தற்போதய பாஜக அரசு மஹாராஜா எக்ஸ்பிரஸ்,வந்தே பாரத், தேஜஸ் மற்றும் இரண்டடுக்கு ரயில்களை இயக்கி வெற்றி கண்டு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது ரயில் தடங்கள் மின்மயமாக்கப்படுவதும் பல்வேறு வழித்தடத்தில் நவீன ரயில் பெட்டிகளை இயங்குவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோல் மக்கள் பயன்படுத்தும் வகையில் மக்கள் வசதிக்காக உரிய நேரத்தில் ரயில்களை இயங்கவேண்டும்.
சில வழித்தடங்களில் லாபநோக்கற்ற வகையில் ஏழை, நடுத்தர வர்க்கம், வசதியானவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் ரயில்களை இயக்கவேண்டும்.
உதாரணமாக தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழித்தடமான செங்கோட்டை -கொல்லம் ரயில் பாதை இரு மாநில மக்களுக்கும் 105 ஆண்டு காலமாக வர்த்தக வழித்தடமாக இருந்தது. இந்த தடத்தில் கடந்த 1997ம் ஆண்டு மீட்டர் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதைகளை பிராட் கேஜ் பாதையாக மாற்ற முடிவெடுத்து 358 கோடி ரூபாய் திட்டத்திலும், புனலூர்-கொல்லம் ரயில் வழித்தடத்தில் 280கோடி நிதியிலும் பணிகள் நடந்து முடிந்தது.
கடந்த 2018 மார்ச்30 முதல் இந்த தடத்தில் ரயில் சேவை துவங்கியது.ஆனால் மீட்டர் கேஜ் பாதையில் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டது.திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம்-திருநெல்வேலி இடையே இரு ரயில்கள், கொல்லத்திலிருந்து சென்னைக்கு கொல்லம் மெயில்,கொல்லம் எக்ஸ்பிரஸ் என இரு ரயில்களும்,கோவை-செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் என பல ரயில்கள் இயக்கப்பட்டது.
தற்போது அகலரயில் பாதையில் இந்த தடத்தில் பல ரயில்கள் இயக்கப்படவில்லை. இது போல் தான் தமிழகத்தில் பல ரயில் வழித்தடங்கள் அகல ரயில்பாதையாக மாற்றப்படுவதோடு சரி ரயில்கள் இயக்கப்படுவதில்லை.இயங்கும்ஒரு சில ரயிலும் பயணிகள் பயணிக்க வசதியான நேரங்களில் இயங்குவதில்லை.
உதாரணத்துக்கு தினமும் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 10 மணிக்கு வரும் ரயில் தடம் எண் மாற்றி செங்கோட்டையில் காலை 11.30க்கு புறப்பட்டு கொல்லம் செல்கிறது.
இதேபோல கொல்லத்தில் காலை புறப்பட்டு பகல் 2மணிக்கு செங்கோட்டை வந்து தடம்எண்மாற்றி3.45க்குமதுரை புறப்பட்டு செல்கிறது.பலருக்கு மதுரை-கொல்லம்-மதுரை இடையே செங்கோட்டை வழியில் ரயில் இயக்குவதே இன்னும் தெரியவில்லை.இந்த ரயிலை மதுரை- கொல்லம்-மதுரை யிடையே ஒரே தடம் எண்ணில் செங்கோட்டையில் அதிக நேரம் நிற்பதை தவிர்த்து இயக்கினால் நல்ல வரவேற்பை பெரும்.
இது போல்தான் தமிழகத்தில் பல இடங்களில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகளிடம் வரவேற்பை பெறுவதில்லை.
மேலும் தற்போது கொரோனாவுக்கு முந்தைய 2019ல் இயக்கப்பட்ட பல ரயில்கள் இன்னும் பல இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது.இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் மக்கள் நல பிரதிநிதிகள்,ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கேட்டால் ரயில் பெட்டிகள் இல்லை, இன்ஜின் இல்லை, ரயில் ஓட்டுனர் இல்லை ,எல்லாம் இருந்தும் இந்த வழியில் ரயில் இயக்கினால் டீசல் செலவுக்கு கூட வசூல் இல்லை என அதிகாரிகள் கூலாக பதிலளிக்கின்றனர்.
கொரோனா முடிந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில் தென்னக ரயில்வே குறைந்த கட்டணத்தில் இயக்கிய பயணிகள் ரயில் அனைத்தையும் தற்போது சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் என பெயர் மாற்றி இயக்கி இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது பகல்கொள்ளையையும் மிஞ்சிய கொள்ளை என ரயில் பயணிகள் விமர்சனம் செய்கின்றனர்.
இன்னும் இந்தியாவில் 10ரூபாய் செலுத்தி பயணிகள் ரயிலில் பயணிக்க வசதியில்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த மோடி சர்க்கார் மனதில் கொள்ளவேண்டும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சியிலும் நாடு கடன்தொல்லையில் இருந்தாலும் அனைத்து தரப்பினரும் பயனடைந்து ரயில் பயணம் செய்யும் வகையில் ரயில்களை இயக்கி ரயில் வே லாபத்தையே ஈட்டியது .ரயில்வே துறை கல்லா கட்டுவதை மட்டும் மனதில் கொண்டும்,கடமைக்காக ரயில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
முன்பு வாஜ்பாய் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரயில் கள் சாதாரண ஏழை குடிமகனையும் மனதில் கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டதை இன்னும் பலர் நினைவுகூரும் விதமாக வே உள்ளனர் என்பதை பிரதமர் மோடி தெரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
-சக்தி பரமசிவன்
