spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதலையங்கம்பல கிளைகளோடு கூடிய மகா கல்ப விருக்ஷம் ஹிந்து மதம்!

பல கிளைகளோடு கூடிய மகா கல்ப விருக்ஷம் ஹிந்து மதம்!

- Advertisement -
hinduism

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

சனாதன தர்மத்தின் முக்கிய நூல் வேதம். வேதத்தின் ஆதாரமாகவே ஸ்ம்ருதிகள், புராணங்கள், ஆகமங்கள் படைக்கப்பட்டன. மனித இனத்தில் காணப்படும் பல்வேறு குணவேறுபாடுகளைக் கொண்டு வேறு வேறு சம்பிரதாயங்களும் சிந்தனைகளும் ஹிந்து மதத்தில் வளர்ந்தாலும் அவை அனைத்திலும் ஒத்திசைவான சீரான தன்மை, சமரசம், கருத்தொற்றுமை இயல்பாகவே உள்ளன. இதற்குக் காரணம் வேதத்தின் ஞான நெறி. 

துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம்… இம்மூன்று சித்தாந்தங்களும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டன. மூன்றிலும் மேலும் சைவம், வைஷ்ணவம் என்று வேறுபாடுகள் இருந்தாலும் இவை அனைத்திலும் ஆன்மிகம், தர்மம், பக்தி என்ற அம்சங்களில் பேதம் இல்லை. இந்த சமரச சூத்திரத்தை மறக்காமல் வேறுபாடான சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நெறிமுறைகளை தங்களின் தலைமுறையினருக்கு சிதைக்காமல் அளிக்க வேண்டும். அனைத்தும் ஒரே சனாதன தர்மத்தைச் சேர்ந்தவை என்ற கருத்து ஒவ்வொருவரிடமும் பலமாக வேரூன்ற வேண்டும். அதன் மூலம் பரஸ்பர கௌரவம் உருவாகி ஹிந்து தர்மத்தில் ஒற்றுமை வலுவடையும்.

உண்மையில் துவைதம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மிக ஆழமானவை. அவரவர் சித்தாந்தங்கள் பற்றி அவரவர்களுக்கு முடிவான கருத்துகளும் பெருமையும் இருக்கும். அவை சாமானியர்களுக்கும் சாதகர்களுக்கும் தேவை இல்லாதவை. வெறும் சில பண்டிதர்களின் சர்ச்சைகளுக்கே தவிர அவற்றால் வேறு எந்த பிரயோஜமும் இல்லை.

அனைத்து ஹிந்து சம்பிரதாயங்களிலும் மகான்கள் அவதரித்தார்கள். அவர்கள் ஹிந்து மக்களை ஒன்றிணைப்பதிலும் தர்மத்தைக் கடைபிடிக்கச் செய்வதிலும் வெற்றி பெற்றார்கள். விவாதங்களுக்கு இடமின்றி அவர்களின் பரம்பரையில் வந்தவர்களால் மதிப்பையும் பக்தி வழிபாட்டையும் பெற்றுவருகிறார்கள்.

இன்று ஹிந்துவல்லாத இதர பிற மதத்தவர்களின் இழிவான விமரிசனங்களுக்கும்  சதிகளுக்கும் உறுதியாக பதிலளிக்க வேண்டுமென்றால் நம்மிடையே நிலவும் வாதங்களையும் பேதங்களையும் மறந்து பரஸ்பரம் கருத்தொற்றுமையான எண்ணத்தையும் சமரசத்தையும் வலுவாக எடுத்துக் காட்ட வேண்டும்.

ஹிந்துக்களில் சித்தாந்த வேறுபாடுகள் எப்படி இருந்தாலும் அனைவரிலும் சமமான அம்சங்கள் பல உள்ளன. அத்வைத சம்பிரதாயத்தில் நிலவும் பீடங்களிலும் கோவில்களிலும், நடப்பவற்றைப் போலவே துவைத சம்பிரதாயங்களின் பீடங்களிலும் ஆலயங்களிலும் பூஜைகள், ஸ்தோத்திரங்கள், ஹோமங்கள், பாராயணங்கள் உற்சவங்கள் அனைத்தும் நடக்கின்றன. பக்தர்கள் அனைத்து மடங்களையும் கோவில்களையும் அந்தந்த ஆசார்யார்களையும் விஷ்ணு, பரமசிவன் போன்ற தெய்வங்களைப் பற்றி எடுத்துரைக்கும் பாகவத பக்தர்களையும் சமமாகவே ஆதரிக்கிறார்கள்.

ancient veda period guru sishya
ancient veda period guru sishya

சர்வ ஜகதீஸ்வரனை விஷ்ணு என்றாலும் சிவன் என்றாலும் ஜகன்மாதா என்றாலும் கணேஷ, ஸ்கந்த, சௌர ரூபங்களில் வழிபட்டாலும் எல்லாம் ஒரே பரம்பொருளின் வழிபாடே என்ற அடிப்படை எண்ணம் சைவம் வைஷ்ணவம் போன்றவை தொடர்பான நூல்கள் அனைத்திலும் உள்ளவையே.

‘சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி” என்றாலும் ‘சங்கரம் ப்ரதிகச்சதி’ என்றாலும் தவறு எதுவும் இல்லை.

இஷ்ட தெய்வத்திடம் நிஷ்டையாக இருப்பது நல்லது. ஆனால் பிற தெய்வங்களை வெறுப்பதோ இகழ்வதோ செய்யக்கூடாது. அவரவர் விரும்பும் சம்பிரதாயங்களில் அவரவருக்கு விஸ்தாரமான நூல்கள் உள்ளன. ஆசாரியர்கள் உள்ளனர். ஒருவரை உயர்வாகப் பேசினால் பரவாயில்லை. இன்னொருவரை இகழ்ந்து பேசுவது மன்னிப்புக்கு உகந்தது அல்ல. மீண்டும் வாதங்கள், அபவாதங்கள், தூஷணைகள், பூஷணங்கள், விருப்பு வெறுப்புகள் போன்றவை தவிர்க்க முடியாமல் போகின்றன. அவை சாதகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.

இந்த பரஸ்பர வேற்றுமைகளைத் தூண்டும் பெரியவர்கள் விந்தையாக ஹிந்துமதமல்லாத இதர மதங்களிடம் அனுதாபம், நியாயப்படுத்துதல், வாழ்த்துதல் போன்றவற்றுக்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஹிந்து மதத்தில் இருக்கும் மற்றொரு சம்பிரதாயம் என்றால் எரிந்து விழுகிறார்கள். இது ஒரு விந்தையான நோய்.

இது ஹிந்து தர்மத்தை அவமதிப்பதற்கும் பிரிப்பதற்கும் முயற்சிக்கும் கூட்டத்திற்கும் சதிகாரர்களுக்கும் உதவும் வழிகளாகின்றன.

துவைதத்தையும் விசிஷ்டாத்வைதத்தையும் சாதனை நிலையில் ஏற்கும் அத்வைதம் அவற்றின் சம்பிரதாயங்களையும் பக்தி நம்பிக்கைகளையும் எதிர்க்கவில்லை. அதோடு அவற்றை சாதனைக்கு உதவும் வழிமுறைகளாக உற்சாகப்படுத்தியது. அதனால்தான் அத்வைதம் என்றால் என்ன என்று புரியாவிட்டாலும் அதனை மதிப்பவர்கள் தெய்வங்களுள் வேறுபாடு பார்க்க மாட்டர்கள். அனைத்து கொள்கைகளையும் ஆதரிப்பார்கள். ஒவ்வொரு சித்தாந்த சம்பிரதாயத்திலும் உள்ள மகான்களையும்   அவர்களின் நூல்களையும் உளமார ஏற்பார்கள்.

ஆதிசங்கரர் அத்வைதத்தை பரம சித்தாந்தமாகக் கூறினாலும் துவைத வாதிகளிடம் உள்ள விக்ரகங்கள், பூஜைகள், நிர்மலமான பக்தி மார்கம் போன்றவற்றுக்கு விரோதி அல்லர். பல கோவில்களிலும் க்ஷேத்திரங்களிலும் உள்ள தேவதேவியர்கள் மேல் சுயமாக உள்ளம் உருகும் வண்ணம் துதித்தார். நடைமுடை விவகாரத்தில் அனைவரும் துவைதிகளே. வாதங்களும் விவாதங்களும் நடைமுறை விவகாரத்தை சேர்ந்தவையே.

உளப்பூர்வமாக வைஷ்ணவ பக்தியை போதித்து, பாஞ்சராத்ரம் போன்ற ஆகம முறைகளில் பரம்பரையை வளர்த்த பகவத் ராமானுஜர், பரம பூஜ்ய மத்வாசார்யர், சைவ   அத்வைதத்தை வளர்த்த ஸ்ரீசங்கராசார்யார், பாசுபத போதனையாளரான லகுளீசர், பலவித சைவ உபாசனை மார்கங்களைப் பரப்பி பலருடைய வாழ்க்கையில் தர்மத்தையும் பக்தியையும் வளர்த்த ஸ்ரீ பசவேஸ்வரர் போன்றோர் சனாதன தர்மத்தை முழுமை செய்த காரண ஜென்மர்கள். அதே போல் தேவீபக்தாசார்யர்கள். கணபதி பக்தியை வளர்த்தவர்கள், சூரிய உபாசனை சித்தர்கள், ஸ்கந்த ஆராதனையில் சிறந்தவர்கள் பலப்பலர்.  ஞானத்தால் மட்டுமே ஆத்ம தத்தவத்தை வெளிப்படுத்திய தத்துவவாதிகளுக்கும் நம் கலாசாரத்தில் குறைவில்லை.

பல்வேறு சிந்தனைகள், குணங்கள் உள்ள மனித இனத்திற்காக வேதங்களும் அவற்றின்  சாரமான ஆகமங்களும் கூறிய மார்க்கங்களையே மகாபுருஷர்கள் அனைவரும் அனுஷ்டித்து, அனுபவித்து உபதேசித்தருளி உள்ளார்கள். அவற்றின் சாரத்தையே ஸ்ரீராமகிருஷன் பரமஹசர், ஸ்ரீவிவேகானந்தர் போன்றோர் உலகிற்கு போதித்தனர்.

சத்தியம், அஹிம்சை, சௌசம், தயை, சமம், தமம், க்ஷமம், பரம்பொருளின் மேல் பக்தி, தவம், யோகம், தியானம், சாத்விக வாழ்வியல் முறை…  ஹிந்து மதத்தின் அடிப்படை தர்மங்கள். இவை அனைத்து சித்தாந்தங்களிலும் சம்பிரதாயங்களிலும் அனைவரும் ஏற்கும் அம்சங்கள்.  

ஆனால் தற்பெருமையை வெளிப்படுத்தினால் இந்த அடிப்படை தர்மங்களுக்கு தீமை விளைந்து விஷ்ணு, சிவன், தேவி, கணேஷர் வடிவங்களில் உள்ள ஈஸ்வரனின் கருணையையே பெறமுடியாத நிலை வரும்.

ஒரு காலத்தில் வெறுப்பால் கலகம் செய்த அறியாமை நிலை நீங்கிவிட்டதென்று இன்றைய விஸ்வ மானுடன் நினைக்கிறான். பிற மதங்களோடு கூட இணைந்து வாழும் இயல்பான சமமான தர்மமான ஹிந்து மதம் தம்மில் உள்ள கிளைகளிடம் வெறுப்பு கொள்வதை விட்டு விட்டு அவரவர் கொள்கையை அவரவர் கடைப்பிடித்து பிற கொள்கைகளை கௌரவிக்கும் வழி வலுப்படவேண்டும்.

ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் ஜெயந்திகள் ஒரே நாளில் வரும் வைசாக சுத்த பஞ்சமி, ஆருத்ரா நட்சத்திரம் உற்சவங்களில் இந்த கருத்துக்களை மீண்டும் ஒரு முறை சிந்தித்து    ஹிந்துக்கள் அனைவரும் உய்வடைவோம்.

(தலையங்கம் மே 2022 ருஷிபீடம் மாத இதழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe