
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது எஸ்பிஐ வங்கி. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்து இருந்த நிலையில் உத்தரவுக்கு இணங்கி, தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது எஸ்பிஐ வங்கி.
இதனிடையே, SBIக்கு ஆதரவாக பார் கவுன்சில் தலைவர் களமிறங்கினார். SBI வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற | பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியிருந்தார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும் என்று கோரி கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்தார்.
முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில், எஸ்.பி.ஐ., வங்கியின் செயல்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, பங்குச் சந்தையில் வங்கியின் பங்கு விலை 2 சதவீதம் வரை சரிந்தது.
தேர்தல் பத்திரங்களுக்கு நிதி வழங்கியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, கூடுதல் அவகாசம் கோரி, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., மனு தாக்கல் செய்திருந்தது. நேற்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.,யின் கோரிக்கையைநிராகரித்தது. மேலும், இன்று மாலைக்குள், தேர்தல் பத்திரங்களுக்கு நிதி அளித்தவர்கள் தொடர்பான முழு தகவல்களையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காவிட்டால், வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, எஸ்.பி.ஐ.,யின் பங்கு விலை, வர்த்தகத்தின் இடையே 2 சதவீதம் வரை சரிந்தது.
நேற்று வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு விலை 1.79 சதவீதம் சரிந்து, 773.95ரூபாயாக இருந்தது. எனினும், இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றும், இதை நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதினார்.
ஆஷிஷ் அகர்வால் தம் கடிதத்தில், “இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது. தேர்தல் பாத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், இந்தியாவை கலவர பூமியாக்க விரும்புகிறதா உச்ச நீதிமன்றம் என்று கூறி, சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. அதற்குக் காரணமாக பலரும் குறிப்பிட்டது, இது தனிப்பட்ட தகவல்களை பாதிக்கும் விஷயம் என்றும், ஒருவரின் தனிநபர் பாதுகாப்பு உரிமையை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டனர்.
தற்போது தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்னும் சிறிது நாட்கள் போனால் தேர்தலில் யார் யார் எந்தெந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்ற தகவலையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட சொல்லவும் தயங்க மட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது.
இது எப்படி ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதற்கு உதாரணம் இது. சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர், தான் விரும்பும் கட்சிக்கு நன்கொடை தர விரும்பி நன்கொடை அளித்தார் என்று வைத்துக் கொள்வோம். இது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டு, அது வெளியே தெரிய வந்தால், அந்தப் பகுதியில் அந்த அப்பாவி ஹிந்துவால் நிம்மதியாக வாழ முடியுமா?
தான் விரும்பும் கட்சிக்கு ஒருவர் ஓட்டு அளித்த விவரம் தெரிய வந்தாலே, கட்சி ரீதியாக ஏமாற்றமடைந்த வேறு கட்சியினர், அவ்வாறு வேறு நபர்களுக்கு வாக்களித்தவர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை.
இன்னும் ஒரு படி மேலே போய், தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நீங்கள் எல்லாம் வாக்களிக்க மாட்டீர்கள், எனக்கு நீங்கள் வாக்களித்து கிழிச்சிட்டீங்களோ, உங்கள் பகுதிக்கு இதை செய்யச் சொல்றீங்க என்று கேட்டு அமைச்சர் ஒருவரே அதிர வைத்த சம்பவங்களும் தமிழகத்தில் பிரபலம்.
இப்படி, ஒரு கட்சிக்கு வாக்களிப்பும் சரி, நிதி உதவி செய்வதும் சரி, அது ரகசியம் காக்கப்படவில்லையானால், அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என்ற சூழலில், இந்தப் பொது அறிவு கூட உச்சநீதிமன்றத்துக்கு சொல்லித்தான் விளக்க வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்.
எனவே, நாட்டு மக்களின் எதிர்கால, தனிப்பட்ட உரிமைகளையும் உத்தேசித்து உச்ச நீதிமன்றம் இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!