
— செங்கோட்டை ஸ்ரீராம்
காமெடி தர்பார் ஆகிக் கொண்டிருக்கும் கழக அரசின் முதல்வர் ஸ்டாலின் பல நேரங்களில் காமெடியன் வடிவேலுவின் வழியைப் பின்பற்றுகிறாரா, அல்லது கழக அரசு அமைய தன் திரையுலக வாழ்வையே தியாகம் செய்த வடிவேலு, கழக அரசின் காமெடித் தனங்களை பட்டவர்த்தனமாக திரைப்படங்களில் கிண்டல் செய்கிறாரா என்ற மதி மயக்கம், ரசிகப் பெருமக்களுக்கு வருவதுண்டு. அப்படி ஒரு காட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சினிமாவால் வளர்ந்து ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு, சினிமா காட்சிகளையே உதாரணமாக்குவது தவறில்லை என்றே தோன்றுகிறது.
‘தலைநகரம்’ படத்தில் வரும் வடிவேலு காமெடிகள் இன்றைய திமுக., அரசின் செயல்பாடுகளுக்கு அப்படியே பொருந்திப் போயுள்ளது. இதுவும் ‘தலைநகர’ விவகாரம்தானே! அண்மையில் தான், பாஜக., தலைவர் அண்ணாமலையிடம், “அண்ணாசாலை பக்கம் வந்து பார்க்கட்டும்” என்று துணை முதல்வர் ‘ஆக்கப்பட்டுள்ள’ ஸ்டாலினின் மகன் உதயநிதி சவால் விட, மேற்படி படத்தில் வரும் – காந்தி தெருவுக்கு வந்துடுவியா, என் வீட்டுப்பக்கம் வந்துடுவியா என்று வடிவேலு ரவுடித்தன சவால் விடும் காமெடியை இணைத்து, சமூகத் தளங்களில் பலர் நகைச்‘ சுவைப்படுத்தி’னார்கள்!
இன்னொரு காட்சியில் வடிவேலுவை சிலர் துரத்த, தப்பித்து ஓடும் அவர், தப்பிக்க முடியாதபடி இரும்புக் கதவுக்கு முன் ஒரு முட்டுச் சந்தில் நிற்க, அப்போது தான் கையில் வைத்திருக்கும் பெட்டியைத் திறந்து பார்ப்பார். “மகனே, நீ பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நேரத்தில் இந்தப் பெட்டி கை கொடுக்கும், அதைத் திறந்து பார்” என்று தன் தந்தை சொன்னது நினைவு வரும். பெட்டியைத் திறந்தால் கத்தி இருக்கும். ‘இந்தக் கத்தி எப்புடிடா கை கொடுக்கும், அது கையைக் கிழிக்கல்லடா செய்யும்!’ என்று தனக்குள் பேசிக் கொண்டே, அதை எடுத்துக் கத்தியபடி, தன்னைத் துரத்தியவர்களை பயமுறுத்தி, தனக்குத் தானே ஒரு பட்டப் பெயரும் கொடுத்துக் கொள்வார், ‘நாய் சேகர்’ என்று!
இன்றைய திமுக., அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், அன்றைய திமுக., முதலமைச்சர் மு.கருணாநிதி தன் மகனுக்கு, ‘நெருக்கடி வரும் போது கையில் எடுத்துக் கொள், இது உனக்குக் கை கொடுக்கும்!’ என்று கொடுத்துச் சென்றிருக்கும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார். அவருக்கு நெருக்கடிக் காலம் வந்திருப்பதால்! அது கைகொடுக்குமா அல்லது கையைக் கிழிக்குமா என்பது, கூட்டாளிகளான ‘இண்டி’ கூட்டணியினரின் செயல்பாட்டில் இருக்கிறது!
கருணாநிதியின் பேரன் உதயநிதி முன்னர் கையில் எடுத்த ‘சநாதன அழிப்பு’ பேச்சு, வட மாநிலங்களில் ‘இண்டி’ கூட்டணியின் வெற்றியைப் பெருமளவு பாதித்தது என்றே கருத்துகள் எழுந்தன. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கையில் எடுத்துள்ள ‘ஹிந்தி எதிர்ப்பு’, அவர் சார்ந்துள்ள ‘இண்டி’ கூட்டணித் தலைவர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.
இதன் பின்னணி தெளிவு. புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிடில், அதற்கான நிதியை வழங்க முடியாது’ என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். ஆனால் நிதிகளை மட்டுமே பெற்று கபளீகரம் செய்யும் ‘நிதி’ குடும்ப அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், ஆனால் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் என்று கூறியது. பின்னர், மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி அளிக்காமல் வஞ்சம் செய்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதது. தான் ஏன் இதை எதிர்க்கிறோம் என்பதற்குக் காரணமாக, ‘பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது, ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும்’ எனக் கூறி, மக்களிடம் தன் ஊடகங்களின் மூலம் பொய்யான தகவலைச் சொல்லி, அரசியல் செய்தது. பின்னர், மும்மொழிக் கொள்கையை ஹிந்தி திணிப்பு எனக் கூறி, ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் திமுக., கையில் எடுத்தது.
தான் அரசியல் செய்தாலும், எதிர்க்கட்சிகள் ‘அவியல்’ மட்டுமே செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரி ஆட்சியின் கொள்கைக்கு தலையசைத்து, ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது, மத்திய அரசு நிதியை அளிக்க வேண்டும்’ என அதிமுக., பாமக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மத்திய அரசுக்கு ‘அறிவுரை’ கொடுத்தன.
இந்த நெருக்கடியில், தந்தை கருணாநிதி கற்றுக் கொடுத்த வழியில், ‘ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்; உயிரைக் கொடுத்தாவது தமிழைக் காப்போம்’ என்று குறிப்பிட்டு, ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதுகிறார். அவரது அழைப்பை ஏற்று, முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய போராட்டம் போல ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திமுக.,வினர் தார் டின்களுடன் உலா வருகின்றனர்.
மேலும், ‘உ.பி., பீஹாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி, ஆவ்தி போன்ற மொழிகளை, ஹிந்தி விழுங்கி விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி, உ.பி. பீஹார் கூட்டணிக் கட்சியினரும் தன் கோஷத்துக்கு ஒத்து ஊதுவார்கள் என்று நினைத்தார். திமுக., அந்நாளில் ஹிந்தி எதிர்ப்பு நாடகம் போட்ட போது, தமிழகத்தில் மட்டுமேயான தனிக் கட்சி. ஆனால் இப்போது, தேசிய அளவிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி! இதனால், அதன் தீவிர ஹிந்தி எதிர்ப்பு அரசியலை இண்டி கூட்டணியின் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., போன்றவை விரும்பவில்லை. இந்த ஆண்டு இறுதியில் பீஹாரில் தேர்தலை சந்திக்கும் நிலையில், திமுக.,வின் அரசியல் தமிழகத்தில் மட்டுமே பாஜக.,வை பலவீனப் படுத்தும், ஆனால் வடக்கே பாஜக., மேலும் பலப்படுத்தும் என்று எச்சரிக்கின்றன.
இந்நிலையில், ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலின் பின்னணியை தெளிவாக வெளிச்சமிட்டார், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ‘சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளை வைத்து, தி.மு.க.,வின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது” என்றார் அவர் அதே வழியில் தமிழகத்தில் அண்ணாமலையும் திமுக., அரசின் பொய்களையும், தோல்விகளையும் பட்டியலிட்டுக் காட்டி வருகிறார்.
ஆட்சிக்கு வருவதற்காக ஸ்டாலின் அவிழ்த்து விட்ட பொய்கள், ஒன்றா இரண்டா, எதைச் சொல்ல? பிரசாரம் செய்து, ஊடக பலத்தில் எப்படியெல்லாம் மக்களை நம்ப வைத்தார்கள்! உதாரணத்துக்கு சில…
ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க, ரோடு மட்டும் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது! ஸ்டெர்லைட் ஆலையை இடித்து தரைமட்டமாக்கி அங்கே, மருத்துவமனை கட்டப்படும்! இனி வட நாட்டு தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு போய்விடுவார்கள்! சௌகார்பேட்டை முழுக்க தமிழர்கள் குடி அமர்த்தபடுவார்கள். ஒரு மார்வாடி கடையைக்கூட இனி இங்கே பார்க்க முடியாது.
கேஸ் சிலிண்டர் 600 ரூபாய்க்கு வந்துடும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்படும். பெட்ரோல் மீதான மாநில வரி முழுவதும் நீக்கப்படும். இனி நீட் தேர்வு தமிழகத்தில் மட்டும் இருக்காது! ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், திமுக.,வினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்’ என்று தங்கை கனிமொழி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டாலின் கையெழுத்து போட்டு, எல்லா மது ஆலைகளையும் மூடிவிடுவார்கள்.
அம்பானி, அதானி குடும்பம் தமிழ்நாட்டில் இனி ஒரு குண்டூசி கூட விற்க முடியாது. ஜியோ, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் எல்லாம் மூடப்படும். தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கம்பெனிகள் இனி இருக்காது. விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள் என்பதால், இனி எந்த நெடுஞ்சாலையும் விரிவாக்கம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவருக்குமே மாதம் 1000 ரூபாய் கிடைப்பதால் செலவுகளுக்கு ஆண்களின் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லை! தனியார் பள்ளிகளில் இனி லட்சக்கணக்கில் கட்டணம் இருக்காது. அரசுப் பள்ளிக் கட்டணம் போலவே தனியாரும் வாங்க சட்டம் வரும். முக்கியமாக, பாஜக., உள்ளே வந்துவிடும் என்பதால் விழிப்புடன் இருந்து விரட்டுவோம். இனி பாஜக., கொடி ஒரு இடத்தில்கூட தமிழ்நாட்டில் பறக்காது.
இப்படியெல்லாம் நம்ப வைக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு திமுக., அரசு அளித்த பரிசு என்ன?!
திமுக., அகராதியில் சீரமைப்பு என்றாலே கட்டண உயர்வு என்றுதான் பொருள் ஆகிவிட்டது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி குப்பை வரிகள் உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, டாஸ்மாக், கஞ்சா நடமாட்டம், சிந்தடிக் போதைப் பொருள் அதிகரிப்பு, கள்ளச்சாராய நடமாட்டம் அதிகரிப்பு, கள்ள சாராய உயிரிழப்புகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை, பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், எங்கும் அதிகரித்துவிட்ட சட்டம் ஒழுங்கு சீரழிவு, பள்ளி ஆசிரியர்களின் பாதுகாப்பற்ற நிலை, குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆளும் கட்சியுடனான தொடர்புகள், அவற்றில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை என்று திமுக., அரசின் தோல்விகள் பட்டியலில் பக்கம் பக்கமாக நீளுகின்றன.
திமுக., அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தின் கடன் சுமை இரட்டிப்பாகியுள்ளது. இவை முதலீடுகளுக்கும் நலன் தரும் திட்டங்களுக்கும் என்றால் பரவாயில்லை, ஆனால் எல்லாமே கமிஷன் மற்றும் கொள்ளை அடிக்கும் வெற்றுத் திட்டங்களுக்கு என்பதாகத்தான் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். சென்னை வெள்ள சீரமைப்புக்கு ரூ.4 ஆயிரம் கோடி என்றார்கள், ஆனால் அரசின் செயல்பாடுகளால், அடுத்த சில நாட்களிலேயே நக்கிட்டுப் போன நாலாயிரம் கோடி என்று சமூகத் தளங்களில் விமர்சனம் கொடிகட்டிப் பறந்தது. பூங்காக்கள் அமைக்க என்று ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கினார்கள். இப்போது சென்னையில் பொதுக் கழிவறைகள் பராமரிப்புக்கு என்று கோடிக்கணக்கில் கணக்கு வழக்கின்றி வாரியிறைக்கிறார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம் புதிய முதலீடுகள் எதுவும் இல்லை, இருக்கும் முதலீடுகளும் நிறுவனங்களும் அண்டை மாநிலங்களுக்கு அலறிக் கொண்டு ஓடும் நிலை! சரிந்து வரும் வேலைவாய்ப்புகளும் குறைந்து வரும் கல்வித் தரமும் தமிழகத்தின் இளைய தலைமுறைக்கு பெரும் சவால்!
இந்தப் பின்னணியில்தான், இல்லாத இந்தி எதிர்ப்பு, சொல்லாத தொகுதி வரையறைகள் என, ஸ்டாலின் தன் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை மடைமாற்றுவதற்காகக் கையில் எடுத்த நாடகத்தனங்கள் இப்போது பொதுமக்களிடம் அவர் மீதான வெறுப்புணர்வை அதிகரிக்கவே செய்திருக்கிறது!
- கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்
- விஜயபாரதம் (14.03.2025) வார இதழில் வெளியான கட்டுரை