n
சென்னை:
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்து வந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை தகவல் அளித்திருந்தது.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 சதவீத இடம் வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர்.
இந்நிலையில், 85 சதவீத மாநிலப் பாடத்திற்கும் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 17 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும், வரும் 27 ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 7 ஆம் தேதி விண்ணப்பம் விநியோகம் நிறைவு பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 14 ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 17 ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை நேற்று வெளியிட்டது. இந்தத் தேர்வில், 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8 திருநங்கையரில் 5 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரத்தின்படி, நாடு முழுவதும் 470 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 65,170 எம்.பி.பி.எஸ். இடங்களும், 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இக்கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் கலந்தாய்வு மூலம் நிரப்புவர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் மாநில அரசே கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
முன்னதாக, தமிழகத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதினர். இதில், சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியில் எழுதினர். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. மேலும் மொத்த மதிப்பெண் 720-க்கு தமிழக மாணவர்கள் சராசரியாக 300 மதிப்பெண் வரையே பெற்றனர். எனவே, இந்தப் பிரச்னையை சரிக்கட்டும் வகையில், மாநில கல்வி ஒதுக்கீட்டில் 85% என மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.




