இங்கிதம் பழகுவோம்(19) -விருந்தோம்பல் இனிக்க…

பொதுவாகவே எந்த ஓர் அலுவலகம் அல்லது நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களின் அன்பும், மரியாதையும் கொடுத்து பழகும் விதம், நேர்மை, செய்கின்ற வேலையில் நேர்த்தி இவற்றுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

     பொதுவாக வேலைபளு அதிகம் இருக்கும் நாட்களில் ஓட்டலில் சாப்பிடும் சூழல் ஏற்படும். அந்தவிதத்தில் சென்ற வாரத்தில் ஒருநாள் வழக்கமாக செல்லும் சங்கீதா ஓட்டலில் சாப்பிடச் சென்றிருந்தேன். வழக்கமாக அமரும் அந்த டேபிளையே தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டேன். அந்த டேபிளுக்கு வழக்கமாக வருகின்ற சர்வர்தான் அன்றும் வந்தார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வெள்ளை சீருடையில் கம்பீரமும், கனிவும் பொதிந்த புன்முறுவலுடன் ‘குட் ஆஃப்டர்னூன் மேடம்…’ என விஷ் செய்துவிட்டு மெனுகார்டை பவ்யமாக என் முன் வைத்தார். 

     மீல்ஸ் வந்ததும் ‘சாதம், கூட்டு, காய் இவை எது தேவை என்றாலும்  கேளுங்கள்… தருகிறோம்’ என்று அன்புடன் சொல்லிவிட்டு அடுத்த டேபிளில் வந்தமர்ந்த வயதான 2 தாத்தாக்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.

     அவர்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்க அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை கவனித்தவர், உங்கள் உடல்நிலைக்கு இது பொருத்தமாக இருக்கும் என அவர் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொடுத்துவிட்டு அதைப்பற்றிப் பொறுமையாக விளக்கிக் கொண்டிருப்பதை பார்த்தவாறே நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

     அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு     என் டேபிள் திரும்பி  ‘என்ன காய்கறிகள் எல்லாம் அப்படியே இருக்கு. சாப்பிடுங்க… இன்னும் வேண்டுமென்றாலும் தருகிறோம்…’ என்று வீட்டில் அப்பா அம்மா பரிமாறுவதைப் போன்ற அன்புடன் சொல்லிவிட்டு சென்றார்.

     இதற்குள் அடுத்த டேபிள் தாத்தாக்கள் தட்டில் கிண்ணங்களை வைத்துக்கொண்டு நடுவில் கஷ்டப்பட்டு சாதத்தைப் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்தவர், அவர்கள் வசதியாக சாப்பிடுவதற்கு ஏற்ப அவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தட்டையும் எடுத்துவந்து கொடுத்து உதவி செய்தார். 

     என்னிடம் திரும்பி ‘இன்னும் சாதம் வேண்டுமா?’ என கேட்க, வேண்டாம் என்று நான் சொன்னதற்கு ‘தயிர், மோர் எல்லாம் இருக்கு அதற்கு சாதம் வேண்டாமா…’ என மீண்டும் வற்புறுத்த ‘நான் அவற்றை அப்படியே சாப்பிட்டுக்கொள்கிறேன்’ என சொன்னேன்.

     ‘பாயசமும் இருக்கு… மறந்துடாதீங்க…’ என அன்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

     எப்போதும் சாப்பிட்டு முடித்ததும் பில் செட்டில் செய்துவிட்டு வந்துவிடும் நான் அன்று அவருடன் பேச்சுக் கொடுத்தேன்.

     நான் ஏதோ சொல்ல வருகிறேன் என நினைத்து ‘யெஸ் மேடம்’ என பவ்யமாகக் கேட்க, ‘உங்களுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவே கூப்பிட்டேன்… நான் உங்கள் சர்வீஸை பலமுறை கவனித்திருக்கிறேன்… இவ்வளவு பொறுமையாக கனிவாக அன்பாக ஒரு ஆணால் பரிமாற முடியுமா என வியந்திருக்கிறேன்…’ என சொன்னவுடன் அவர் முகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மலர்ந்தது.

     ‘நம்ம  வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி கவனிப்போமோ அப்படி கவனித்துக்கொள்கிறேன்… அதுவும் நாங்க தஞ்சாவூர் பக்கம்மா… அந்த ஊர் பக்க பழக்கம். விருந்தினர்களை கவனிப்பதற்கு எங்க ஊர் மக்களை  அடித்துக்கொள்ள யாராலும் முடியாது…’ என்று பெருமையாகச் சொல்ல அதற்குள் நான் ‘அட நம்ம ஊர்காரர்’ என வியந்தபடி ‘தஞ்சாவூர் பக்கம் என்றால் எந்த ஊர்?’ என கேட்க ‘அப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்… தஞ்சை, திருச்சி, கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, குத்தாலம்… இப்படி பல ஊர்களில் இருந்திருக்கிறோம்… என்கூட பிறந்த ஒரு அண்ணன், ஒரு தம்பி இரண்டு பேரும் போலீஸ் டிபார்ட்மெண்ட்தான்… நான்தான் இந்தத் துறையில் இப்படி…’ என சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி சற்றே வெட்கப்பட்டு டேபிளில் இருந்த பொருட்களை அடுக்கியபடி கவனத்தை அதில் செலுத்தினார்.

     ‘அப்படியா, நான் பிறந்த ஊரும் கும்பகோணம்தான்…’ என சொல்ல அவர் முகம் இன்னும் பிரகாசமானது.

     ‘ஊர் வாசம் கண்டுபிடிச்சுட்டீங்க… ரொம்ப நன்றி…’ என மகிழ்ச்சியுடன் சொன்னவர் முத்தாய்ப்பாக மற்றுமொரு கருத்தையும் சொன்னார்.

     ‘ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் கோவமாக வரலாம், சந்தோஷமாக வரலாம் எது எப்படியோ பசியோடு வரவார்கள்… எனவே அவர்கள் மனம் கோணாமல் விருந்தாளிகளை கவனிப்பதுபோல கவனிக்கணும் என்று எங்க எம்.டியும் சொல்லி இருக்கிறார்…’

     இந்த குணம்… இந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி என்னைக் கவர்ந்தது. தான், தான் வளர்ந்த சூழல், ஊர், தன்னை வளர்த்த அப்பா அம்மா இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தற்போது தான் பணிபுரிந்துவரும் இடத்தையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் இந்தப் பண்பு அவருடைய ஒட்டுமொத்த உன்னத குணத்தை உச்சாணி கொம்பில் தூக்கி நிறுத்துகிறது.

     அடுத்த கஸ்டமரை கவனிக்கத் தயாரானவரிடம் ‘சார், உங்கள் பெயர் என்ன?’ என்றேன்.

      ‘எங்க குலதெய்வம் திருமேனியம்மன். அந்தப் பெயரில் எனக்கு  தங்கத் திருமேனி என்று பெயர் வைத்தார்கள்’ என்று தன் பெயரை அதன் காரணத்துடன் விரிவாகச் சொல்ல, நான்  ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி விடைபெற்றேன்.

      ‘தங்கத் திருமேனி’ பெயரில் மட்டுமல்ல குணத்திலும். நீண்ட நேரம் பெயரும் குணமும் என் மனதுக்குள் ஜொலித்துக் கொண்டிருந்தது.

(விகடகவி APP பத்திரிகையில் 10-01-2018 இதழில் வெளியான கட்டுரை)

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...