spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகாபெரியவர் பிறந்த வீடும் வேதபாடசாலையும்!

மகாபெரியவர் பிறந்த வீடும் வேதபாடசாலையும்!

- Advertisement -

ஓர் அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!

ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.

பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.

அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.

அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.

என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!

பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.

வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்று, அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

* அனுஷம் ஸ்பெஷல் இன்று! மகாபெரியவரின் திருநட்சத்திரம்

– வரகூரான் நாராயணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe