இலங்கைத் தேர்தல் முடிவுகள்: ஒரு திருப்புமுனையாய் இருக்கட்டும்!

உரத்த சிந்தனை கட்டுரைகள் சற்றுமுன்
maalan narayanan - 2026

இந்தக் கருத்து பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன்!

இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது.

அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது.
.
இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்?

அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation)

srilanka elections - 2026

உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன.

இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது

இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு.

அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன

இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும்
இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்

  • மாலன் நாராயணன், (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.