ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் வீர விளையாட்டு என்று எவன் சொன்னானோ தெரியவில்லை! அது இன்றைய நவீன விளையாட்டு அல்ல… ஆன்மிகச் சடங்கு!
ஏறு தழுவுதல் எனும் பெயரில் நமக்காக உழைக்கும் காளைக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைக் காட்டுவது. தட்டிக் கொடுத்து, கட்டித் தழுவி, அன்பைக் காட்டி, குழந்தைகளுடன் விளையாடுவதைப் போல் அன்புள்ளத்துடன் அணுக வேண்டிய ஒன்று – ஏறுதழுவுதல்.
இது தமிழர்களின் பண்டைய கிராமத்து தேவதைகளின் கால் தொட்டு, அனுமதி கேட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்து, பூஜை செய்து, வணங்கி வழிபட்டு பின்னர் நடத்தப் படும் ஆன்மிகச் சடங்கு. கோயில் காளையை முன்னிட்டு அதன் தொடர்ச்சியாக காளைகளைக் கட்டவிழ்த்து ஓடிப் பிடித்து விளையாடி அடக்கும் செயல்… சொல்லப் போனால் நம் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட்டுக் காட்டி மல்லுக்கு நிற்பதைப் போலானது!
ஆனால், விளையாட்டு என்ற பெயரில், கோயில்களின் ஆன்மிக வழியில் இருந்து அதனைப் பிரித்தால்… விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. நாம் கோயில் காளைக்கு பழமும் பொங்கலும் இன்னும் பிற உணவுப் பொருட்களும் கொடுத்து வணங்குவோம். மனிதனை மிருகமாக்கும் சாராயத்தை அதற்குக் கொடுத்து உசுப்பேற்ற மாட்டோம். இங்கே தான் மிருக வதை வருகிறது. இந்து சமய கோயில் வழிபாட்டு முறைகளில் இருந்து இதனைப் பிரித்து, வேற்று மதப் பின்னணிகளில் வைக்கும் போது, இதன் தன்மை கெட்டு… இப்போது நாம் சந்தித்த அனைத்துப் பிரச்னைகளும் தலைதூக்குகிறது.
இன்னும் விளையாட்டு என்ற வகைப்பிரிவில் இறங்கிவிட்டால், நவீன விளம்பரதாரர்கள் காத்திருக்கிறார்கள். சென்னை சூபர்கிங்க்ஸ் போல் உலகம்பட்டி மாடர்ன் மாடூஸ், செவலம்பட்டி சேட்டை காளைஸ், அகிலம்பட்டி அடங்கா ரூடர்ஸ், பனையம்பட்டி பணியா பாய்ஸ், அலங்காநல்லூர் அசத்தல் தெறீஸ் என்றெல்லாம் டீம் போட்டு, டிவி பொட்டியில் விளம்பரம் செய்து, லைவ் ஷோவெல்லாம் வைத்து, நம் கலாசாரத்தின் விழுதுகளையே வெட்டி எறிந்து நாசப் படுத்தி விடுவார்கள்…
எனவே மீண்டும் ஒரு முறை வேண்டுகோள்…
என் இனிய தென்னாட்டு மக்களே!
காளைகளை இந்து சமய ஆன்மிக விழாவில் இருந்து பிரித்து விடாதீர்கள்.
டிவி.,க்காரர்களை உள்ளே விடாதீர்கள்.
நீங்களும் போதை ஏற்றி, மாடுகளுக்கும் போதை தராதீர்.
விளம்பர யுகம் இது எச்சரிக்கை எச்சரிக்கை!



