October 26, 2021, 12:59 am
More

  ARTICLE - SECTIONS

  ராமாயணம், பாரதம், புராணம்லாம் பொய்னு பாரதியாரே சொல்லிட்டாரே! அப்படியா?!

  இதோ 2020 பிறக்கப்போகிறது. அதே அபத்த உளறலை இன்னொரு நிர்மூடன் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்ச்சூழலின் மந்தைகள் அதை இளித்துக் கேட்டுக்கொண்டு கை தட்டுகின்றன. வேதனை.

  bharathiar - 1

  நெல்லை கண்ணன் என்பவர் “இராமாயணம், மகாபாரதம், புராணம் எல்லாம் பொய் என்று பாரதியாரே சொல்லி விட்டார்” என்று தன் அவலட்சண ஆந்தைக் குரலில் அலறும் ஒரு வீடியோவைப் போட்டு, இது என்ன என்று கேட்டிருக்கிறார் கே.ஸ்ரீகாந்த். Shrikanth K.

  அதில் நெ.க. குறிப்பிடுவது கீழ்க்காணும் பாடல் வரிகள்:

  கடலினைத்தாவும் குரங்கும் வெங்
  கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
  வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
  வந்து சமன்செய் குட்டைமுனியும்

  நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
  நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
  விதியுறவே மணம் செய்த திறல்
  வீமனும் கற்பனை என்பது கண்டோம்

  ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்று
  உன்மையொன்றோதி மற்றொன்று பொய்யென்னும்
  நன்று புராணங்கள் செய்தார் அதில்
  நல்ல கவிதைகள் பலபல தந்தார்

  கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்..

  மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.

  இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம் –

  // கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும் //

  இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே “ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை” என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதமான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

  // விதியுறவே மணம் செய்த திறல்வீமனும் கற்பனை என்பது கண்டோம் //

  இந்த வீமனையும், அவன் சகோதரன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாகவே பாரதி காண்கிறார் –

  “விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
  விழியினால் விளக்குவாய் வா வா வா”
  (பாடல் – ஒளி படைத்த கண்ணினாய்)

  “முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா – என்னை
  உய்யக் கொண்டருளல் வேண்டும்”
  (பாடல் – தேடிச் சோறு நிதம்)

  “பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
  வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
  இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
  நற்றுணை புரிவர் வானக நாடுறும்”
  (பாடல் – சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)

  “முன்னை இலங்கை அரக்கர் அழிய
  முடித்த வில் யாருடை வில்? – எங்கள்
  அன்னை பயங்கரி பாரத தேவி நல்
  ஆரிய ராணியின் வில்”

  என்று ராமனை பாரத தேவியின் வடிவமாகவே கண்ட பாரதியா ஸ்ரீராமனை இழித்துரைத்தவன்? என்ன கொடுமை இது!

  இங்கு குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒரு வேதாந்தி என்ற நிலையில் முற்றான உலக வியவகார நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதி பாடியது, அவ்வளவே. (இதை யோக மொழியில் “நிவ்ருத்தி” என்பர்).

  சைவம், வைணவம் முதலான அறுசமயங்களையும் தழைக்கச் செய்து, இவற்றின் இறுதிப் பொருளாக இலங்கும் அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் ஆதிசங்கரர் – இது தெரிந்த விஷயம். அவரது “ஆன்ம ஷட்கம்” என்ற பிரசித்தமான பாடலில், சில வரிகள்-

  “நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
  ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
  எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
  ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
  சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!

  இந்த வரிகளை மட்டும் தனியாகக் காட்டி சங்கரர் வேதத்திற்கும், சைவத்திற்கும், வைணவத்திற்கும் எதிரி என்று பிதற்றுவது சரியா? அது போன்றது இங்கு சொல்லியிருப்பது.

  பாரதியின் ஆன்மிக, தேசிய, சமய தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் பிதற்றும் திராவிட இயக்க அறியாமையை.

  இவர் பாரதியைப் படித்த லட்சணம் இது தானா? இந்த அக்ஞானி பேசுவதை மட்டும் பாரதி கேட்டால், “நீ படித்த என் கவிதைகள் எல்லாம் மறந்து போகக் கடவது” என்று பரசுராமர் மாதிரி சாபமிட்டிருப்பார்.

  புராணங்கள் பற்றி பாரதி சொல்லும் இந்த ஒரு பாடலை மட்டும் காட்டிச் செய்யும் புரட்டுக்கள், விஷமத்தனம் தொடர்வதால், இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் சேர்க்கிறேன்:

  இந்து சமய நூல்களின் மேன்மையை நேரிடையாகப் புராணங்கள், சாத்திரங்கள் என்ற சொற்களையே இட்டு பாரதி புகழ்ந்துரைக்கும் இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன். இதன்றி, புராணக் கதை மாந்தர், கருப்பொருள், அவை கூறும் நீதிகள் இவற்றை எத்தனையோ பாடல்களில் அவர் எடுத்தாண்டுள்ளார் என்பதை பாரதியை ஓரளவாவது கற்றவர்கள் புரிந்து கொள்வர்.

  பாடல் 1: வீரர் முப்பத்திரண்டு கோடி” எனத் தொடங்கும் “பாரத மாதா நவரத்தின மாலை”யிலிருந்து

  அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
  ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
  பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
  பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
  இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
  என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
  மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
  விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.

  இப்பாடலில் பாரத ரிஷிகளின் ஞான ஒளி காலத்தை வென்று நிற்கிறது என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி.

  பாடல் 2: “மண்ணுலகின் மீதினிலே” என்று தொடங்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது வாழ்த்துப் பாக்கள்

  எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
  வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
  தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
  பெற்றிடுவார்; சதுர்வேதங்கள்
  மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
  இவ்வுண்மை விளங்கக் கூறும்
  துப்பான மதத்தினையே ஹிந்துமத
  மெனப்புவியோர் சொல்லு வாரே.

  பாரதி யோக நிலையில் நின்று புராணம், சாத்திரம் எல்லாம் கதைகளே என்று கூறுகிறார் என்பதை முன்பே விளக்கியிருக்கிறேன்.

  புராணங்கள் எல்லாம் குப்பைகள் என்று ஈவேரா, கருணாநிதி மற்றும் தான் கூறுவது போன்றே பாரதியும் கூறுகிறார் என்று இவர் சொல்ல வந்திருப்பது எப்படியிருக்கிறது?

  சுவாமி விவேகானந்தர் சொல்லுகிறார் – “பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் “புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்” என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?”

  அப்படித் தான் இருக்கிறது.

  பி.கு: 2007ம் ஆண்டு விகடன் “ஓ பக்கங்கள்” பகுதியில் காலஞ்சென்ற நிர்மூடர் ஞாநியின் உளறலுக்கு என் வலைப்பதிவில் நான் எழுதிய எதிர்வினை இது. இதோ 2020 பிறக்கப்போகிறது. அதே அபத்த உளறலை இன்னொரு நிர்மூடன் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்ச்சூழலின் மந்தைகள் அதை இளித்துக் கேட்டுக்கொண்டு கை தட்டுகின்றன. வேதனை.

  என்று தமிழ்நாட்டிலிருந்து ஒழியும் இந்த மலப்புழுக்கள், பீடைகள்?

  • எழுத்தாளர் ஜடாயு, பெங்களூர்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-