கடந்த 2009 மே நடந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் கொடுமைகள் ஆற்ற முடியாத துக்கமாகவே வாழ்க்கையில் கலந்து விட்டது. 2009 இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 15 ஆம் தேதி 2009 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட கட்டம் அது. 15 இரவிலிருந்து ஈழ இறுதிப் போர் மிகவும் கொடுமையாக இருந்தது. மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களை அழிக்கும் இந்தப் போர் உக்கிரமானது. இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான் ரஷ்யா மேலும் 15 நாடுகள் இலங்கைக்கு இந்த போரில் உதவின. மூன்றே நாட்களில் 2 லட்சம் தமிழர்களுக்கு மேல் ஈவு இரக்கமில்லாமல் அழிக்கப்பட்டனர். ஈழத்தில் ஒரே ஓலக்குரல். இப்படி துயர்மிகு காலங்களை எப்படி மறக்க முடியும்.
கடந்த 2007-2008 வன்னிப் பகுதியிலிருந்து 4 லட்சம் தமிழர்கள் இடம்பெயர வேண்டிய அபாயம் ஏற்பட்டது. வாழ்வுக்காக மட்டுமில்லாமல் வான்வழி தரைவழி என சிங்கள் ராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் தமிழர்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒவ்வோரு வீட்டிலும் தமிழர்கள் பதுங்கு குழி வெட்டி தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிகளை செய்தனர். வீடு இல்லாதவர்கள் வீதிகளிலும் மரங்களுக்கு கீழேயும் வாழ வேண்டிய துயர் நிலை. ஒரு கட்டத்தில் பதுங்கு குழிகளே மரணக் குழிகளாக ஆனது . அனைத்து தரப்பினரும் சாகடிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு தப்ப முடியவில்லை. ஐநா அகதிகள் ஆணையமும், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும் கடுமையான நிர்பந்தத்தினால் சிங்கள அரசு ஒப்புக்கும் பேருக்கும் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்து ஜெனீவா கோட்பாடுகளையும் மறுதலித்து ஐநா சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை புறந்தள்ளியது இலங்கை அரசு. இந்த நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் துரோக வலை என்று சிந்திக்காமல் அந்த வஞ்சக வலையில் சிக்குண்டார்கள். அவர்களும் கண்ணியமற்ற வழியில் கருணையில்லாமல் சாகடிக்கப்பட்டார்கள்.
ராஜபக்சேவின் உறுதிமொழிகள் யாவும் ஏமாற்ற மொழிகளாகவே இருந்தன. பாதுகாப்பு வளையங்களுக்கு வந்த தமிழர்களை சிங்கள பீரங்கித் தாக்குதலால் கொத்து கொத்தாக வேதனைக் குரலோடு மாண்டனர். உடல்களை கூட அடக்கம் செய்யாமல் குப்பைகளைப் போல தூக்கியெறிந்தார்கள். எங்குப் பார்த்தாலும் பிணக் குவியல்கள். முள்ளிவாய்க்கால் மணற்பாங்கான பூமி. அதுவும் பதுங்கு குழிகள் தோண்ட பொருத்தமான நிலமாக அமையவில்லை. உயிரோடு பதுங்கு குழியில் இருந்த மக்களை மண்ணை வைத்து மூடியதெல்லாம் கோரமாக இன்றைக்கும் மனதிற்கு வேதனை தருகின்றது. பல தாய்மார்கள் தன்னுடைய குழந்தைகளை மார்போடு அணைத்து சாகடிக்கப்பட்டனர். உடலை எரிக்கும் நபாம் குண்டுகளை உலக அளவில் பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தங்கள் இருந்தாலும் அந்த குண்டுகளை வைத்து உயிரோடு இருந்தவர்களை எரியும் பாஸ்பரசால் சாகடிக்கப்பட்டனர். தமிழர்களுடைய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், கோவில்கள் போன்ற பொதுக் கட்டுமானங்களையும் சிங்கள் அரசு அழித்தது. இப்படி இலங்கையில் சித்திரவதை கொடுமைகள் என்பது எழுதப்படாத திட்டங்கள் ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின் ஐநா மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை குறித்த சர்வதேச முறையில் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது. அன்றைய ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் இதைக் குறித்து அறிய ஒரு குழுவைப் பரிந்துரைத்தார்.
கடந்த 2010 ஜனவரியில், டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயமும் இந்த போர்க் கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் பான்-கீ-மூனின் குழுவை இலங்கைக்குள் வராமல் தடுத்தார் ராஜபக்சே. ராஜபக்சே சுயமாக LLRC என்ற குழுவை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உள்நாட்டிலே அவரே அமைத்துக் கொண்டார். அவர் நியமித்த இந்த LLRC குழுவின் பரிந்துரையை கூட அவர் நிறைவேற்றவில்லை. கடந்த 2013 ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியும் இலங்கை அரசு அதற்கு செவி மடுக்கவில்லை. கடந்த 2014-ல் அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல நாடுகள் ஒன்று கூடி இலங்கையில் நடக்கும் இந்த துயரங்களை விசாரிக்கவும் அங்குள்ள ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை முன்னெடுத்தது. ஈழத்தமிழருக்கு ஆதவான அந்த தீர்மானத்தில் 23 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. ஆனால் இந்தியா அதிசயமாக இலங்கையில் ஒருமைப்பாடு அவசியம் என்று இந்த வாக்கெடுப்பில் கலந்துக் கொள்வதில்லை என அறிவித்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்தியா, ராஜபக்சே பொறுப்பெடுத்து விசாரணை மேற்கொண்டு தீர்வுகள் கொண்டுவரட்டும் என்று சொன்னது தான் வேதனையிலும் வேதனை. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்தது.
ராஜபக்சே இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்குப் பின் வந்த சிரிசேனாவும் இதை புறந்தள்ளினார். இப்படியெல்லாம் நிலைமை. ஆனால் சர்வதேச சூழலில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் தூதுவர் பென் எமர்சன், அது போலவே அமெரிக்காவின் அரசியல் துறை செயலாளர் ஜெஃப்ரி பெல்ட்மேன் கடந்த 2017 ஜூலை 19 அன்று இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உண்மைகளை அறிந்தனர். ஆனால் அவர்கள் எடுத்துச் சொன்ன விஷயங்களை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. சிரிசேனா அதிபரானவுடன் இந்த சிக்கல் போக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் வகுக்கப்படும் என்றார். அதுவும் நடக்கவில்லை.போரில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தமிழர்களுடைய விவசாய நிலங்கள் விடுவிப்பு, தமிழர் பகுதியில் இருக்கும் ராணுவத்தை திரும்ப அழைத்தல் என்பது பேச்சோடு தான் இருந்ததே ஒழிய எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஐநா மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகள், பிரிட்டிஷ் பிரதமரின் கருத்துகள் என எதையும் கேட்காமல் சிங்கள அரசு தாந்தோன்றித்தனமாக தான் இலங்கை அரசு நடந்து வருகிறது.
நியாயங்களும் உண்மைகளும் மறைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதிகிடைக்காமல் இன்றைக்கும் அந்த துயரங்களை கடந்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் என்ன மனித நேயம் உள்ளது?
- கே. எஸ். இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)