
படிப்பறிவில் நம்பர் ஒன்றாம்! ஆனால் பட்டறிவில்… தோல்வியுற்ற கேரளம்!
கேரளத்தில் இரு தினங்களுக்கு முன்னர், பசியால் தவித்த கர்ப்பிணி யானைக்கு ‘மர்ம நபர்கள்’ அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததில், அந்த யானையின் வாய், தொண்டைப் பகுதிகள் கிழிந்து, காயம் பட்டு, அந்த எரிச்சலைத் தணிக்க நீருக்குள் யானை அமிழ்ந்து இருந்து, பின்னர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது தேசிய அளவில் எதிரொலித்தது. மனிதத் தன்மையற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. சமூகத் தளங்களிலும் இந்த முழக்கம் பெரும் அளவில் எதிரொலித்தது!
கர்ப்பிணி யானை மரணம் தொடர்பாக கேரள வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி மலப்புரம் நகரைச் சேர்ந்த வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டதை உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளனர், அவர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரான அப்துல் கரீம் மற்றும் அவரது மகன் ரியாசுதீன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
கேரள வனத்துறை ஒரு ட்வீட்டில், கே.எஃப்.டி – கேரள வனத்துறை குற்றவாளிகளை ஒன்று மில்லாததாக்கியுள்ளது; காட்டு யானை மரண வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காயமடைந்த யானை வனப்பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்ட போதிலும், யானையைக் காப்பாற்ற வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மே 27 அன்று பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் எல்லைக்கு அருகே நடந்தது இதயத்தை குலையச் செய்யும் இந்தச் சம்பவம். . பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தின் வெடிப்பில் அதன் கீழ் தாடை பலத்த சேதம் அடைந்தது. நாக்கு மற்றும் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக யானையால் எதுவுமே சாப்பிட முடியாமல், இரண்டு வாரங்கள் பட்டினி கிடந்தது.
போலீஸாரின் அறிக்கையின்படி, பட்டாசுகள் அன்னாசிப்பழத்தில் அடைக்கப்பட்ட வில்லை, ஆனால் தேங்காயில் அடைக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்ட வில்சன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
யானைக்கு நேர்ந்த இந்தக் கொடூரம், நாடு தழுவிய அளவில் சீற்றத்தை ஏற்படுத்தியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் மற்றும் பாஜக எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
மேனகா காந்தி, மலப்புரம் பகுதியை விமர்சித்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
சொந்த தொகுதியில் நெஞ்சை உருக்கும் செயல் யானையைக் கொன்ற வயநாடு அன்னாச்சி வெடிகுண்டு! வாய் திறக்காத வயநாடு எம்பி என்று ராகுலுக்கு மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

இந்த விவகாரம் குறித்து பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்குகள் நல உரிமை அமைப்பினை சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கருத்து…
யானை கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் வன அலுவலர்கள் அனைவரும் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் நடந்த பகுதி வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதி காங்கிரஸ் எம்பி யாக இருக்கும் ராகுல் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார்…
மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் அவர் தன் சொந்த தொகுதியில் நடந்து உள்ள பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று மேனகா கேள்வி எழுப்பியுள்ளார்
இதனிடையே மேனகா காந்தி வயநாடு மற்றும் மலப்புரம் பகுதியை குறிப்பிட்டு சொன்னதற்காக அவர் மீது மலப்புறம் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ., கவனத்துக்கு!
அன்று நாய்… இன்று யானை..! பயங்கரவாதப் பிடியில் மலபார்!
கடந்த 2012ல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம் இது. அப்போது, கேரளாவில், குறிப்பாக மலபார் பிராந்தியத்தில் நாய்கள் மிக மோசமான நேரத்தைச் சந்தித்தன. மலப்புரத்தில் உள்ள அரிகோட் நகரைச் சேர்ந்த ஜெயமோகன், தனது செல்ல நாய் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டபோது, அவர் சமூக விரோதிகளின் செயல் இது என்று சந்தேகித்தார்! ஆனால், அவர் ஒருபோதும் அது குறித்து புகார் கொடுக்க கவலைப்படவில்லை.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நாய்கள் காயமடைந்து, சில நேரங்களில், கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகின! இருப்பினும், குற்றம் செய்தவர்கள் குறித்து எந்த துப்பும் இல்லாததால், காவல்துறை செய்வதறியாது திகைத்தது.
அந்த நேரம்தான், மாநில உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்திடம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது! சில பயங்கரவாத அமைப்புகள் மாநிலத்தில் பயிற்சியளித்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான நாய்கள், பெரும்பாலும் தெரு நாய்கள் பாதிக்கப்படுவது அது தொடர்பானதே என்றும் தெரிவித்தது.
இதில் பொதுவான அனுமானம் என்னவென்றால், இந்தக் குழுக்கள் இத்தகைய உயிரினங்களை வைத்து தங்கள் ஆயுதச் சோதனையை மேற்கொள்கின்றன என்பதுதான். மனிதர்கள் மீது பிரயோகப் படுத்துவதற்கு முன்பு, இவற்றை பயிற்சிக் களனாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக, இந்தக் குழுக்கள் நாய்களை சித்ரவதை செய்கின்றன., அவர்கள் பெரும்பாலும் கழுத்தில் குறிவைக்கிறார்கள். மேலும், பைக்குகளில் பின்தொடர்ந்து ஹேக்கிங் செய்வதாக சந்தேகப் படுகின்றனர்.
இது மாநிலத்தில் அரசியல் / மத கொலைகளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளில் ஒன்று. ஹேக் செய்யப்பட்ட சில நாய்களின் பிரேத பரிசோதனையில், நாய்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றைத் தாக்க கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
“இந்த பிரச்னையை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் பாலக்காடு மற்றும் வயநாடு வனப்பகுதியில் பதிவாகியுள்ளதால், காவல்துறை வனத்துறையின் உதவியையும் கோரியுள்ளது,” என்று அப்போதைய உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களை பயங்கரவாத குழுக்கள் மேற்கொள்ளும் ஆயுத பயிற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என்று கூறினார் ஒரு சிறப்பு காவல் அதிகாரி. “மலப்புரத்தில் பொன்னானி மற்றும் கோட்டயத்தில் உள்ள எராட்டுப்பேட்டா ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட சில குழுக்களின் நடவடிக்கைகள் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
வன வாய்ப்பைக் கூட நிராகரிக்க முடியாது. என்ஐஏ தனது அறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இந்த மாநிலம் மாறி வருவதாக சுட்டிக்காட்டியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தப்ளிக் இ ஜமா-அத் ஆகியன தொடர்புடைய சில அமைப்புகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் ஏற்கெனவே புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் உள்ளன. சில சம்பவங்கள் வயநாட்டில் இருந்து பதிவாகியுள்ளதால், இந்த சம்பவத்தில் மாவோயிச கூறுகளின் தொடர்பையும் போலீசார் நிராகரிக்கவில்லை… என்று இந்தியா டுடேயில் வெளியான அந்த செய்தி அன்று தெளிவாக எடுத்துக் காட்டியது.
(source url: https://www.indiatoday.in/india/south/story/stray-dogs-kerala-malabar-region-extremist-elements-121280-2012-11-12)

காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, எழுத்தாளர் ஜெயமோஹன் சில விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு பகுதி…
மலை விவசாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த யானைப்படுகொலை நடந்திருக்கிறது. மேற்குமலைப்பகுதியில் விளைநிலங்களை அழிக்கும் முக்கியமான சக்தி என்பது காட்டுப்பன்றி. அவற்றை வேட்டையாடும் விலங்குகள் காட்டில் குறைந்துவருகின்றன. காட்டுபன்றி உணவுக்கேற்ப பெருகுவது. மேற்குமலைச் சரிவுகளில் விவசாயங்களில் பெரும்பகுதி மரவள்ளி உள்ளிட்ட கிழங்குகள். அவை பன்றிகளுக்கு உணவு. ஆகவே காட்டுப்பன்றி மிகப்பெரிய அளவில் பெருகியிருக்கிறது. சமீபகாலத்தில் காட்டுபன்றி வேட்டையை அதிகாரபூர்வமாக அல்லாமல் கேரள அரசு அங்கீகரித்துள்ளது என்றார்கள்
காட்டுபன்றிகள் இரவில் காட்டிலிருந்து விளைநிலங்களுக்குள் வருபவை. அவற்றை பொறிகளில் வீழ்த்துவது கடினம். அவை கடினமான தேற்றைகளால் பொறிகளை உடைக்கும். அவற்றை வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் சவிட்டுவெடி என்று சொல்லப்படும் இந்த வெடி.
இது பட்டாசு அல்ல. சிவகாசி வெடிமருந்தை கண்ணாடித் துண்டுகள் அல்லது சல்லிக்கற்களையும் கலந்து உருட்டி ஒரு பந்துபோல ஆக்கி அதன்மேல் சாக்குநூல் சுற்றி இந்த வெடி உருவாக்கப்படுகிறது. இதை கிழங்குகள் பழங்களுக்குள் வைத்து விளைநிலங்களில் போட்டுவைப்பார்கள். பன்றி இதைக் கடிக்கும்போது உள்ளிருக்கும் கண்ணாடி அல்லது சல்லிக்கல் உரசிக்கொண்டு வெப்பம் உருவாகும். குண்டு வெடிக்கும். அதன் தலைசிதறும். அந்தப் பன்றியை பெரும்பாலும் வேறு விலங்குகள் சாப்பிடும். சாப்பிடாவிட்டால் மறுநாள் எடுத்து மனிதர்கள் சாப்பிடுவார்கள்.
இந்த சவிட்டுவெடியில் மனிதர்கள் மிதித்து கால் வெடிப்பதுண்டு. வேறுவிலங்குகள் கடிப்பதுண்டு. அடிக்கடி வெடித்துச் சாவது கரடி, காட்டெருது ஆகியவை. மேய்ச்சல் விலங்குகளும் சிக்கிக்கொள்ளும். மிக அதிகமாக மாட்டிக்கொள்பவர்கள் மனிதர்களே. கேரளத்திலும் இந்தப்பக்கம் தேனீ கம்பம் முதல் தென்காசி பேச்சிப்பாறை வரை தமிழகம் சார்ந்த மேற்குமலைப் பகுதிகளிலும் காட்டில் நடமாடுபவர்களுக்கு இந்த வெடிகள் பெரிய அபாயங்கள். இம்முறை யானை அதை கடித்து உயிர்விட்டிருக்கிறது.
இந்த வெடி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, இதை வைப்பது குற்றம், ஆனால் சாதாரணமாகச் செய்யப்படுகிறது. போலீஸோ வனத்துறையோ இதை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. எனென்றால் மொத்த மலைப்பகுதியும் கட்டுபபட்டில் இல்லை. தமிழகத்திலும் இது நடக்கிறது. பெரும்பாலும் செய்தியாக ஆவதில்லை- யானை மாட்டிக்கொண்டால் மட்டுமே செய்தியாக வாய்ப்பு… – என்று தெரிவிக்கிறார் ஜெயமோஹன்.
இப்போது போலீஸிடம் பிடிபட்ட நபரும், இது காட்டுப் பன்றிக்காக வைக்கப் பட்ட வெடிமருந்து என்கிறார். எப்படி இருந்தாலும் அதுவும் கூட குற்றம் தானே என்று எண்ணுகின்ற சூழலில், மாநில அரசு திடீரென்று காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்லும் உரிமையை விவசாயிக்கு வழங்குவதாகக் கூறியுள்ளது.
எனவே மதக் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, மாநிலத்தின் ஓட்டு வங்கி அரசியலுக்கும் உள்ளே புகுந்து இந்த விவகாரத்தைப் பார்க்கும் போது… யானை பன்றியாகி, பன்றி எத்தகைய நிலையிலும் கொல்லத் தக்கது என்றாகி… ஒரு யானைக்காக, இன்று எத்தனை பன்றிகளை வேண்டுமானாலும் சுட்டுத் தள்ளலாம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது கேரள கம்யூனிஸ்ட்களின் ஆசியின் லட்சணம்!