உண்மையில் மனு ஸ்ம்ருதி என்றால் என்ன? அது ஹிந்து தர்ம நூலா? அல்லது ஆன்மீக நூலா? இதனை ஹிந்துக்கள் படிக்கிறார்களா? படித்து கடைபிடிக்கிறார்களா? அவ்வாறு கடைபிடிக்க வேண்டுமென்ற கட்டாய நியமம் ஏதாவது உள்ளதா? இது இந்த காலத்துக்கு ஏற்றதா? இதனை வேதக் கல்வி நிலையங்கள், வேத பாடசாலைகளில் போதிக்கிறார்களா? இதில் முழுமையும் தீய கருத்துக்களே உள்ளனவா? நல்லவை கூட உள்ளதா? தீயவை அதிகம் உள்ளதா? நல்லவை அதிகம் உள்ளதா? ஒரு வேளை நல்லவை இருந்தால் அவற்றை ஒதுக்கிவிட்டு தீயவற்றை மட்டுமே எடுத்துக் காட்டுவதன் நோக்கம் என்ன? மனு ஸ்ம்ருதியிலிருந்து தற்போதைய சமுதாயம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது உள்ளதா? மனு ஸ்ம்ருதியிலிருந்து நாம் என்ன கற்கலாம்?
மனு ஸ்ம்ருதி என்ற பெயரைக் கேட்டவுடன் மத மாற்றம் செய்பவர்களுக்கும், ஹிந்து தர்மத்தை விமரிசிப்பவர்களுக்கும் உடனே அதன் மீது காதல் பிறந்துவிடும்.
மனு ஸ்ம்ருதி புராதனமான க்ருத யுகத்தைச் சேர்ந்த ஹிந்து தர்ம சாத்திரங்களில் ஒன்று. இதனை மனு என்பவர் க்ருத யுகக் காலத்திற்கு ஏற்றாற்போல் எழுதியுள்ளார். மனு ஸ்ம்ருதியை முதன் முதலில் 1772 ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முதலில் மொழிபெயர்க்கப்பட்ட ஹிந்து தர்ம நூல் கூட இதுவே. எந்த ஒரு சமஸ்கிருதச் சொல்லும் அறியாத ஆங்கிலேயர், அதோடு ஒரு கிறித்தவர் இதனை மொழிபெயர்த்தார் என்றால் இதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கும் வாய்ப்பே அதிகம். அதோடு ஹிந்து சமுதாயத்தை தவறான வழியில் செலுத்தும் விதமாகவே எழுதியுள்ளார் என்று அதனைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் ஐயம் ஏற்படும்.
மனிதன் மனிதானாக வாழ்வதற்கும் மனிதன் முன்னேறுவதற்கும் முக்கியமான தர்மத்தை போதிப்பவற்றுள் வேதத்திற்குப் பிறகு கூறப்படுபவை புராண, இதிகாசங்கள். பின்னர் வருபவை தர்ம சாத்திரங்கள். அவற்றுள் முதலில் எழுதப்பட்ட மனு ஸ்ம்ருதியும் ஒன்று. யுக யுகங்களாக மாறிவரும் காலத்தை முன்னிட்டு முனிவர்கள் எழுதிய தர்ம சாத்திரங்களும் மாறி வந்தன. தர்ம சாத்திரங்கள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே வந்தன.
க்ருதேது மானவா: ப்ரோக்த:
த்ரேதாயாம் கௌதம ஸ்ம்ருதி: !
த்வாபரே சங்க லிகிதௌ
கலௌ பராசர ஸ்ம்ருதி: !!
என்ற ஸ்லோகம் இது குறித்துக் கூறுகிறது.
கிருத யுகத்தில் மனு ஸ்ம்ருதி மிகவும் ஆதாரபூர்வமாக இருந்தது. அதே போல் த்ரேதா யுகத்தில் கௌதம தர்ம சாத்திரம், துவாபர யுகத்தில் சங்கர் எழுதிய ஸ்ம்ருதி பிரமாணமாக விளங்கியது. இந்த கலியுகத்தில் பராசர ஸ்ம்ருதி ஆதாரப் பூர்வமானதாகக் கூறப்படுகிறது என்பது இந்த செய்யுளின் பொருள்.
இது, மனு ஸ்ம்ருதியின் கிருத யுகப் பிரமாணத்தைக் கூறுவதோடு அதன் பழமையையும் தெரிவிக்கிறது. அது மட்டுமின்று மாறி வரும் காலத்தை ஒட்டி தர்ம சாத்திரம் மாறக் கூடியது என்பதையும் கூறுகிறது. பிற மத நூல்களைப் போல் பிடிவாதமானது அல்ல ஹிந்துமதம் என்பதும் இதில் தெளிவாகிறது.
பித்ரு சிராத்தங்களில் மாமிசம் உண்பது, தேவர்கள் மூலம் பிள்ளைகளைப் பெறுவது, தீண்டாமை… போன்றவற்றை மனு ஸ்ம்ருதி கூறியுள்ளபோது, பராசர ஸ்ம்ருதி கலியுகத்தில் அவை கூடாதவை என்று தெரிவிக்கிறது. இவையனைத்தும், சம்பிரதாயங்களும் தர்மமும் எவ்வாறு மாறுகின்றன, சமுதாய நலனை கருத்தில் கொண்டு எவ்வாறு மாற்றங்களைத் தெரிவிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
பெண்களின் திருமண விஷயத்தில் மனுவுக்கு ஆதரிசமான கருத்துகள் உள்ளன. கன்னிப் பெண்கள் தகுந்த வரனை சுயமாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடுகிறார். சுயம்வரம் செய்து கொள்ளும் அதிகாரமும் சுதந்திரமும் அளிக்கப்பட்டது.
த்ரீணி வர்ஷாணி உதீக்ஷேத குமார்யுதுமதீ சதீ !
உர்த்வந்து காலாதேதஸ்மா த்விந்தேத சத்ருசம் பதிம் !!
–மனு ஸ்ம்ருதி 9-90.
கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் வரும்போது, வீட்டுக்கு விலக்கான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகம் செய்து கொள்ளலாம். விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு அதிகாரம் உள்ளது என்கிறது மனு ஸ்ம்ருதி.
ந கன்யா: பிதா வித்வான் கிருஷ்ணையாச்சுல்க மண்வபி !
கிருஷ்ணாம்ச்சுல்கம் ஹிலோபே ச ஸ்யான்ன ரோ பத்ய விக்ரயா !!
அறிவுள்ள கன்னிப் பெண்ணின் தந்தை, பெண் திருமண விஷயத்தில் சிறிது கூட தனம் பெற்றுக் கொள்ளக் கூடாது. பேராசையால தனம் பெற்றால் அவன் சந்தானத்தை விற்றவனாகிறான் என்பது இதன் பொருள்.
இவ்விதமான மனு மகரிஷி கன்யாசுல்கம் எனப்படும் எதிர்ஜாமீன், வரதட்சணை இரண்டையும் மறுத்தார்.
காமமா மரணாத்திஷ்டேத் க்ருஹி கன்யர்துமத்யபி !
நசைவைனாம் ப்ரயச்சேத்து குண ஹீனாய கர்ஹிசித் !!
கன்னிப்பெண் மரணமடையும்வரை, குமாரியாகவே இருக்கலாமே தவிர குணமற்றவனோடு திருமணம் செய்விக்கக் கூடாது. சகல நற்குணங்களும் கொண்ட கன்னிப் பெண் தீய குணமுள்ளவனின் வீட்டில் பிறந்தாலும் உத்தமமான ரத்தினமாக எண்ணி அப்பெண்ணை ஏற்கவேண்டுமென்பது மனுவின் கருத்து.
“யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா !
“யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே சர்வாஸ்தத்ர பலா: க்ரியா: !!” என்பது மனு தர்ம சாஸ்திர வசனம்.
பெண்கள் எங்கு கௌரவிக்கப்படுவார்களோ அங்கு தேவதைகள் வசிப்பார்கள். பெண்களை அவமதிக்கும் இடத்தில் சகல காரியங்களும் சகல பலன்களும் நாசமடையும் என்பது இதன் பொருள்.
பெண்கள் குறித்து மனுவிற்கு இத்தகைய உயர்ந்த கௌரவம் உள்ளபோது அவரை நித்திப்பது மனித் தன்மையற்ற செயல்.
ஹிந்துப் பெண்கள் விபச்சாரிகள் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறதா?
ஹிந்துக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கும், ஹிந்து மதம் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கும் ஹிந்து வெறுப்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து வருகிறார்கள். இந்தியாவெங்கும் இத்தகைய ஹிந்து மத வெறுப்பு அரசியல் அதிகரித்து வருகிறது. மனு ஸ்ம்ருதி ஒன்றுதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. அதன் மூல சமஸ்கிருத நூலை இவர்கள் யாரும் பார்த்ததில்லை. மனு ஸ்ம்ருதியை 17 வது நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்த தி ஏசியாடிக் சொசைடியியைச் சேர்ந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்க்ருதத்தில் ஒவ்வொரு பதத்திற்கும் பல பொருள்கள் இருக்கும். அப்படியிருக்கையில் ஜோன்சுக்கு சமஸ்கிருதம் எந்த அளவு தெரியும்? எந்த அடிப்படையில் இவருடைய மொழிபெயர்ப்பை பிரமாணமாக எடுத்துக் கொள்ள முடியும்?
நம் பாரத தேச வரலாற்றை வக்கிரமாக தூற்றி எழுதுவது இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. உதாரணத்துக்கு காளிதாசருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கால இடைவெளி உள்ளது. ஆனால் இவர்கள் காளிதாசரை இரண்டாவது ஷேக்ஸ்பியர் என்று புகழ்ந்து ஷேக்ஸ்பியருக்குப் பிறகு காளிதாசர் பிறந்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மை வரலாறு தெரியாத நம்மவர்கள் அதுவே உண்மை என்று நினைப்பார்கள்.
மனுஸ்மிருதி எப்போது பிறந்தது? யார் எழுதினார்கள்? எந்த எந்த அரசுகள் இந்த நூலின் ஆதாரமாக அரசாட்சி நடத்தின? யாராவது கூற முடியுமா? ஜோன்ஸ் மொழிபெயர்த்த மனு ஸ்ம்ருதியிலிருந்து ஒன்றிரண்டு வாக்கியங்களை எடுத்துக் கொண்டு ஹிந்துக்கள் மீது சேறு வாரி இறைப்பது ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு வழக்கமாகி விட்டது. ஸ்ருதி என்று கூறப்படும் வேதங்கள், சம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் போன்ற ஹிந்து நூல்களில் எங்காவது பெண்களுக்கு எதிராகவோ ஆண்களுக்கு அனுகூலமாகவோ ஓர் சொல்லாவது உள்ளதா? சனாதன தர்மம் பற்றி அ, ஆ கூடத் தெரியாத அரைகுறைகள் அனைவரும் ஹிந்து மதம் குறித்து உளறுகிறார்கள். நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளில் காலத்திற்கேற்ப அவ்வப்போது சூழ்நிலையைப் பொறுத்து ஆங்கீரச ஸ்ம்ருதி, வியாச ஸ்ம்ருதி, ஆபஸ்தம்ப ஸ்ம்ருதி, யாஞவல்க்ய ஸ்ம்ருதி போன்ற பல் ஸ்ம்ருதிகள் அந்தந்த காலத்திற்கு ஏற்ப வந்தன கால கர்பத்தில் கலந்து போயின கூட. இவற்றுள் மனு ஸ்ம்ருதியும் ஒன்று.
1947 ல் நாம் ஏற்படுத்திக் கொண்ட டாக்டர் அம்பேத்கர் ஸ்ம்ருதிக்கு கடந்த 70 ஆண்டுகளில் காலத்திற்கேற்ப 104 மாற்றங்கள் செய்துள்ளோம்
மீதி உள்ள ஸ்ம்ருதிகளை விட்டுவிட்டு மனு ஸ்ம்ருதியை மட்டுமே ஹிந்து வெறுப்பாளர்கள் என் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள்? ஏனென்றால்… ஜோன்ஸ் என்ற மேதாவி இவர்களுக்கு அனுகூலமாக அதனை மொழிபெயர்த்ததால். மேலும் இவர்கள் கூறுகிறார்கள், ஆயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மம் ஹிந்து பெண்களை அடக்கி ஆளுகிறதாம். பிரிட்டிஷார் வந்த பின்பே பெண்ணுக்கு சம உரிமை, கல்வி அளிக்கப்பட்டதாம். அதாவது ஆயிரம் ஆண்டுகளாக பெண்கள் புர்க்கா தரித்து இருட்டு குகையில் அடைந்து கிடந்தார்களா, என்ன? வேடிக்கையாக இல்லை? லோபா முத்ரை, லீலாவதி, மைத்ரேயி, கார்கி, லல்லேச்வரி, மீரா பாயி போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் பாரத பூமியில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக கல்வி அறிஞர்களாக பிரகாசித்தார்கள். இவரகளனைவருக்கும் வெள்ளையர்கள் தான் கல்வி கற்பித்தார்களா? இந்திய தேசத்தில் பிறந்த சிவாஜி, ராணா பிரதாப் போன்ற பல சக்ரவர்த்திகள் தாயிடமே கல்வியறிவு பெற்றார்கள். பாணினி தன் நூலில் பெண்களுக்குப் பள்ளியில் தனியாக ஹாஸ்டல் வசதி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெண்களை எப்போதுமே குறைவாக மதிப்பிடவில்லை. ஹிந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் பெண்கள தெய்வங்களாக, தேவதைகளாக வழிபடும் சம்பிரதாயமே இல்லை. ஒரு பெண்ணுக்கு நட்ட நடு சபையில் அவமதிப்பு ஏற்பட்டதால் மகாபாரத யுத்தத்தில் கௌரவர்கள் அனைவரும் அழிந்தார்கள். ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாத போதும், தூக்கிச் சென்றதால் இலங்கை நகரம் சர்வ நாசமாகிப் போனது. உலகில் எங்குமில்லாத விதமாக நம் பாரத நாட்டை மட்டுமே மாத்ரு பூமியாகப் போற்றி வழிபடுகிறோம். கல்வியை சரஸ்வதியாக, செல்வத்தை லட்சுமியாக, வலிமையை சக்தியாக வழிபடுகிறோம். மாதா பிதா குரு தெய்வம் என்று பெண்ணுக்கு முதலிடம் அளித்துள்ளது சனதான தர்மம்.
செய்யக்கூடாத பாவங்களைச் செய்தாலும் அப்பாவங்களைத் தீர்க்கும் சக்தி பெண்ணுக்கு மட்டுமே உள்ளதென்று கங்கை யமுனை சரஸ்வதி நர்மதை என்று சப்த நதிகளை பெண்களாக வர்ணித்து பெண்களின் உயர்வைக் கூறியுள்ளன நம் வேதங்கள். சக்தியில்லாவிட்டால் தானும் இல்லை என்று கூறும் விதமாக சிவன் அர்த்த நாரீஸ்வரனாக காட்சி தருகிறார். விஷ்ணு லட்சுமி தேவியைத் தன் இதயத்தில் இருத்திக் கொண்டார். பிரம்மா சரஸ்வதி தேவிக்கு ஞானமாக முக்கியத்துவம் அளிக்கிறார். முப்பத்து முக்கோடி தேவதைகளில் எத்தனை பேர் ஆண் தேவதைகள் உள்ளார்களோ அவர்களுக்குச் சமமாக பெண் தேவதைகளும் உள்ளார்கள். நம் வேதங்கள் அளித்துள்ள ஸ்ரீசூக்தம், நீலா சூக்தம் போன்ற பல சூக்தங்கள் பெண் தெய்வங்களுடையவையே! மனைவி உடன் இல்லாத போது கணவன் யக்ஞம் செய்யக் கூடாது என்று நம் தர்மம் கூறுகிறது. இரப்பவனும், பவதி பிட்சாம் தேஹி என்று கூறுவானே தவிர புருஷ பிட்சாம் தேஹி என்று கூறுவதில்லை. ஏனென்றால் பசியைப் போக்குவது பெண் வடிவில் உள்ள தாய் மட்டுமே. கிருகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தாய், தங்கை, மனைவி… என்று வீட்டுப் பெண் வலது கால் வைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று ஹிந்து தர்ம நூல்கள் பெண்ணின் உயர்வை எடுத்துரைக்கின்றன.
டாக்டர் தர்மபால் எழுதிய தி பியூட்டிபுல் ட்ரீ என்ற நூலில் 1720 ல் பிரிட்டிஷ் காலத்தில் தாமஸ் மன்ரோ பிரபுவாக இருந்த போது நாடெங்கிலும் கல்வி அமைப்பு எவ்வாறு இருந்தது என்று ஆராய வேண்டுமென்று மெட்ராஸ் பிரசிடென்சி இன்டீஜீனியஸ் எஜுகேஷன் சர்வே என்று பல கிராமங்கள், நகரங்களில் நடத்தினார்கள். இவர்களின் கணக்குப்படி மெட்ராஸ் பிரசிடென்சியில் தெலுங்கு, தமிழ், கன்னடம் பேசும் இடங்களில் மட்டும் 11 பேர் வைசியர்கள், 627 பேர் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்கள், 317 பேர் பிற ஜாதிப் பெண்கள், 239 பேர் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்று வந்தார்கள் என்றறிந்து வியப்படைந்தார்கள். ஆதாரத்தோடு கூறப்பட்ட இந்த கணக்கு கூட தவறாகுமா? இவர்களைக் கூட பிரிடிஷ் பிரபுக்கள்தான் படிக்க வைத்தார்களா?
சனாதன தர்மத்தில் பெண்களின் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக இவர்கள் பேசுகிறார்கள். வக்கிரமாக வரலாற்றை மாற்றி, சிவப்பு கண்ணாடி அணிந்து உலக வரலாற்றைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும். சதி உடன்கட்டை இந்தியாவில் பரவியது முஸ்லீம் அரசாட்சியின் கொடூரமான வன்முறையைக் தாங்க முடியாமல்தானே தவிர அதற்கு முன்பு இருந்ததில்லை. வரதட்சணை புகுந்தது பிரிடிஷாரின் வருகைக்குப் பின்தானே தவிர அதற்கு முன்பு இல்லை.
ஒரு முறை விக்கிபீடியாவைத் திறந்து பார்த்தால் ஒவ்வொரு நாட்டின் ஜாதகமும் வெளிப்படும். உலக நாடுகள் அனைத்திலும் பாரத தேசம் மட்டுமே அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தது என்ற உண்மை வெளிப்படும். 2006 ல் UN க்கு பிரதிநிதியாக இருந்த கோபி அன்னன் உலகம் எங்கும் பார்த்தால் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்முறைக்கும் ஆளாகிறார் என்கிறார். இதற்குக் கூட சனாதன தர்மமே காரணமா? 2015 ல் அமெரிக்கா பலகலைகழகங்களில் செய்த சர்வே படி இருபத்திமூன்று சதவிகித சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது தெரிந்தது. அங்கும் சனாதன தர்மம் உள்ளதா? மனுதர்மம் உள்ளதா? அமெரிக்காவில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. இன்று வரை அமெரிக்க அதிபராக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெக்கவில்லை. அப்படிப்பட்டவர்களா இந்தியர்களுக்கு பண்பாடு கற்றுத்தருவது? சமத்துவம் பேசுவது? ஆனால் இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், ராணி அவந்தீபாய், ராணி ருத்ரமாதேவி, வேலு நாற்சியார், ராணி அப்பக்கா, நாயகி நாகம்மா போன்ற பல வீர வனிதைகள் பிறந்தார்கள். அரசுகளை ஆண்டார்கள். 1857 ல் தலித் வீரப் பெண்மணி ஜல்காநிபாயி பிரிட்டிஷாரை எதிர்த்தாள்.
இன்றைய ஹிந்து எதிர்ப்பு அரசியல்வாதிகள் உண்மை தெரியாதவர்கள் அல்லர். இவ்வாறு உளறுவதற்கு வேற்று மதங்களும் தீய சக்திகளும் தூண்டுகோலாயுள்ளன. உலக நாடுகளில் இந்தியாவின் உயர்வைத் தாழ்த்துவதற்காகச் செய்யும் சதித் திட்டம் இது. இவ்விதமான பொய்ப் பிரசாரத்தால் இந்தியாவும் பெண்களின் முன்னேற்றத்திகு மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்றாக பெயர் பெறுகிறது.
இந்துக்களை கீழ்மைப்படுத்துவதற்கு தீய சக்திகள் முனைகின்றன. குந்துமணி தன் கீழுள்ள மச்சத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அது பார்த்துக் கொள்ளாது. 2018 வரை சௌதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை கூட இல்லை. இப்போதும் பல முஸ்லீம் நாடுகளில் அமலில் உள்ள ஷரியா சட்டம் மூலம் சித்திரவதைக்கு ஆளாகும் முஸ்லீம் பெண்களைப் பற்றியோ, நூறு ஆண்டுகள் முன்வரை மிடில் ஈஸ்ட் நாடுகளில் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்பனை செய்தது குறித்தோ, கள்ளம் கபடமற்ற சிறுமிகளை அரபு சேட்டுகள் மணம் புரிந்து கடத்திச் சென்ற செய்திகளைப் பற்றியோ விவாதிக்கும் தைரியம் இந்த தலைவர்களுக்கு உள்ளதா? உண்மை வரலலற்றை மறைத்து வைத்து வக்கிரமாக மாற்றி எழுதிய வரலாற்றை வைத்துக் கொண்டு கழுதையை குதிரை என்றால் நம்புபவர்கள் இங்கு யாரும் இல்லை. குதிரையைக் காட்டி கழுதை என்றல் தலையாட்டுபவர்களும் யாருமில்லை. இது நவீன பாரதம்.
கட்டுரை தொகுப்பு; ராஜி ரகுநாதன்.