
வைகுண்ட ஏகாதசி
– கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் –
மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாள் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதேசி என்று அழைக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனின் சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்றும் இச் சொர்க்க வாசலை (வைணவ கோவில்களில்) மிதிப்பவர்கள் பாக்கிய சாலிகள் என்பதும் ஹிந்துக்களின் ஒரு நம்பிக்கை!
வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்ற பெயரும் உண்டு
வைகுண்ட ஏகாதசி அன்று தான் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்நாளை கீதா ஜெயந்தி என்றும் வட இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமியன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு ஏகாதசி அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் எழுந்து நீராடி ஸ்ரீ வைகுண்ட நாதனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி சூரிய உதயத்திற்கு முன் பாரணை (உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை முடிப்பது) செய்ய வேண்டும். உணவில் நெல்லிக்கனி, அகத்திக் கீரை,சுண்டைக்காய், மற்றும் 21 வகையான காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக் கனியில் வாசம் செய்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. நெல்லிக்கனி கிருஷ்ணனுக்கு உகந்த கனி.
மார்கழிக்கு முந்திய மாதம் கார்த்திகை மாதம்.இந்த கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லி மரத்துக்குப் பூஜை செய்வார்கள் தென் மாவட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இராவணன் செய்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்கள் வைகுண்டம் சென்று மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீமத் நாராயணனை வணங்கி தாங்கள் அடைந்த துன்பங்களைக் கூறினார்கள்.
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதமிருந்து பின் கடலைக் கடந்து ராவணனை சம்ஹாரம் செய்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்ற பழமொழி தமிழில் உண்டு. ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும் அடுத்த திதியான துவாதசியில் உடல் தகனம் செய்வதும் புண்ணியமானது.
காசி ஷேத்திரத்தில் மரணமடைந்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் ஏகாதசி நாளில் இயற்கை எய்துபவர்களுக்கும் உண்டு என்று காசி தேசத்துப் புராணமும் கூறுகிறது.
1934ஆம் ஆண்டு காஞ்சிப் பெரியவர் கேரள தேசத்தில் விஜய யாத்திரை செய்தார். அதே ஆண்டில் கேரளத்தில் கதர் யாத்திரையை மேற்கொண்டார் மகாத்மா காந்திஜி.

நெல்லிச்சேரி என்னும் கிராமத்தில் மகாத்மா காந்தி காஞ்சிப் பெரியவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உடன் இருந்தவர் ராஜாஜி. ஆனால் காஞ்சி பெரியவர் காந்திஜி இருவரும் தனியே சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது என்ன பேசப்பட்டது என்பதை ஸ்ரீமடமோ அல்லது காந்திஜி தரப்பிலோ அறிக்கையாக வெளியிடவில்லை.
தன் மனைவிக்காக வைகுண்ட ஏகாதசி விரதம் போன்ற சில விரதங்களின் பலன்களை காஞ்சிப் பெரியவரிடம் இருந்து மகாத்மா காந்திஜிகேட்டுத் தெரிந்து கொண்டார் என்ற விவரத்தை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு பேட்டியின்போது தெரிவித்ததாக அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு என்றதும் நமது ஞாபகத்திற்கு வருவது ஸ்ரீரங்கம் தான்.
திருமாலின் சுயம்புத் தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஏழு உலகங்களைக் குறிக்கும் வண்ணம் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டப் புண்ணிய ஸ்தலமாகும்.
வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகப் பத்து நாட்களும் பின்பாகப் பத்து நாட்களும் ஸ்ரீரங்கத்தில் உற்சவங்கள் நடைபெறும். இதனை பகல்பத்து, இராப்பத்து என்று அழைக்கிறார்கள். பல வைணவ திருத்தலங்களிலும் பகல் பத்து, இராப்பத்து உற்சவங்கள் நடைபெறுவது உண்டு!
இவ் உற்சவத்தின் போது திவ்ய பிரபந்தம் இசைப்பார்கள்.ஸ்ரீரங்கத்தில் வெகு விமர்சையாக அரையர் சேவையும் நடைபெறும். அரசர் என்ற சொல்லின் திரிபு அரையர். ஆழ்வார்களின் பாடல்களை இசையுடன், அபிநயத்துடன் செய்வார்கள் அரையர்கள்.பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்வார்கள்.
அரசர்கள் தலையில் மகுடம் சூட்டிக் கொள்வதைப் போல் அரையர்கள் தலையில் பட்டுக் குல்லாய் அணியும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் கையில் தாளம் ஒன்றை ஏந்தி பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தின பத்து நாட்கள் பகல் உற்சவம் திருமொழித் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பின்னர் வரும் பத்து நாள் இராப் பத்து உற்சவம் எனக் கொண்டாடப்படுகிறது.
இந்த இராப் பத்து உற்சவத்தில் எண்ணைக் காப்பு உற்சவம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
61வகை மூலிகை கலந்த தைல ச்சக்கையால் ஆண்டாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
ஆண்டாள் தையிலச் சக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தின் அரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இத் தலத்திற்கு வருபவர்கள் பிரசாதமாகவும், இத்தலத்திற்கு வந்ததின் நினைவாகவும் தைலச் சக்கையை வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம்.
அடுத்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால் அங்குள்ள கடைகளில் விற்கப்படும் தைலச் சக்கையை நீங்களும் பிரசாதமாக வாங்கி மகிழலாமே?
வைகுண்ட ஏகாதசி திருவிழா…… நம்மை எப்போதும் கண்ணபிரானை நினைக்கும் சிந்தனையோடு இருக்க வைக்கட்டும்……..
டிசம்பர் 25 வைகுண்ட ஏகாதசி திருவிழா