
மார்கழி மாதத்தில் சிறப்புவாய்ந்த நாளான வைகுண்ட ஏகாதசி திருநாளான இன்று அனைத்து திருமால் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இன்று பரமபதவாசல் திறப்பு நிகழ்வு பெரும்பாலான வைணவ ஆலயங்களிலும் நடைபெற்று வருகின்றன .
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத்தின் தலைமையகம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் திருத்தலங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வைணவர்கள் போற்றி கொண்டாடும் 108 திவ்யதேசங்களில் பாண்டிய நாட்டின் மிக முக்கிய தலமான அழகர் கோயிலில் இன்று காலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அருகே உள்ளது அழகர்கோவில்! வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமான் பரமபதவாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக புறப்படாகி வந்து, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதில் கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.