ஏப்ரல் 10, 2021, 5:04 மணி சனிக்கிழமை
More

  விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-23)

  தலத்து அம்பிகைக்கு வெண்ணீற்று உமையம்மை என்பது பெயராயிற்று. இப்போதும் அந்தப் பெயரிலேயே அவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

  manakkula vinayakar

  விநாயகர் நான்மணிமாலை – பகுதி 23
  விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்


  பாடல் 29 – வெண்பா

  போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
  ஆற்ற லருளி யடியேனைத் – தேற்றமுடன்
  வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
  வீணையொலி என்னாவில் விண்டு.

  பொருள் – கல்யாணி என அழைக்கப்படும் உமையம்மையின் புதல்வனே, நான் எழுதுகின்ற பாட்டினில் ஆற்றல் மிகுந்த சொல்லும் பொருளும் அருளி என்னைத் தெளிவுடன் வீணையையுடைய வானியின் திருவடிகளை தினமும் போற்றி வணங்குமாறு செய்யவேண்டும். என் பாடல்களில் சரசுவதியின்யின் கையில் உள்ள வீணை எழுப்புகின்றதைப் போன்று சொல்லும் பொருளும் செறிந்து விளங்க அருளச்செய்ய வேண்டும்.

      பாடல் ‘போற்றி’ எனத் தொடங்கி, ‘விண்டு’ என முடிகிறது.

  உமையம்மையை கல்யாணி என வழங்குகின்ற தலங்கள் பல உள்ளன். அவற்றுள் ‘ஆச்சாள்புரம்’ என்ற தலம் குறிப்பிடத்தகுந்தது. இத்தலம் திருஞானசம்பந்தப் பெருமான் வீடுபேறு பெற்ற தலமாகும். ஆச்சாள்புரம் அல்லது ‘நல்லூர்ப் பெருமணம்’ என்னும் திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை, ‘திருவெண்ணீற்று உமையம்மை’ அல்லது ‘விபூதி கல்யாணி’ என்று அழைக்கப்படுகிறாள். இந்த ஊர் சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் இடையில் மஹேந்திரபள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ளது.   

   சிவபெருமானின் திருமேனியில் பூத்த விபூதியை முதலில் அணிந்தவள் அன்னை ஆதிபராசக்தியே! அம்பிகையின் வடிவங்களில் ஒன்றாகவும் விபூதி வடிவம் இருக்கிறது. திருஞானசம்பந்தர் இதனைத் திருநீற்றுப் பதிகத்தில் பராவணம் (பரை – சிவசக்தி, வண்ணம் – வடிவம்) ஆவது நீறு என்று குறிப்பிடுகிறார்.

   சீர்காழியில் அவதரித்து, மூன்று வயதில் சிவபெருமான் அருள் பெற்று, உமையவளின் முலைப்பால் அருந்தி, உவமையில்லாக் கலைஞானத்துடன் உணர்வறியா மெய்ஞானமும் பெற்றவர் தவமுதல்வரான ஞானசம்பந்தர். அவர் தென்னகமெங்கும் பயணித்துத் தலங்கள்தோறும் சென்று பாமாலை சூட்டியும் அற்புதங்களை நிகழ்த்தியும் சைவ சமயத்தை நிலை நிறுத்தித் தழைக்கச் செய்தார். அவருக்குப் பதினாறாம் வயதில் தந்தை, தாயார் விருப்பப்படி திருமணம் செய்ய ஏற்பாடானது. ஆச்சாள்புரத்தில் வசித்துவந்த வேதியரின் மகளான சொக்கி என்பவரோடு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின்போது வேதியர்கள் திருமணத்தீயை மணமகள் வலம்வர வேண்டும் என்றனர்.

   அப்போது திருஞானசம்பந்தர் அந்தமில் பொருளான செந்தீ, அண்ணல் சிவபெருமானே என்று கூறி, கோயிலுக்குச் சென்று மணமகளோடு கோயிலை வலம் வந்தார். அப்போது தமக்கு மோட்சம் அருள வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார்.

   அதற்கு சிவபெருமான், “இப்போது இங்கே ஒரு ஜோதி தோன்றும். அதனுள் அனைவரும் செல்க” என்றார். கண நேரத்தில் அங்கே ஜோதி தோன்றியது. அதனுள் செல்ல வாயில் திறந்தது. திருஞானசம்பந்தர் திருமணத்துக்கு வந்த எல்லோரையும் அதனுள் செல்க என்றார். அப்போது அங்கு கூடியிருந்த எல்லோரும் தமது பாச வினைகள் நீங்கி மேன்மையடையும் பொருட்டு அன்னை பராசக்தி அனைவருக்கும் விபூதி வழங்கினாள். அதை அணிந்த அனைவரும் மேன்மை பெற்றனர். எல்லோரும் ஜோதியுள் சென்றபின் திருஞானசம்பந்தர் தம் மனைவியுடன் அந்த ஜோதியுள் புகுந்தார். அவர் உள்ளே சென்றதும் வாயில் மூடியது. கண நேரத்தில் அனைவரும் சிவலோகம் சென்றனர்.

  பல பிறவிகள் எடுத்தாலும் கழிக்க முடியாத வினைகளை நீக்கிப் பேரின்பம் அடையுமாறு திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வெண்ணீற்றை வழங்கியதால் அந்தத் தலத்து அம்பிகைக்கு வெண்ணீற்று உமையம்மை என்பது பெயராயிற்று. இப்போதும் அந்தப் பெயரிலேயே அவள் கோயில் கொண்டிருக்கிறாள். அவளை விபூதி கல்யாணி என்றும் அழைக்கின்றனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  nineteen − five =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »