01-04-2023 11:10 AM
More

    To Read it in other Indian languages…

    கொரோனா கஷ்ட காலத்தில்… மக்கள் பணத்தை வீணடிக்காதீங்க!

    krishnasamy dr
    krishnasamy dr

    மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சி!

    மீண்டும் வேண்டாம் தமிழகத்திற்கு மேலவை!!

    1986-இல் ரத்து செய்யப்பட்ட மேலவைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஸ்டாலின் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இது தமிழக மக்களுடைய வரிப் பணத்தை வீணடிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, எவ்விதத்திலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவாது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

    அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அபரிவிதமான விலை உயர்வால் பெரும் பொருளாதார சிக்கலில் மக்களும் தவிக்கிறார்கள்; தமிழ்நாடு அரசும் கடனில் சிக்கித் தவிப்பதாக இன்றைய அரசே கூறுகிறது. இந்த அசாதாரண சூழலிலிருந்து மீள்வதற்கே இன்னும் பல வருடங்கள் ஆகலாம். எனவே மாநில அரசு செலவினங்களை குறைத்துச் சிக்கனங்களை கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே 35 வருடங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு புத்துயிர் கொடுத்து அதை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் இன்றைய அரசு ஈடுபடுவதாகச் செய்திகள் வருவது வரவேற்கத் தகுந்தல்ல.

    எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1986-நவம்பர் மாதம் மேலவை கலைக்கப்பட்டது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் சொல்லப்படுவதும் உண்டு. எம்ஜிஆர் அவர்களுடன் பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு கலைத்துறையில் தொண்டாற்றியவர் என்ற அடிப்படையில் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர், எனவே தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவராலும், ஒருவர் நீதிமன்றம் சென்றதாலும் வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் அப்பொறுப்பேற்ப முடியாத நிலை ஏற்பட்டது. தான் நியமித்த ஒருவர் மேலவை உறுப்பினராகவில்லையே என்ற கோபத்தில் எம்ஜிஆர் அவர்கள் மேலவையையே கலைத்து விட்டார் என்ற கருத்துகளும் சொல்லப்படுவதுண்டு. அது அரசியல் வாதம் அதற்குள் அதிகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போது இந்த மேலவை தேவையா? இல்லையா? என்பதே மிக முக்கியமான கேள்வி.

    1857-இல் மீரட்டில் ஏற்பட்ட சிப்பாய் கலகம், வேலூர் சிறை போராட்டம் மற்றும் மங்கள் பாண்டே ஆகியோரின் போராட்டங்களால் இந்தியாவில் தொடர்ந்து ஆங்கிலேயரால் மட்டும் ஆள முடியாது என்ற நிலை உருவான பின், ஏதாவது ஒரு விதத்தில் ஆட்சி-அதிகாரத்தில் இந்தியர்களுக்கு பெயரளவிலாவது இடமளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1861-ல் உருவாக்கப்பட்டதே இந்த மேலவை (Madras legislative council) ஆகும். பெரும்பாலும் இந்த கவுன்சிலிலில் ஆங்கிலேயர் அல்லாத 6-8 பேர் மட்டுமே முதலில் நியமனம் செய்யப்பட்டார்கள். அது வெறும் ஆலோசனை அமைப்பாக மட்டுமே இருந்தது.

    1950-இல் இந்திய அரசியல் சாசனம் முழுமையாக அமலுக்கு வந்துவிட்ட நிலையில், 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஜனநாயக பூர்வமாக முதல் தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்படும் சட்டமன்ற சபைகளும் (legislative assembly), ஆட்சி அதிகாரங்களும் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் இப்போது 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதற்கு இணங்க தேர்தலில் எவரும் போட்டியிட முடியும் என்றிருந்தாலும், இன்றைய சூழலில் நல்லவர்களாக, வல்லவர்களாக இருந்தாலும் வெற்றி பெற முடியுமா? என்பது வேறு விஷயம்.

    சட்டமன்றங்கள் என்பதே மக்களுக்காக நல்ல சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வரும் இடமாகும். ஜனநாயகத்தில் எந்த ஒரு சட்டமும் கொண்டு வருவதற்கு முன்பாக அதன் நன்மை, தீமைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டு மாற்றுக் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், அவைகள் நல்லவைகள் எனும் பட்சத்தில் அவற்றையும் ஏற்றுச் சட்டமாக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். இது மாநில சட்டமன்றத்திற்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திற்கும் இது பொருந்தும். இந்திய அளவில் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைக் கொண்ட மக்களவையும் (Lok Sabha), ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் கொண்ட மாநிலங்களவையும் (Rajya Sabha ) கொண்ட இருமுனை ஆட்சி (bicameral) நடைமுறையில் உள்ளது. நாடாளுமன்ற மேலவை அல்லது மாநிலங்களவை மூத்தோரின் அவை (Elders House) எனவும் சொல்வார்கள். அதன் நோக்கம் நல்ல ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவதற்கான அவையாகும். ஆனால் அந்த சூழல்களும் தற்போது மாறிவிட்டன.

    மக்களவை, மேலவை என அனைத்தும் அரசியல் மேடைகளாக்கப்பட்டு ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதைப் பேச விடாமல் தடுப்பது; சபாநாயகரை முற்றுகையிடுவது; சபையை முடக்கிப் போடுவது என ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிப் போய் விட்டன. எனவே பொதுவாக மக்களவை, மாநிலங்களவைகளில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறுவது இல்லை. அதற்கான வாய்ப்புகளும் கொடுக்கப்படுவதில்லை; கொடுக்கப்பட்டாலும் அவை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இன்னும் பல நேரங்களில் பல மணி நேரம் பல நாட்கள் விவாதிக்கக் கூடிய சட்டங்களை 60 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாளின் கடைசி நேரத்தில் 30-40 மசோதாக்கள் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன.

    1996-2001 மற்றும் 2011-2016 ஆகிய காலகட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இது போன்ற சூழல்களை எல்லாம் எதிர் கொண்டுள்ளேன். ஒரு நீண்ட சட்டமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளின் கடைசி நேரத்தில் 20-30 சட்டங்கள் நிறைவேற்றப்படும். அது குறித்து ஒரு கருத்து கூட பதிவு செய்ய முடியாத சூழல் இருக்கும். இதுதான் இன்றைய மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் சட்டமன்ற நிலைமைகளாகும்.

    ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகளில் நல்ல கருத்துக்களைச் சொல்லக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், ஆளும் கட்சி என்ன நினைக்கிறதோ அதை அவர்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தட்டக்கூடிய மேசை ஒலிகளே அதிகமாக கேட்கும். ஒன்றை ஆதரிக்கவும் மேஜையைத் தட்டுவார்கள்; எதிர்க்கட்சியினர் எதிர்ப்பது வெளியே தெரியாமல் இருக்கவும் மேஜையைத் தட்டுவார்கள். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட அவைக்கே இந்த நிலை இருக்கும் பட்சத்தில், இன்னொரு அவையைக் கொண்டு வருவதற்காக முயற்சி ஏன் எடுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அந்த மேலவைக்கு என்று தனியாக எவ்வித அதிகாரங்களும் கிடையாது. செலவுகள் உண்டே தவிர, எவ்வித பலன்களும் கிடையாது.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் இந்த மேலவைகள் ஒழிக்கப்பட்டு விட்டன. கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா, பீகார், உத்திர பிரதேசம், மஹராஷ்ட்ரா சில போன்ற மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மீண்டும் மேலவை வரும் பட்சத்தில் உள்ளாட்சியில் ஏற்கனவே கணிசமான வெற்றியைப் பெற்று உள்ளதாலும், பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடியிருப்பதாலும், ஆசிரியர்கள் சங்கங்கள் வலுவாக இருப்பதாலும் இந்த தொகுதிகள் மூலம் தங்கள் கட்சியினரையும், ஆதரவாளர்களையும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் வாய்ப்பளித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கணிசமான இடங்களில் வெற்றி பெற வைத்துப் பரவலாகவும்; சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாத பகுதிகளிலும் தங்கள் கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்தக் கணக்குப் போடலாம். ஆனால், அது எப்போதுமே முழுமையாக கை கொடுக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

    மேலவை விசயத்தைக் கவனமாகக் கையாளவில்லை என்றால் இருமுனை வாளை (Double Edged Sword) போல பயன்படுத்தக்கூடியவரையே காயப்படுத்தும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதே போல தான் மேலவையில் 10-15 மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் வெற்றி பெற்று விட்டால் கூட, அவர்களின் குரலே அரசாங்கத்திற்கு எதிரான நிலையை உருவாக்கி விட முடியும். சட்டமன்றத்தில் (legislative assembly) அதிக பலம் இருந்தாலும், அதை மேலவைகளில் விவாத அளவிலேயே பலனற்று போய் விடச் செய்ய முடியும்.

    எனவே ஒரு பக்கம் மீண்டும் மீண்டும் தேர்தல், அதன்மூலம் செலவினங்கள்; மேலவை அமையும் பட்சத்தில் அவைகளுக்குண்டான உண்டான இரட்டிப்பு செலவினம் அரசுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட சாதாரண ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ரூபாய் 500, 1000-களை கொடுத்து விலைக்கு வாங்கும் வெற்றி பெறும் நிலையை அறிந்தவர்கள், இப்போது எப்படியெல்லாம் வெற்றி பெற முயற்சி செய்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பார் கவுன்சில் போன்ற மெத்தப் படித்தவர்களின் தேர்தலிலேயே பணமும், மதுவும் விளையாடுகிறது. படித்தோர் மற்றும் முதியோரின் தபால் வாக்குகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. வரும் காலங்களில் தேர்தலில் நியாயமான வழிகளில் எளிதாக எவரும் வெற்றி பெற்றுவிட முடியாத நிலையே உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒருவர் வெற்றி பெறக் குறைந்தது ரூ 20 கோடி வேண்டும்; மேலவைளுக்கு வெற்றிபெறக் குறைந்தது ரு 100 கோடி வேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்தியா சுதந்திரம் அடைய லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தார்களோ, அந்த லட்சியம் இப்போது நிறைவேறும் நிலையில் இல்லை. யார் யாரோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் இப்போது ஊழல் பெருச்சாளிகளிடத்திலும், சமூக விரோத சக்திகளிடத்திலும் சிக்கித் தவிக்கிறது. மக்களும் தங்களுடைய வாக்குகளின் நோக்கத்தை மறந்து அதை விலை பேசும் நிலைக்கு மாறி விட்ட சூழலில் தேர்தலில் பொய், புரட்டுகள் பேசி; ஏமாற்றி; வஞ்சகம் செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் சில முக்கிய அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்கள்.

    இன்றைய பொருளாதார சூழலில் தமிழகத்தில் மீண்டும் மேலவையை கொண்டு வந்து எதையும் சாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கோடான கோடி தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டும், அவர்கள் மீது பாறாங்கல் போன்ற சுமையாக அந்த மேலவை இருக்குமே தவிர, மேலான-மேன்மையான அவையாக இருக்காது. எனவே அரசியல் உள்நோக்கத்தோடும், புறவழியில் சிலருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் முயற்சியிலும் எடுக்கும் இந்த ஆபத்தான மேலவை முடிவைக் கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
    நிறுவனர் & தலைவர்,
    புதிய தமிழகம் கட்சி.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    6 + 16 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,645FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-