
பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 11, கண்ணன் – என் சேவகன் – விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கண்ணன் பாட்டில் வரும் ‘கண்ணன்-என் சேவகன்’ பாடலின் பொருளைக் காண்போம்.
நகரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைக்காத துன்பத்தை அனுபவித்திருப்பார்கள். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது. அதைப்பற்றி பாரதியார் இப்பாடலின் முதல் பத்தியில் பாடுகிறார். வேலயாட்கள் கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும் போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள்.
ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, ஏனடா நேற்று நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் போதும் எத்தனை பொய்கள் சொல்வர் தெரியுமா? பானைக்குள் இருந்து ஒரு தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார்,
ஒரு வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். வீட்டிற்கு வரும் உறவினர்களுடன் தனியாகச் சென்று பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம் செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான எள் இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள் வீட்டில் எள் இல்லை என்று பிரச்சாரம் செய்வார். இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை.
இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன், வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெறுக்குவேன், விளக்கேற்றி வைப்பேன், நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் தயக்கமில்லாமல் செய்வேன்; துணிமணிகளை துவைத்து, காயவைத்து, பத்திரப்படுத்தி வைப்பேன்,
வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள் ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல் காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன். இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும், குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டு நின்றான்.

“அது சரி உன் பெயர் என்ன? சொல்” என்று கேட்டதற்கு, “ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்” என்றான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும் பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் ‘சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்’ என்று மனம் மகிழ்ந்து “தம்பி! நல்லாத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்” என்று கேட்டதற்கு அவன் சொல்லுகிறான்.
“ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லையாயினும் எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும் காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு” என்றான். சரி சரி இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில் மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.
தொடர்ச்சியை நாளை காணலாம்.