
தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
“பகபந்த ப்ரயாச நியாய:” – கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போல…!
பக: – கொக்கு. பந்தனம் – பிடிப்பது.
இரு நண்பர்கள் ஒரு வெயற்கால மதிய நேரத்தில் ஒரு குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குளத்தில் ஒரு அழகான கொக்கு நீந்திக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த கொக்கைப் பிடித்துச் சென்று வீட்டில் வளர்க்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த கொக்கை எப்படி பிடிப்பது?
அவர்களில் ஒருவனுக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. அவன் ஒரு வெண்ணை வியாபாரி. இவ்வாறு கூறினான், “நான் வீட்டுக்குச் சென்று வெண்ணை உருண்டை எடுத்து வருகிறேன். அதனை கொக்கின் தலையில் வைத்தால் வெயிலில் வெண்ணை உருகி அது கொக்கின் முகத்தின் மேல் வழியும். அது கண்கள் மூடிக் கொள்ளும். அப்போது எளிதாகப் பிடித்து விடலாம்”.
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி நியூட்டனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கும் போது, அத்தனை புத்திசாலி மனிதர் இவ்விதம் எவ்வாறு சிந்தித்தார் என்று வியப்பு ஏற்படும். அவர் எப்போது பார்த்தாலும் தன் சோதனைச் சாலையில் ஆய்வு செய்து கொண்டிருப்பார். கதவு சத்தம் கேட்டது. வேலையை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார். அங்கே அவருடைய வளர்ப்புப் பூனை நின்றிருந்தது. அதனை உள்ளே வரவிட்டு மீண்டும் கதவைச் சாத்தினார். தன் பணியில் மூழ்கினார்.
மீண்டும் கதவைப் பிராண்டும் சத்தம் கேட்டது. மீண்டும் வேலையை விட்டு கதவைத் திறந்தார். இந்த முறை குட்டிப் பூனை நின்றிருந்தது. இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்தது. அதனால் எரிச்சலடைந்த விஞ்ஞான மேதை ஒரு உபாயத்தை யோசித்தார். தன் சோதனைச்சாலையின் நுழைவாயில் கதவின் கீழ்ப் பகுதியில் இரு துளைகள் செய்தார். ஒரு பெரிய துளை. ஒரு சிறிய துளை. இரண்டு துளைகள் எதற்கு என்று கேட்டபோது, அந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி, “ஒன்று தாய்ப் பூனைக்கு. இரண்டாவது குட்டிப் பூனைக்கு” என்றாராம்.
அடடா! ஒன்றன் பின் ஒன்றாக பெரிய துளை மூலமே தாயும் குட்டியும் நுழைய முடியும் அல்லவா? அத்தனை பெரிய புத்திசாலி விஞ்ஞானிக்கு இந்த சின்ன விஷயம் புரியவில்லையே என்று அனைவரும் வியந்தனர். இது ‘பக பந்த ப்ராயச’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.
பெரியவர்களுக்குக் கூட சிறிய விஷயங்கள் புரியாத சந்தர்பங்கள் இருக்கும். மூக்கே எங்கே என்றால் கையால் தலையைச் சுற்றிக் காட்டும் மேதாவி போன்றோர் அரசு அதிகாரிகளில் கூட தென்படுவதுண்டு. இவர்கள் பரமார்த்த குருவின் சீடர்கள் போன்ற அப்பாவிகள் அல்லர்.
நியாய சாஸ்திரத்தில் ஒரு புகழ் பெற்ற சுலோகம் உள்ளது.
சமமேதாத்விபரிதக்தி பக்ஷேபி த்ருஸ்யதே|
அஹோ! பத! மஹானேஷ – ப்ரமாதோ தீமதாபி||
பொருள்: எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் தவறு செய்வதுண்டு. பாவம்!





சிரிப்புதான் வருது. இப்படி நடப்பதுண்டு. பார்க்கிறோம்.